ADVERTISEMENT

யாரைத்தான் விட்டு வைத்தார்? பெரியாரின் ’இதழியல் போராட்டம்’ – ஆ.ராசா விரிவான பேச்சு- முழு உரை!

Published On:

| By Mathi

பெரியார் ஆ.ராசா

தந்தை பெரியாரின் இதழியல் பணிகளையும், அவரது நீண்டகால இதழியல் போராட்டத்தையும் பதிவு செய்யும் வகையில் பேராசிரியர் சுப்பிரமணியன் எழுதிய ‘இதழியல் களத்தில் பெரியார்’ நூல் அறிமுக விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது.

கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நூல் அறிமுக உரையாற்றினார். திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.

ADVERTISEMENT

அப்போது பெரியாரின் இதழியல் போராட்டம், அவர் நடத்திய பத்திரிகைகள், பல்வேறு இதழ்களுடன் ஏற்பட்ட கருத்தியல் மோதல்கள், அம்பேத்கருடனான சிந்தனைத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை முன்வைத்து ஆ.ராசா பேசியதாவது:

பெரியாருக்கு எத்தனையோ முகங்கள் இருந்தாலும் இதுவரை பலராலும் முழுமையாக அறியப்படாத ஒரு முகத்தை நம்முடைய பேராசிரியர் சுப்பிரமணி அவர்கள் இங்கே வழங்கியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

நான் காரை விட்டு இறங்கி பேராசிரியர் சுப.வீ. அவர்களோடு நடந்து வந்து கொண்டிருக்கிறபோது, அவரை (பேராசிரியர் சுப்பிரமணி) மேடையிலே அழைத்து, அவருக்கு ஒரு சால்வை அணிவித்து, அவர் செய்திருக்கிற இந்த பிரம்மாண்டமான பணிக்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்று சொன்னேன். அவரால் வர இயலாத சூழ்நிலை என்று சொன்னார்கள்.

உள்ளபடியே அவர் தொகுத்திருக்கிற இந்த மூன்று புத்தகங்களும் பெரிய, நீண்ட நெடிய பெரியாருடைய இதழியல் போராட்டத்தை, அவருடைய எழுத்துக்களை வாசிப்பதன் வாயிலாக, இந்த மண்ணில் ஆரிய–திராவிடப் போர் எந்தெந்தத் தளங்களிலெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.

ADVERTISEMENT

பெரியார் சாதியை எதிர்த்துப் போராடியிருக்கிறார். மதத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார். பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார். தமிழ் இசைக்காகப் போராடியிருக்கிறார். எந்தெந்தத் தளங்களிலெல்லாம் தமிழன் தாழ்ந்து கிடக்கிறானோ, அழுத்தப்படுகிறானோ, அந்தந்தத் தளங்களிலெல்லாம் நின்று பேசியிருக்கிறார்.

ஆனால், ‘குடி அரசு’ இதழிலிருந்து சில பத்திகளை நாம் அவ்வப்போது படித்துப் பேசுவோம். ‘விடுதலை’யிலே பேசுவோம். ‘பகுத்தறிவு’லே பேசுவோம். ‘புரட்சி’யிலே பேசுவோம். ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ பேசுவோம். ‘ரிவோல்ட்’ பேசுவோம்.

இத்தனையும் பேசியிருந்தாலும்கூட, பெரியார் காலவரிசைப்படி அந்தந்த காலங்களில் நம்முடைய எதிரிகள் நிகழ்த்திய வினை என்ன? அதற்குப் பெரியாருடைய எதிர்வினை என்ன? அந்த வினை-எதிர்வினையால் இந்த மண்ணுக்கு, இந்த மக்களுக்கு, இந்த இனத்திற்கு, இந்த மொழிக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? அல்லது நன்மை பயக்காமல் போனதற்கான காரணம் என்ன? என்பதை அறியக்கூடிய அரிய தரவுகளாக இந்த நூல் இருக்கிறது.

அதற்காக முதலில் நூலாசிரியருக்கு இங்கிருந்தே என்னுடைய வணக்கத்தையும் பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல் அச்சிடும் செலவை ஏற்கிறோம்

இந்த அரிய முயற்சியை கருஞ்சட்டை பதிப்பகம் கையில் எடுத்து பெரிய செலவினை இங்கே செய்திருக்கிறார்கள். நம்முடைய விழாவினுடைய தலைவர் என்னைப் பார்த்து, “இதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

நான் உடனடியாக நம்முடைய பெல் ராஜனிடம் சொன்னேன். “இதற்கு அச்சுச் செலவு எவ்வளவோ அத்தனையும் நாங்கள் தந்துவிடுகிறோம்” என்று சொல்லியிருக்கிறேன்.

இரண்டு லட்சமோ, இரண்டரை லட்சமோ ஆக இருக்காது என்று சொன்னார்கள். “அதைச் சொல்லுங்கள்; நாங்கள் தந்துவிடுகிறோம்” என்று சொல்கிறேன்.

இது ஏதோ இந்தச் செலவினத்தை ஏற்றுக்கொள்வதால் உங்களுக்கோ, எங்களுக்கோ, பெல் ராஜனுக்கோ அல்லது கருஞ்சட்டை பதிப்பகத்திற்கோ பெருமை வரவேண்டும் என்பதற்காக அல்ல. மிக மோசமான, ஆபத்தான சூழலில்-ஆபத்தை அறியாத ஓர் இடத்தில்- இந்தியா இருக்கிறது; தமிழ்நாடு இருக்கிறது; தமிழ் இனம் இருக்கிறது.

டெல்லியில் நடக்கும் கொடுமைகள்..

தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிற பேராசிரியர் சுப.வீ. அவர்களுக்கே எவ்வளவு புழுக்கம் என்றால், டெல்லியில் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்துகொண்டு இதைவிடக் கொடுமைகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எங்களுக்கு எவ்வளவு மனம் புண்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒருவேளை டெல்லியிலே ஏற்பட்ட காயங்களையெல்லாம் இங்கே மருந்து பூசிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் ஒன்றைப் பேசி, அதிலே ஒரு பட்டிமன்றத்தை ராஜன் அவர்களும் சுப.வீ. அவர்களும் நடத்தி, அதிலே ஒரு தீர்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். விந்தை என்னவென்றால், வாதம் முடிந்தது. வாதத்தை திரும்பப் பெற்றுக்கொண்டதற்குப் பிறகும் தீர்ப்பு வழங்குகின்ற விந்தையை இந்த மேடையிலே பார்க்கிறேன். நல்லது. ஆரோக்கியமான விவாதம்தான்.

யாரைத்தான் பெரியார் விட்டுவைத்தார்?

பெரியாரைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால், அவரே சொல்லுகிறார். ஒரு மனிதனுக்கு இத்தனை தளங்களில் இத்தனை அறிவுப்பூர்வமான விழுமியங்களைப் பெற்றது மட்டுமல்ல; அதை இந்தச் சமூகத்திற்கு எழுத்துக்களால், பேச்சுக்களால், நடவடிக்கைகளால் சொல்லுகின்ற ஆற்றலைப் பெற்று, அப்படிச் சொல்லுகின்ற எல்லாப் பணிகளும் நிறைவேறாவிட்டாலும்கூட, பெரும்பான்மையான பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிற ஒரு மாபெரும் தலைவர்.

அவர் (பெரியார்) சொல்கிறார்:

“நான் எதை எதையெல்லாம் எதிர்த்திருக்கிறேன்? என்னளவுக்கு எனக்குத் தெரிந்து உலகத்தில் இத்தனை எதிரிகளைச் சந்தித்த வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு சொல்கிறார்..

அரசியல் இயக்கங்களை எதிர்த்திருக்கிறேன்; அநேகமாக எல்லா அரசியல் தலைவர்களையும் திட்டியிருக்கிறேன்; 3) மதத்தைத் தாக்கியிருக்கிறேன்.. மதத் தலைவர்களை விட்டுவைத்ததே இல்லை; கடவுளை எதிர்த்திருக்கிறேன். வேதத்தை எதிர்த்திருக்கிறேன். மதச் சடங்குகளை எதிர்த்திருக்கிறேன்; குருக்கள், கோவில், சாஸ்திரம், புராணம், பார்ப்பனியம், சாதி, அரசாங்கம், உத்தியோகம், நீதிமன்றம், நீதிமன்ற நடுவர், ஆட்சிக்கு உதவும் அலுவலர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை, தேர்தல், கல்வி, சுயராஜ்ஜியம், காங்கிரஸில் தன்னைப் போன்று வேலை செய்த உற்ற நண்பர்கள்.. இவ்வளவு பேரையும் வாழ்நாளில் நான் எதிர்த்திருக்கிறேன்.

எதிர்த்தவர்கள் எல்லாம் ஒன்று, என்னிடத்திலே தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்; அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் என்னிடமிருந்து ஓடியவர்கள்”- என்று பெரியார் எழுதுகிறார் என்றால், இப்படியொரு தலைவரை தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே பார்க்க முடியுமா என்கிற ஐயம் எழுகிறது.

அம்பேத்கரை ஏன் ஜீரணித்துக் கொள்கிறார்கள்?

அம்பேத்கர் அவர்களைப் பற்றிப் பேராசிரியர் சுப.வீ. சொன்னார்.

அவர்கள் அடிக்கடி அம்பேத்கரை இழுத்துக்கொள்வதற்குக் காரணம், அவர் புத்த மதத்தைத் தழுவினார். அதில் ஒரு வரலாற்றுத் திரிப்பு. ஏனென்றால் புத்தரை பத்து அவதாரங்களில் ஒருவராக ஆக்கிவிட்டார்கள். அதுதான் கொடுமை.

நான் ஏற்கனவே ஒரு மேடையில் சொன்னேன். அம்பேத்கரை அதிகமாக வாசித்திருக்கிறேன். அம்பேத்கர் எத்தனை புத்தகங்களைப் படித்து, ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, அடிக்குறிப்புகள் காட்டி, கடைசியாக என்ன தரவுகளைக் கொண்டுவந்து நிறுவுகிறாரோ, அது அவருக்கு அவசியப்பட்டது.

ஏனென்றால் அவர் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு சாதாரண இடத்திலிருந்து வந்து, அவருக்குப் பின்னால் பெரியார் மாதிரி எந்த ஓர் institution-உம் இல்லை; நிறுவனம் இல்லை. நிறுவனங்கள்தான் பாதுகாப்பு. ஒரு தனி மனிதன் எதிர்த்துப் பேசினால் அடித்துவிட்டுப் போய்விடுவான். ஆனால் எனக்குப் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் இருந்தால் அந்த நிறுவனத்துக்குப் பயப்படுவான்.

இன்னும் சொல்லப்போனால், நான் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அம்பேத்கர் உழைத்த உழைப்பிற்கு, அவர் படித்த படிப்பிற்கு, அந்தப் படிப்பினால் விளைந்த விளைச்சலுக்கு, அம்பேத்கர் வடமாநிலங்களில் முழுமையாகப் போய்ச் சேராததற்குக் காரணம்.. தந்தை பெரியாரைப் போல அவர் ஒரு மிகப்பெரிய இயக்கத்தைக் கட்டமைக்க இயலவில்லை; சமூகம் இடம் தரவில்லை; பொருளாதாரம் இடம் தரவில்லை.

பெரியார் அதைக் கட்டியமைத்தார். அதனுடைய விளைவு, அவருடைய கொள்கைகள் இன்றைக்கும் போய்ச் சேர்ந்துகொண்டிருக்கின்றன. அது வாதப் பொருளாக ஆகிறது.

