கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி இருப்போம் என திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சேது செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், “இடைத்தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர், தொகுதியில் உள்ள அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுத்தான் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். தட்டாஞ்சாவடியில் திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சேது, மூன்று முறை இத்தொகுதியில் களத்தில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். அவரைப் பொறுத்தவரை அம்மண்ணின் மைந்தராக இருந்து, அத்தொகுதி மக்களுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு சாதாரணத் தொண்டன்; 57 முறை தொகுதி மக்களுக்காகச் சிறை சென்ற தொண்டன். அவரைத்தான் எங்களது கழகத்தின் தலைவர் வேட்பாளராக நிற்க வைத்துள்ளார். எங்களுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது.
இன்று எப்படி இடைத்தேர்தல் வருகிறது? இடைத்தேர்தல் வருவதற்கு என்ன வாய்ப்புகள் இருந்தன? ஏன் இந்த இடைத்தேர்தல் வருகிறது? இப்படி வரலாமா? என்று கேள்விகளை நீதிமன்றம் தொடுத்துள்ளது. அதுபோல்தான் புதுச்சேரியிலும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டிய அவசியமே இல்லை. இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டியிட்டதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அதன் விளைவாகத்தான் இப்போது இந்தத் தேர்தல் வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அந்தத் தொகுதியில் உள்ளன. மக்களோடு மக்களாக இருந்து இந்த இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை எங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாக உள்ளது.”என்றார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணி இல்லாதது குறித்த கேள்விக்கு, “எங்களுக்கு இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமல் இருப்பதுதான் மிகவும் நல்லதாகப் போய்விட்டது. போன முறை கூட்டணியில் எங்களோடு இருந்துகொண்டே எங்களுக்கு எதிராகவும் வேலை செய்தார்கள். நாங்கள் 13 தொகுதிகளில் போட்டியிட்டோம்; அவர்கள் கிட்டத்தட்ட 16 தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால், ஒரே ஒரு தொகுதியில்தான் ஜெயித்தார்கள். நாங்கள் 13 தொகுதிகளில் நின்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். எங்கள் தலைவர் ஒரு 40 நிமிடம்தான் புதுச்சேரியில் ‘திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வருவேன்’ என்று பேசினார். அந்த வகையில் நாங்கள் மாபெரும் வெற்றியைத்தான் பெற்றுள்ளோம். ஆகவே, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் பாண்டிச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கும்.” என்றார்.
தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பது குறித்த கேள்விக்கு, “எது வந்தாலும் சரி, நாங்கள்தான் இங்கு மிகப்பெரிய கட்சி; மிகப்பெரிய இயக்கம். ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தையும் பணத்தையும் வைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று பார்க்கிறார்கள். புதுச்சேரி மக்கள் மிக மிகத் தெளிவானவர்கள்; அது எதுவும் இங்கு எடுபடாது. மக்கள் தொண்டை யார் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். சேது அந்த மண்ணின் மைந்தராக இருந்து செயல்படுபவர், அதனால் வெற்றி வாய்ப்பு இங்கு அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
