ரூ.4 கோடி வீடு பரிசு.. வயித்தெரிச்சல்.. ரீல்ஸ் போடுறாங்கன்னு அழுகுறாங்க – அமைச்சர் கீர்த்தனா பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

நான் 4 கோடிக்கு வீடு வாங்கிய பத்திரத்தை காட்டினால் அந்த வீட்டை அவர்களுக்கே அதை பரிசாக கொடுத்துவிடுகிறேன் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “தேர்தலின் போது என்னை ஒரு இடத்தில் கூட நின்று பிரச்சாரம் செய்ய விடவில்லை. அந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் நமக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர். அத்தனையும் தாண்டி நமக்கு உறுதுணையாக இருந்தது தவெக தொண்டர்களும் ஐடி விங்க் (IT Wing) நிர்வாகிகளும்தான். அவர்கள் இல்லை என்றால், இங்கு தவெக துண்டை போட்டுக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து, இன்று சிவகாசி மக்களின் மனதில் இடம் பிடித்திருக்க முடியாது. இதற்கு இங்கிருக்கும் அத்தனை பேருமே காரணம்.

ADVERTISEMENT

எல்லோரும் உழைத்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. தலைவர் விஜய்யை எப்படியாவது சட்டப்பேரவையில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும்; ‘முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்‘ என்று சொல்ல வேண்டும் என்ற ஒரே வார்த்தைக்காகத்தான் உழைத்தோம். அது நிறைவேறி 100 நாட்கள் ஆகிவிட்டன.

இப்போதும் அத்தனை விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. விமர்சனங்கள் இல்லாமல் எங்களை அமைதியாக மக்கள் சேவை செய்ய விடக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது.

ADVERTISEMENT

எல்லோரும் டிவியில் ‘கோலங்கள்’ நாடகம் பார்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் ஆட்டோ, கேப் களில் கூட மொபைல் போனை வைத்துக்கொண்டு சட்டசபையில் என்ன நடக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஜனநாயகத்தையும், அரசியலையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம், சிவகாசி மக்களுக்காக நான் என்ன செய்கிறேன் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இன்று முதல்வர் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்கிறார்.

இந்த நேரலை நடக்கக்கூடாது என்று எதிர்க்கட்சியினர் கதறி அழுகிறார்கள். ‘ஐயய்யோ, எதற்காக நேரலை போடுகிறீர்கள்? வார்த்தையை நீக்குகிறோம் என்று மட்டும்தானே சொல்கிறீர்கள்? ஆனால் அவர்கள் ரீல்ஸ் எடுத்து பயர் விடுகிறார்கள் என்று அழு அழு என்று அழுது புலம்புகிறார்கள்.

ADVERTISEMENT

ஏனென்றால், 2021-இல் அவர்களும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்கள்; ஆனால் இன்று வரை அதை நிறைவேற்றவே இல்லை. இன்று அவர்களின் முகத்திரையை நாம் கிழித்துக் காண்பிக்கிறோம் அல்லவா, அது அவர்களுக்குப் பயமாக இருக்கிறது. ‘ஐயய்யோ, மொத்த கட்சியையும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அழித்து விடுவார்களோ’ என்று பயப்படுகிறார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பேட்டி கொடுத்தவர்கள் எல்லாம், ‘இவர்கள் 2 சதவீதம், 3 சதவீதம் தான் வாக்கு வாங்குவார்கள். இங்கிருக்கும் ஒருவரே இவர்கள் சும்மா பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள். இங்கு ஒரு பால்கோவா அமைச்சர் இருந்தார்; அவருக்கு ‘தெரியாமல் இந்தச் சின்னப் பிள்ளைகளிடம் விளையாடிவிட்டோம்’ இன்று அவருக்குத் தெரிந்திருக்கும்,

இன்று தனி ஒரு கட்சியாக ஆட்சியைக் கைப்பற்றி, அவரை முதலமைச்சராக உட்கார வைத்து, ஆகஸ்ட் 15 அன்று அவர் கொடியேற்றிய போது… எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆர் ஐயாவிற்கு அடுத்து மக்கள் கண்ணீர் விட்டது அப்போதுதான்.

இன்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், சட்டசபையில் உட்கார்ந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘எப்படி இவர்கள் எல்லாம் வந்தார்கள்? ஒன்றுமே புரியவில்லையே’ என்று நினைக்கிறார்கள்.

அவர்களை பார்த்து நாம் ‘இவர்களுக்கு மக்கள் எப்படி இவ்வளவு நாள் ஓட்டு போட்டார்கள்?’ என்று நினைப்போம். அவர்களின் பண்ணையார் புத்தியும், குறுநில மன்னர் புத்தியும் போகவே இல்லை. ‘சாமானியர்கள் எல்லாம் எப்படி சட்டசபைக்குள் வந்தார்கள்?’ என்று இன்னும் அவர்களுக்குள்ளே வயித்தெரிச்சல் எரிந்துகொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம் பார்த்தால் பண்ணையார்களும் குறுநில மன்னர்களும்தான் அவ்வளவு பணத்தையும் வைத்துக்கொண்டு மக்களுக்கு வாரி வாரி இறைத்துக்கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் பணி என்று ஒன்றை அவர்கள் செய்ததே கிடையாது. இன்று நாம் செய்கிறோம். அதையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு என்ன செய்வது, இவர்களை எப்படி முடிப்பது என்றுதான் பார்க்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை… இவ்வளவு பெரிய தொண்டர் படையும், இங்கிருக்கும் மக்கள் படையும் நமக்கு ஆதரவாக நின்று கொண்டிருக்கிறது என்பது!

என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. இதற்கு எப்போது ஒரு மேடை கிடைக்கும் என்று நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு பெண்மணியாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா? ஏன், வந்தாள் கோட்-சூட் (Coat-Suit) போடக்கூடாதா? ஏன் நாங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசக்கூடாதா? அப்படித்தான் போடுவோம்!

ஏன், பண்ணையார்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் மட்டும்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதா கோட் போட வேண்டும் என்று? சாதாரண மக்களாகிய நாங்களும் டை போடுவோம், ஷூ போடுவோம்! அதைப்பார்த்துவிட்டு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ரீல்ஸ் போடுகிறார்கள், ரீல்ஸ் போடுகிறார்கள்… ரீல்ஸ் போட்டே ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்’ என்று புலம்பித் தவித்து, தினமும் என்னைப் பற்றி ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.”என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கினேன் என்கிறார்கள். 4 கோடி வீடு.. எனக்கே தெரியவில்லை.. யார் அதை வெளியிட்டார்களோ அவர்களுக்கு சொல்கிறேன். அந்த வீட்டின் பத்திரத்தை காட்டினால் அதை நான் அவர்களுக்கே பரிசாக தருகிறேன்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share