அதனால்தான் நான் சொன்னேன்.. அம்பேத்கரைக்கூட இவர்கள் ஜீரணித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் மதம் மாறினால், அந்த மதம் இந்து மதத்துக்குள்ளேயே ஒரு மதமாக ஆகிவிட்டது.

“யார் இந்து?” – பெரியார் கேட்ட கேள்வி

அதனால்தான் ரொம்பத் தெளிவாக, “யார் இந்து?” என்று கேட்டால் பெரியார் சொன்னார். “ஆடு எது?” என்று கேட்டால், “கோழி எது இல்லையோ, கொக்கு எது இல்லையோ, யானை எது இல்லையோ…” என்றெல்லாம் சொன்னால் எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனமோ, அதுமாதிரி “இந்து யார்?” என்று கேட்டால், அவன் யார் என்று சொல்லு.

யாரெல்லாம் இஸ்லாமியன் இல்லையோ, யாரெல்லாம் கிறிஸ்தவன் அல்லவோ, யாரெல்லாம் சீக்கியன் அல்லவோ, யாரெல்லாம் அவன் இல்லையோ, இவன் இல்லையோ அவனெல்லாம் இந்து.

இந்தப் பைத்தியக்காரக் கணக்குக்குள்ளேதான் அம்பேத்கரைக் கொண்டுவந்து பத்திரமாக வைத்தார்கள். அவர் இந்து மதத்திற்குள் இருக்கிற ஒரு பிரிவான பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் எழுதியிருக்கிற ‘தீண்டாமை எப்படி ஏற்பட்டது?’ என்பதற்கு ஒரு மிகப்பெரிய ஆய்வு எழுதியிருக்கிறார்.

ஆரிய சிந்தனை இன்னும் தனியாகத்தான் இயங்குகிறது

நீங்கள் ஐயா பேசும்போது சொன்னீர்கள், ஆரியர்–திராவிடர் கலப்பு இருக்கிறது. எல்லா ரத்தமும் கலந்து போய்விட்டது. ஆனால் ஆரிய சிந்தனை, ஆரியக் கருத்தியல் இன்னும் தனியாகத்தான் இயங்குகிறது. அவர்கள் திராவிடக் கருத்தியலை ஏற்று கொள்வதில்லை.

பெண் சமம் என்று சொன்னால், சாதி இல்லை என்று சொன்னால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்னால் அது திராவிடம். இதற்கு எதிரான தளத்தில் இயங்குவது ஆரியம். இது இன்னும் அப்படித்தான் இருக்கிறது.

அப்படின்னு சொல்லிட்டு ஒன்று சொல்கிறார். வாதத்திற்காக ரத்தக் கலப்பு இல்லாமல் இருக்கும் என்று சொன்னால், அது பஞ்சமர்களும் ஆதிதிராவிடர்களும்தான் இருப்பார்கள். அதை அம்பேத்கரிடம் நீங்கள் பொருத்திப் பாருங்கள்.

பஞ்சமர்கள் ஏன் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள்?

பஞ்சமர்கள் யார்? தீண்டத்தகாதவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்று ஒரு பெரிய நூல்.

‘Who Were the Shudras?’ சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன் 4-வது வர்ணமாக மாற்றப்பட்டார்கள்? இந்த 2 புத்தகங்களிலும், ஏன் ஆதிதிராவிடர்கள் பஞ்சமராக ஆக்கப்பட்டார்கள், ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள் என்று ஓர் ஆய்வு இருக்கிறது. பெளத்தம் வேள்வி மதம்.. வேத மதம்.. இன்றைக்கு இருக்கிற இந்து மதம் அல்ல; அன்றைக்கு இருக்கிற வேத மதம். இங்கே செழித்திருந்தது பௌத்தம்தான்.

தேசியக் கொடியில் அசோகச் சக்கரம்

இந்தியாவுக்கு தேசியக் கொடி எது, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது காந்தி, “நான் கண்டுபிடித்த ராட்டை, நான் சுற்றிய ராட்டைதான் இருக்க வேண்டும்; இந்தக் காங்கிரஸ் கொடியையே அப்படியே தேசியக் கொடியாக அறிவியுங்கள்” என்றார்.

நேருவுக்கு அது பிடிக்கவில்லை. அவர் தொழில் புரட்சியைப் பார்த்தவர்; ரஷ்யாவுக்குப் போய்விட்டு வந்தவர். என்னதான் தனக்குக் குருவாக இருந்தாலும் காந்தி பிற்போக்காக இருக்கிறாரே.. நம்மால் கேட்க முடியாதே என்று அம்பேத்கரை கூப்பிட்டுக் கொண்டார்.

அப்போது நேரு, “இந்த ராட்டை இன்னும் 10 வருடத்தில் இருக்காது. எல்லாம் industry ஆகிக்கொண்டிருக்கிறது. என் பெண்ணிடம் போய், “மாட்டுவண்டி வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டால், “லூசா?” என்று கேட்கும்.. அதுமாதிரி.

அப்போது அம்பேத்கரிடம் போய் என்ன செய்யலாம் என்று கேட்டவுடன், “ரொம்ப simple. அதே சிவப்பு, வெள்ளை, பச்சையை வைத்துக்கொள்ளுங்கள். நடுவில் அசோக சக்கரத்தை வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். ஏனென்றால் அசோகர் காலம்தான் பௌத்தத்திற்குக் கீழ், சாதியற்ற, மதமற்ற, பெண்களுக்கு உரிமை கொடுக்கின்ற முழுமையான பௌத்தக் கொள்கையின் கீழ் வந்த ஒரு குடியரசாக இருந்தது. அதற்கு பிறகுதான் வைத்தனர்.

