ADVERTISEMENT

ரோஹித் வெமுலாவிற்கு நடந்ததே எனக்கும் நடக்குது – அமைச்சர் வன்னி அரசு மீது மாணவர் பாரதிதாசன் பகீர் குற்றச்சாட்டு!

Published On:

| By Pandeeswari Gurusamy

அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ள விவகாரத்தில் மருத்துவர் பாரதிதாசன் வரலாற்றில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ அது இப்போதும் நடப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” நான் மிகவும் மனவேதனையுடன் இந்தப் பதிவைச் செய்கிறேன். இது கண்டிப்பாய் என் நலவிரும்பிகளைப் பாதிக்கும், சாரி சார்!

ADVERTISEMENT

சார், நான் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி வருகிறேன். அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டிற்கான நிதி எனக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், இந்த ஆண்டிற்கான நிதி வரவில்லை என்று நான் ஒரு பதிவு செய்திருந்தேன். அதைச் சட்டசபை வரை விவாதித்தார்கள். ஆனால், மதிப்பிற்குரிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக, நான் தேவையான சான்றுகளை அனுப்பிவிட்டேன் என்பதைத் தேதியுடன் குறிப்பிட்டு, அந்த மின்னஞ்சலையும் பொதுவெளியில் வெளியிட்டேன். சில ஆவணங்கள் ரகசியமானவை, அவற்றை வெளியே பகிரக் கூடாது என்ற விழிப்புணர்வு எனக்கு இருக்கிறது.

ADVERTISEMENT

சட்டசபையில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்ட பிறகு, எனக்கு அன்று இரவே ஒரு மின்னஞ்சல் அனுப்பினீர்கள். அனைத்து விவரங்களையும் அனுப்பச் சொன்னீர்கள்; நானும் அனுப்பினேன். ஆனால், இன்றுவரை நிதி வரவில்லை.

என்னை கல்லூரியிலிருந்து நீக்கப் போகிறார்கள். வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) எனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள். ஆனால், நிதி இல்லாததால் என்னால் அங்குச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த ஆறு மாதங்களாக எனது ஆய்வில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

ADVERTISEMENT

எனது ஆராய்ச்சிப் பணிக்காகவே நான் அந்த நிதியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் என்னை குறிப்பிட்டு இலக்கு வைத்து (Target), உங்களிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்.

இருப்பினும், எனது முந்தைய மின்னஞ்சலிலும் குறிப்பிட்டிருந்தேன்: எனது ஆய்விற்குரிய ‘நெறிமுறைக் குறியீடு’ (Ethics Code) உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்விற்கான அனைத்து விவரங்களையும் மின்னஞ்சலில் தெளிவுபடுத்தியிருந்தேன்.

ஆனால், நீங்கள் மீண்டும் முதல்லிருந்தே ஆரம்பிக்கிறீர்கள். ‘இந்த ஆராய்ச்சிக்காகத்தான் இந்தப் பொருட்களை வாங்கினீர்களா என்று எங்களுக்குச் சந்தேகம் உள்ளது’ எனக் கூறி மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளீர்கள்.

என்னுடைய ‘எத்திக்ஸ் கோட்’, திட்டத்தின் விவரங்கள் மற்றும் தலைப்பு எல்லாவற்றையும் அனுப்பிவிட்டேன்; அதிலேயே அனைத்து தகவல்களும் உள்ளன. இப்போது மீண்டும் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி, எனது நம்பகத்தன்மையையும் ஆராய்ச்சியையும் சீரழித்துவிட்டீர்கள். இங்குள்ள பேராசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டீர்கள், வெரி குட்!

நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். காலம் காலமாக நாங்கள் படிக்காமல் தான் இருந்தோம். எனது கிராமத்திலும் சரி, எனது குடும்பத்திலும் சரி, மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பிற்கு வந்துள்ள முதல் தலைமுறைப் பட்டதாரி நான் தான்.

‘நீ ஏன் படிக்கிறாய், படிக்காதே’ என்று கூற நினைத்தால், தயவுசெய்து அதை சமூக நலத்துறை அமைச்சரே நேரடியாகச் சொல்லிவிடுங்கள். ‘உனக்கு ஏன் ஆராய்ச்சி? நீ அடிமையாகத்தானே இருந்தாய், அப்படியே இரு’ என்று கூறிவிடுங்கள். தயவுசெய்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிடுங்கள். நான் வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா என்று பார்த்து, இந்தியாவிலோ அல்லது வேறு எங்கேனுமோ எனது கல்வியைத் தொடர முயற்சி செய்கிறேன். தயவுசெய்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். எனது உடல்/மனநிலை சரியில்லை.

இறுதியாக ஒரு விஷயம், வரலாற்றில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ, அன்று அந்த அமைச்சகங்கள் எவ்வாறு செயல்பட்டனவோ, இன்று இந்த அமைச்சகமும் அதேபோலத்தான் செயல்படுகிறது என்பதை நான் குற்றச்சாட்டாகவே வைக்கிறேன். இதுதான் உண்மை.

ஜெய் பீம்!” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் – அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share