மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் நவோதயா பள்ளிகள், மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
2017-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் இன்று டிசம்பர் 15-ந் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது (Case no. SLP(C) No. 33459/2017 State of Tamil Nadu v. Kumari Maha Sabha) . உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பில்,
- கிராமப்புற மாணவர்களுக்கு தரமான, இலவச, உறைவிடக் கல்வியை நவோதயா பள்ளிகள் வழங்குகின்றன.
- இப்பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்கும்
- உயர்வகுப்புகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
- இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது அல்ல என வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் ஜி.பிரியதர்ஷிணி, ராகுல் ஷ்யாம் பண்டாரி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேஎம் நடராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
தமிழ்நாடு அரசு தரப்பில்,
- நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன.
- இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும்.
- தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை மீறுகின்றன நவோதயா பள்ளிகள்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வது மற்றும் அதற்கான செலவுகள் மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்
என வாதிடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதங்களை முன்வைத்தார்.
மேலும், வில்சன் வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்தினா, தயவு செய்து தமிழ்நாட்டில் மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்றார். அதற்கு, தயவு செய்து தமிழகத்தில் அவ்வாறு நடப்பதாக சொல்லாதீர்கள்; நாட்டிலேயே அதிக அளவில் மாணவர்கள் பள்ளி சேர்க்கையை தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளும் பிறப்பித்த உத்தரவும்:
- இந்த விவகாரத்தை மொழிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்.
- கல்விச் சமத்துவம் மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான வேறுபாடுகளைத் தாண்டி ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும்.
- மத்திய அரசிடம் கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தலாமே?
- தமிழக அரசு அதிகாரிகளை மத்திய அரசிடம் பேச அனுப்பி வைக்கலாமே?
- எங்கள் மாநிலம் எங்கள் அரசு என தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள் இது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நாடு.
- தமிழ்நாடு இந்திய கூட்டாட்சியின் ஒரு அங்கம்.
- மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.
- நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும்.
நவோதயா பள்ளிகள் என்றால் என்ன?
- ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் என்பவை மத்திய அரசால் கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள்.
- 1986 ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் தொடங்கப்பட்டவை இந்தப் பள்ளிகள்.
- கிராமப்புறச் சிறார்களுக்கு, அவர்களது குடும்ப வருமானம் மற்றும் சமூக நிலை எத்தகையதாக இருப்பினும், தனியார் சிறப்புப் பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை இலவசமாக வழங்குகின்றன.
- மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தை நவோதயா பள்ளிகள் பின்பற்றுகின்றன.
- 6 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கையானது, மாவட்ட அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு (JNVST) மூலம் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வை மாணவர்கள் தாங்கள் படித்த தாய்மொழியிலேயே எழுதலாம்
- திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, புத்தகங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
- இந்தியை திணிப்பதால் தமிழ்நாடு நீண்டகாலமாக நவோதயா பள்ளிகளை எதிர்த்து வருகிறது.