தேசியக் கொடி பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். அதில்தான் நேரு சொல்லுகிறார்: இந்த அசோகச் சக்கரம் எதைக் குறிக்கிறது என்றால், இந்தச் சமுதாயம் , சனாதனம் உட்பட இப்போது இருக்கிற சாதி சார்ந்த சமுதாயமாக இருக்கக்கூடாது. அசோகச் சக்கரம் சுற்றி ஓடும். அது எதை நோக்கி? சமத்துவத்தை நோக்கி. அதற்காக இந்த அசோகச் சக்கரத்தை வைக்கிறோம்.

இப்படி எத்தனையோ விவாதங்கள். அதில் ஒரு விவாதம்தான் பெரியார் சொல்கிறார்: ஒருவேளை ரத்தக் கலப்பு இல்லாமல் இருக்குமானால், அது இந்தச் சமுதாயத்தில் இருக்கிற பஞ்சமர்களிடம்தான். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று இத்தனை தீட்டு இருக்கும்போது எப்படி ரத்தக் கலப்புக்கு வாய்ப்பு இருக்கும்?

பௌத்தம் – வேத மதம்: 400 ஆண்டுகால மோதல்

அம்பேத்கர் சொல்லுகிறார், “எப்படி சேரிகள் வந்தன? ஏன் ஆதிதிராவிடர்கள் வெளியே வைக்கப்பட்டார்கள்?” என்றால் பௌத்தத்திற்கும் வேத மதத்திற்கும் மிகப்பெரிய மோதல், ஒரு 400 ஆண்டுகால மோதல் நடந்தது. கி.மு. 200-லிருந்து கி.பி. 200-க்குள் அப்படி மோதல் நடந்தபோது, வேத மதத்தை சரி வேறு வழியில்லை என்று ஏற்றுக்கொண்டார்கள். அரசர்களால், சிற்றரசர்களால், வேத விற்பன்னர்களால் எல்லோரும் ஏற்றுக்கொண்டு, “இனிமேல் உங்களோடு வந்துவிடுகிறோம்” என்று போனவர்கள் எல்லாம் வர்ணத்திற்குள் வந்துவிட்டார்கள்.

பெரியார்தாசன் கிண்டலாகச் சொல்லுவார்: “எல்லாம் வரிசையில் நின்று கேட்டோம். எங்களை ஒத்துக்கொள்கிறாயா என்று அவன் கேட்டான். ஒத்துக்கொள்கிறேன் சாமி என்றால், நீ போ முதலியார். அடுத்தவன் வந்தான்.. எனக்கு பாதி உடன்பாடு. சரி, போ நீ செட்டியார்…” என்று.

இப்படி இந்தச் சாதி முறைகளை, வர்ணத்தை எல்லாம் ஒப்புக்கொண்டவர்கள் ஊருக்குள்ளே வைக்கப்பட்டார்கள். “எங்களால் முடியாது. பௌத்தம்தான் எங்கள் கொள்கை. உங்களுடைய கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று யாரெல்லாம் எதிர்த்துப் புரட்சி செய்தார்களோ அவர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள். அவர்கள்தான் Untouchables.

அம்பேத்கரின் ஆய்வும் பெரியாரின் பட்டறிவும்

அம்பேத்கர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு ஆயிரம் மேற்கோள்கள். இந்த 400 ஆண்டுகளில் என்ன நடந்தது? யார் யாரெல்லாம் என்ன சொல்கிறார்கள்? சீன யாத்திரிகர்கள் இருவருடைய யாத்திரைக் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார்.

யுவான் சுவாங் வருகிறார். யுவான் சுவாங் வருகிறபோது, கொலை, களவு, காமம், குடி – இந்த நான்கு தவறையும் செய்தால் வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியே வைக்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்தால் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள்- கற்பழிப்பு, வன்முறை, திருட்டு, போதையில் தவறு, கொலை- அவனெல்லாம் வெளியே.

அந்த நிலைமை மாறுகிறது.. பாஹியான் வருகிறபோது இந்தப் 10 பேர் ஆயிரம் பேராக மாறுகிறார்கள். எப்படி ஆயிரம் பேர் தப்பு பண்ணியிருப்பார்கள்? “நாங்கள் ஒன்றும் தப்பு பண்ணவில்லை. அந்த மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை வெளியே தள்ளிவிட்டார்கள்” என்று சொன்னார்கள் என்று பாஹியான் எழுதியிருக்கிறார்.

அந்த இரண்டு குறிப்பையும் வைத்து, இந்த இரு காலங்களுக்கிடையில் ஒரு 300–400 ஆண்டுகளில் இந்த மதத்தை ஒப்புக்கொள்ளாமல், மூடநம்பிக்கையை ஒப்புக்கொள்ளாமல், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டவர்கள்தான் ஆதிதிராவிடர்கள் என்கிறார் அம்பேத்கர்.

அந்த ஆய்வு சரியா, தப்பா? அதை எல்லோரும் ஒத்துக்கொண்டார்களா? அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டுமா? Still it is open.

ஆனால் ஒரு தலைவர் இத்தனை ஆய்வுகளையும் செய்து, தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே போனதற்கான காரணம் என்று ஒரு புத்தகம் எழுதுகிறார்.

போகிற போக்கில் பெரியார் சொல்கிறார்: “ஆமாடா, எல்லாம் கலந்து போச்சு. கலக்காமல் எல்லாம் இருக்க முடியாதுடா. ஒருவேளை கலக்காமல் இருந்தால் ஒரே ஒருத்தன்தான் இருக்கான்; ஊருக்கு வெளியில இருக்கான். அவன்தான்” என்று பெரியார் சொல்கிறார்.. இரண்டு சிந்தனையாளர்கள். ஒருவர் மிகப்பெரிய படிப்பாளி. இன்னொருவர் பட்டறிவாளர். ஆனால் இரண்டு பேரும் ஒரே புள்ளியில் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால் அதுதான் நமக்கு இருக்கிற பெருமை.

ரூசோ முதல் மாக்கியவெல்லி வரை..

பெரியாருடைய இவ்வளவு இதழியல் எழுத்துக்களைப் பார்க்கிறோம். உலக வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் இந்தியா நீங்கலாக இரண்டு பெரிய தத்துவப் புரட்சிகளை ஏற்படுத்தியதாக சொல்வார்கள். ரூசோவுடைய ‘Social Contract’ – வாழ்க்கை ஒப்பந்தம். அந்தப் புத்தகம் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டது; எரிக்கப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் வந்தபோது அதை எரித்தார்கள்.

ஆனால் ரஷ்ய புரட்சிக்கு பிறகு அந்த புத்தகத்தை கொண்டுவந்து எந்த இடத்திலே அவர் சிறைபட்டாரோ அந்த சிறைச்சாலையை உடைத்து அந்த புத்தகத்தை அங்கே வைத்து அவருடைய கல்லறை தோட்டத்திலே வைத்து வணங்கினார்கள்.

அந்த ‘Social Contract’ என்கிற எழுத்து, அந்தத் தேசத்தினுடைய பல்வேறு இதழ்களிலிருந்து, எப்படி எல்லாம் அந்தச் சமூகம் புராதனத்திலிருந்து வந்து புரட்சியை வென்றெடுப்பதற்குக் காரணமாக இருந்தது என்பதற்கு ஒரு புத்தகம்.

இதற்கு நேர் எதிரான புத்தகம் 16-ஆம் நூற்றாண்டில் மாக்கியவெல்லியுடைய ‘Prince’.

‘Prince’ என்ன சொன்னது? இன்றைக்கு பாஜக கண்டுபிடிக்கிறதுதான். யாரிடம் பலம் இருக்கிறதோ பவர் இருக்கிறதோ அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேவைகளுக்கு சட்டங்கள் கிடையாது. எனக்கு இது தேவை.. அதை அடைவதற்கான வழிகளைப் பற்றிய கவலை கிடையாது. எனக்கு இது வேண்டும் என முடிவு செய்துவிட்டால் என்ன வேண்டுமானாலும்.. கொலை செய்யலாம்.. கொள்ளை அடிக்கலாம்.. இது மாக்கியவெல்லின் The Prince. தேவைகளுக்கு சட்டம் கிடையாது.. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

ஆனால் நம்முடைய தத்துவம் அப்படி இல்லை. “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.” இதுதான் நம்முடைய தத்துவம்.

வெளிநாடுகளில் இரண்டு தத்துவங்கள் 16-ஆம் நூற்றாண்டிலும் 18-ஆம் நூற்றாண்டிலும் தோன்றியதற்கு எத்தனையோ இதழ்களைச் சான்றுகளாகக் காட்டுகிறார்கள்.

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு

ஆனால் இந்த மண்ணில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடந்த மிகப்பெரும் போருக்கு, அந்தப் போரினுடைய அடையாளங்களுக்கு, சரித்திரத்தில் எழுதிவிட்டுப் போகலாம்.. இந்த நூற்றாண்டில் இது நடந்தது; இந்த ஆண்டு பெரியார் இதைச் செய்தார் என்று.

ஆனால் எப்படிப்பட்ட ஏவுகணைகள் இந்த இயக்கத்தின் மீது, இந்த இயக்கம் எடுத்துவைத்த கொள்கைகளின் மீது பிறரால் ஏவப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாம் காலவரிசைப்படி தலைப்பிலேயே “தினமணி ஊளையிடுகிறது”, “தினமணி ஒப்பாரி வைக்கிறது”, “மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு சக்கரத்தைச் சுழற்றுகிறார்” என்று.

யார் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு? ‘தி இந்து’. ‘இந்து’வுக்கு இதோ “மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு சக்கரத்தைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்” என்று எழுதுகிறார்.

இப்படித்தான் ஒரு மனிதனால் தொடர்ந்து எழுத முடியுமா? இப்படி இத்தனை கூறுகளைக் கொண்டிருக்கின்ற ஒரு இதழியல் துறையில் ஒரு மனிதனால் இயங்க முடிந்திருக்கிறது, வெற்றி காண முடிந்திருக்கிறது என்றால் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

‘ஆரிய தர்மம்’ எதிரே பெரியாரின் ஏவுகணைகள்

நூலாசிரியருக்கு இன்னொரு இடத்தில் நான் சிறப்பு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் எதிர் தளங்களில் எத்தனை பத்திரிகைகள் இயங்கின? நம்முடைய தளத்தில் எத்தனை பத்திரிகைகள் இயங்கின?

அதில் ஆரம்பத்திலிருந்து ‘ஆரிய தர்மம்’ ஏடு. அந்த ‘ஆரிய தர்மம்’ ஏடுதான் பிராமணர்களுக்கு, வைதீகத்திற்கு, மதத்திற்கு என்னென்ன செய்திருக்கிறது என்பதைத் தன்னுடைய முகவுரையிலேயே எழுதுகிறார்.

ஆலயப் பிரவேசம், உணவு விடுதிகளில் சூத்திரன்-பிராமணன், பால்ய விவாகம், விதவைத் திருமணம்.. இத்தனையிலும் தொடர்ந்து வைதீக நிலைப்பாட்டை ஆதரித்த ஓர் ஏடு ‘ஆரிய தர்மம்’. இந்த ஒரே ஓர் ‘ஆரிய தர்மம்’ ஏடு ஏறத்தாழ 50 ஆண்டுகள் இயங்கியிருக்கிறது.

இந்த ஒரே ஓர் ‘ஆரிய தர்மம்’ ஏட்டுக்கு அங்கே power.. ரொம்ப powerful.

இதை எதிர்ப்பதற்குப் பெரியார் விட்ட ஏவுகணைகள் எத்தனை என்பதைப் பாருங்கள்: ‘குடிஅரசு’ 1925, ‘Revolt’ 1928, ‘புரட்சி 1931’, ‘விடுதலை 1935’, ‘உண்மை 1970’, ‘Modern Rationalist’… இந்த ஒரே ஒரு கெட்ட கிரகத்தை அழிப்பதற்குப் பெரியார் இத்தனை ஏவுகணைகளை விட்டு அடித்து நொறுக்கியிருக்கிறார்.

அதேபோல 1882 முதல் 1888 வரை ‘தத்துவ விவேசினி’ என்கிற ஒரு மிகப்பெரிய இதழ். இதையெல்லாம் இங்கே கொண்டு வந்திருக்கிறார்.

2-ம் உலகப்போர்: காந்தியிடம் அம்பேத்கர் கேட்ட கேள்வி

2-ம் உலகப்போரில் இந்தியச் சிப்பாய்களை 1939-லிருந்து அனுப்புகிறார்கள். இந்தியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டுகொண்டிருக்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமர். அவருடைய ஆளுகையின் கீழ் இந்தியா இருக்கிறது. ஹிட்லரை எதிர்க்க வேண்டும்.

ஹிட்லரை எதிர்ப்பதற்கு இந்தியாவில் இருக்கிற நம்முடைய ராணுவத்தை, நம்முடைய சகோதரர்களை அனுப்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்டுகொண்டிருக்கிறார்கள். Military-க்கு order போட்டால் போக வேண்டும்.

காந்தி இதை எதிர்க்கிறார். “2-ம் உலகப்போரில் ஹிட்லரை வெல்வதற்கு நீங்கள் ஏன் எங்கள் ஆட்களை அனுப்புகிறீர்கள்?” என்று காங்கிரஸ் எதிர்க்கிறது. காந்தி எதிர்க்கிறார்.

அப்போது, அதை ஆதரித்து விளக்கம் தந்த 2 பேர் பெரியார், எம்.என். ராய் என்று. ஏதோ ஒரு காரணத்தினால் அந்த இடத்திலே அம்பேத்கர் பெயர் விடுபட்டிருக்கிறது. ஒரு நல்ல கேள்வி அம்பேத்கர் கேட்டார். காந்தி சொன்னார், ”நீ அடையப்போகிற வெற்றிக்காக ஏன் எங்கள் சகோதரனை உங்கள் போருக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்று.

காந்தி கேட்டார், “இந்தப் போருக்குப் பிறகு எங்களுக்கு நீங்கள் தரப்போவது என்ன? எங்களுடைய சிப்பாய்களைக் கொண்டு ஹிட்லரை வீழ்த்தப் போகிறீர்கள். ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் எங்களுக்கு என்ன நன்மை பயக்கப் போகிறது? ஏன் என் சகோதரனை ரத்தம் இழக்கச் செய்கிறாய்?” என்று..

சுதந்திரம் கிடைத்தால் எங்களுக்கு என்ன?

அம்பேத்கர் காந்தியைத் திரும்பக் கேட்டார்.. “ஐயா, இவ்வளவு பேரையும் அனுப்பி ஹிட்லரைத் தோற்கடித்த பிறகு உனக்கு என்ன என்று கேட்கிறாயே; இப்போது சுதந்திரப் போராட்டத்திற்கு எங்களையெல்லாம் கூப்பிடுகிறாயே! உங்களோடு வந்து சுதந்திரம் வாங்கிவிட்டால் எங்களுக்கு என்ன என்று சொன்னாயா?” என.. “What happens to Shudras after the Independence?” .. உன்னால் சொல்ல முடியுமா என்று கேட்டார் அம்பேத்கர்.

அப்போதுதான் காந்திக்குப் புரிந்தது.

அம்பேத்கர் பெயர் வரவில்லையே தவிர, இதையெல்லாம் இந்தப் புத்தகத்திலே பதிவு செய்திருக்கிறார்கள். என்னதான் கட்டுரைகளைத் தொகுத்தாலும், அதை stretch பண்ணி இந்த நூலாசிரியர் ஒரு தொகுப்பாக, ஒரு சாரமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்பதற்காக நிச்சயமாக அவரை நாம் போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்று இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

பூனா ஒப்பந்தம்: பெரியார் சொன்னது என்ன?

பெரியாரை ஏன் நாம் போற்றுகிறோம்? பூனா ஒப்பந்தத்தில் அம்பேத்கருக்கு அழுத்தம் வந்தது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு காந்தியின் துணைவியார் வந்து கேட்டார் என்கிற ஒரு காரணத்துக்காக அம்பேத்கர் கையெழுத்துப் போட்டார்.

அப்போதும் ஒரே ஒரு குரல்தான், “ஒரு காந்தி செத்தால் சாகட்டும். 10 கோடி தாழ்த்தப்பட்ட மக்களுடைய மானம்தான் பெரியது. நீ கையெழுத்துப் போடாதே” என்று சொன்ன ஒரே ஆள் தந்தை பெரியார்தான்.

டார்வினாலேயே முடியவில்லை.. பெரியார் கவலைப்பட்டாரா?

காரல் மார்க்ஸ் ‘மூலதனம்’ எழுதினார். ‘மூலதனம்’ எழுதி முடிப்பதற்கு எவ்வளவு கஷ்டம்.. வீடு முழுக்க வறுமை, ஏழ்மை. எதை எதையோ விற்று, ஏங்கல்ஸிடம் வாங்கி எல்லாம் எழுதினார். எழுதி முடித்ததற்குப் பிறகு அவருக்கு ஒரு யோசனை. பரிணாமக் கோட்பாட்டை- Doctrine of Evolution- இந்த உலகத்திற்குக் கொடுத்த டார்வின் இந்த நூலுக்கு முகவுரை எழுதினால், காலப் பொருத்தமும், தத்துவப் பொருத்தமும், ஆட்பொருத்தமும் இருக்கும் என்று காரல் மார்க்ஸ் நினைத்து டார்வினுக்குக் கடிதம் எழுதுகிறார்.

டார்வின் சொன்ன பதில், “உங்கள் புத்தகம் மிக அருமையாக இருக்கிறது. ஆனால் என்னை மதத்துரோகம் செய்துவிடுவார்களோ என்று என்னுடைய துணைவியார் பயமுறுத்துகிற காரணத்தினால் என்னால் முகவுரை தர இயலாது என்று..

டார்வினாலேயே முடியவில்லை..

ஆனால் பெரியார் எதற்காவது கவலைப்பட்டிருக்கிறாரா? எதற்கும் கவலைப்பட்டதில்லை. யாராக இருந்தாலும் பெரியாருடைய தீர்ப்பு ஒரே அடிதான்.

இப்படி இந்த சமூகம், இந்த மொழி, இந்த இனம், சமத்துவம், சாதி ஒழிந்த சமத்துவம்.. இவைகளுக்காகவே வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மனிதர்.

கே.பி. சுந்தராம்பாளுக்காக எழுதிய பெரியார்

அதே மாதிரி கே.பி. சுந்தராம்பாளைக் கொண்டு போய் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து, அந்த அம்மா போய் ஓட்டெல்லாம் கேட்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு அந்த அம்மாவை இப்படிச் செய்தீர்களே என்று பெரியார் எழுதுகிறார். “தோழர் கே.பி. சுந்தராம்பாள் ஒரு பெரிய காங்கிரஸ் பக்தர். தேர்தல் காலங்களில் காங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்பவர். சென்ற பொதுத்தேர்தலின்போது தோழர் சத்தியமூர்த்தியுடன் சென்று ஊர் ஊராய்ப் பாடி காங்கிரஸ் கூட்டங்களுக்கு அதிக ஜனக்கூட்டம் வர உதவி புரிந்தவர். அவரைக்கூட பார்ப்பனர் சும்மா விடவில்லை. ஒன்றோ இரண்டோ லட்சம் பிரதிபலன் பெற்று நந்தனாக நடித்த தோழர் சுந்தராம்பாள் செய்த பாவம் ஒன்றுதான். நந்தனாக நடித்த தோழர் சுந்தராம்பாளைப் பார்ப்பன உலகம் செய்த கேலி கொஞ்சமா?

‘நந்தன்’ படத்திலே தென்னை மரங்களும் எருமைக் கடாக்களுமே சிறப்பாக நடித்தன” என்று ஒரு பார்ப்பனப் பத்திரிகை (சுதேசமித்திரன் கேலி செய்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?” என அப்போதே பெரியார் கேட்டிருக்கிறார்.

கே.பி. சுந்தராம்பாள் காங்கிரஸுக்காகப் பாடினார். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் அந்தப் பெண்மணியின் சுயமரியாதைக்கு இழுக்கு வருகிறது என்றால் பெரியாரின் பேனா அன்றைக்கே இவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறது என்றால் அதுதான் பெரியார். இப்படி ஒன்றொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

காந்தி – கஸ்தூரிரங்க ஐயங்கார்

அப்புறம் காந்தி எப்படி, எவ்வளவு compromise பண்ணியிருக்கிறார் என்று சொல்கிறார். காங்கிரஸில் சண்டை. திலகருக்கு ஓர் அணி; காந்திக்கு ஓர் அணி.

தமிழ்நாட்டில் ‘The Hindu’ யாரை ஆதரிக்கிறது? காந்தி போய் கஸ்தூரி ரங்க ஐயங்காரைப் பார்த்து, “நான் உனக்குச் சரியாக இருக்கிறேன்; எனக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இதற்கு பெரியார் ரொம்ப நாசுக்காக, “உங்களை நம்பிச் சுதந்திரமே வரும் என்கிறார்கள்; உங்கள் சுதந்திரமே கஸ்தூரி ரங்கனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறது” என்றெல்லாம் எழுதுகிறார்.

நீடாமங்கலம் கொடுமையை வெளிக்கொண்டு வந்த பெரியார்

அப்புறம் நீடாமங்கலம் உங்களுக்குத் தெரியும். நீடாமங்கலத்தில் எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணிவிட்டு, காங்கிரஸ் பந்தியில் தாழ்த்தப்பட்டவர்கள் 4 பேர் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களைப் பிடித்து அடித்து, மொட்டை அடித்து எல்லாம் கொண்டு போய் வைத்துவிட்டு அதை பெரியார் வெளியே கொண்டு வருகிறார். இன்றைக்கு அந்தப் பெரியாரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி, பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள்.

அன்றைக்கு அப்படி இல்லை. அன்றைக்கு அவர் ஆளை அனுப்பி அங்கே என்ன நடந்தது என்று கேட்டுச் சொல்ல வைத்து, பயந்த இடத்திலெல்லாம் சொல்லி வாங்கி, அதற்குப் பிறகு அதை வெளியிட்டு, வெளியிட்ட காரணத்தினால் காங்கிரஸுக்கு ஏற்பட்ட அழுத்தம், அந்த அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள்.. இவற்றையெல்லாம் அன்றைக்கே 1939-ல் பதிவு செய்த ஓர் இதழை நடத்திய பெருமகனார் தந்தை பெரியார் என்பதை நினைக்கிறபோது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.

கொள்கை, கொள்கை, கொள்கை

திரும்பத் திரும்ப நான் அம்பேத்கரை நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த மனிதர் யாரைத்தான் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை. விட்டுவைக்கவில்லை.

நமக்கு ஒருவரோடு பழகிவிட்டால், அவர் தப்பே பண்ணினால்கூட அதை எப்படித் தட்டிக் கேட்பது என்று கொஞ்சம் இளக்கம் இருக்கும். இந்த மனிதனுக்கு முன்னால் கொள்கை, கொள்கை, கொள்கை. யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.

”சின்ன வயசுல சைக்கிள் திருடினவன் சங்கராச்சாரி ஆகிவிட்டான்” என பெரியார் எழுதியதாக இந்த புத்தகத்தில் பதிவு இருக்கிறது. அவர் யாரைத்தான் விட்டுவைத்தார் என தெரியவில்லை.

1952-ல் ”இந்த கண்ணீர் துளி பசங்க (திமுக) மாதிரி பிராமணன் வேற.. பிராமணியன் வேற என்றெல்லாம் உளற மாட்டேன்” என்கிறார் பெரியார். ஆச்சரியமாக இருக்கிறது.. பெரியார் யாரைத்தான் விட்டு வைத்தார்?

நமக்கு ஒருத்தரோட பழகிட்டா தப்பே பண்ணிட்டாலும் அதை எப்படி தட்டிக் கேட்பது என்கிற கொஞ்சம் இங்கிதம் இருக்கும். இந்த மனுஷனுக்கு (பெரியார்) முன்னாடி கொள்கை கொள்கை கொள்கை.. யாரை பத்தியும் கவலைப்படவில்லை. அப்படி ஓர் ஆற்றல்மிக்க மனிதர்.

‘முரசொலி’க்கு பெரியார் எழுதிய வாழ்த்து

அப்புறம் யாராவது வந்து, “நான் ஒரு பத்திரிகை ஆரம்பித்திருக்கிறேன்” என்று அந்தப் பத்திரிகையை அனுப்பினால், அந்தப் பத்திரிகை எப்படி வந்திருக்கிறது, இது நல்லதா, கெட்டதா எல்லாம் எழுதுகிறார்.

அப்போது அவருக்கு 2 பத்திரிகை போகிறது.. ‘முரசொலி’ போகிறது.

விடுதலையில் புதிய இதழ் ஒன்று வந்திருக்கிறது என்று எழுதுகிறார். அதில், ‘முரசொலி’; ஆசிரியர் மு. கருணாநிதி, திருவாரூர்.

அந்தப் பத்திரிகை எப்படி என்று நாலே வரியில் சொல்கிறார்:

“சாணிப் பிள்ளையாரும் சீனிப் பாயாசமும் பொங்கலின் குறிக்கோள் அல்ல. கோணிக் கிடக்கும் சமுதாயத்தின் குறை தவிர்க்க முரசு அறைவாய்; போர் முரசு அறைவாய்” எனக் கூறி எழுதி எழுந்திருக்கும் முரசு இல்லந்தோறும் இருக்க வேண்டும். திராவிடர் இல்லந்தோறும் இதன் ஒலி எதிரொலிக்கட்டும். ஓர் இதழ் ஓரணா; ஓராண்டுக்கு நான்கு ரூபாய். வாழ்த்துகள்” என ஐயா பெரியார் எழுதுகிறார்.

வன்னியர் இதழ் பற்றி பெரியார்

இதுமாதிரி நிறைய பத்திரிகைகள். ‘பல்லவ நாடு’ என்று ஒரு பத்திரிகை. அந்த ஆசிரியர் ஜெயச்சந்திரன், சென்னை. “தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரும், தமிழ் மொழி பேசும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினருமாகிய அரைக்கோடி வன்னிய மக்களின் சமுதாய நலன் கருதி, ஊராண்ட இனம் என்ற உரிமை ஒழிந்து இன்று ஒடுக்கப்பட்டு வரும் நிலை ஒழிந்து, ஊராட்சியில் ஒப்பான பங்கு பெறத் தூண்டி, வகுப்பின் ஒற்றுமையை வளர்த்து வரத் தோன்றியதுதான் இந்த இதழ்.”

இதெல்லாம் சரி.

அடுத்து ஒன்று அடிக்கிறார் பாருங்கள்.

“வன்னியர் குலப் பிரிவினையை வளர்ப்போம்” என்ற தொடர் வருகிறது. அது தவறு என்று நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியது எனது பொறுப்பு.

எந்த ஜாதி கூப்பிட்டாலும் போவார்..

பெரியார் எல்லா ஜாதி சங்கத்திலும் போயிருக்கார்.. பேசி இருக்கிறார்.. இஸ்லாமியர் கூப்பிட்டால் கூட போவார்.. அங்கே போய், “பர்தா போட்டது தப்பு”ன்னு சொல்வார்.. எந்த ஜாதி கூப்பிட்டாலும் போவார்.. அங்கே போய் , “இந்த ஜாதித் திமிர் தப்பு” என்பார்.

அப்படி சிலருக்கு மட்டும் வரும்.. என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா, ”பல்வேறு வகுப்புகள் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் நிலைமை மறைய, ஒவ்வொரு வகுப்பும் சாதியும் முன்னேறி, எல்லா வகுப்பும் ஒத்த ஒரு நிலையை அடைந்தால்தான் வகுப்பு வேறுபாடுகளும் வகுப்புகளும் ஒழிவது சாத்தியமாகும் என்ற உணர்ச்சியை இந்நாட்டில் தோற்றுவித்து வளர்த்த திராவிடர் கழகத்தின் கொள்கைக்கு இணங்கத் தோன்றியிருப்பதே ‘பல்லவ நாடு’ என நாம் நம்புகிறோம்.

வன்னியர் சமூகத்தின் நலத்திற்காகப் பல கட்டுரைகளும், கதைகளும், கடிதங்களும், மாநாடுகளில் பேசப்பட்ட பேச்சுகளும் காணப்படுகின்றன. ஆனால் குலப் பெருமையை வளர்ப்போம் என்ற சொல் ஏற்புடையதா?” என கேட்கிறார்.

அம்பேத்கருக்காக ‘தி இந்து’வை எதிர்த்த பெரியார்

எதுவாக இருந்தாலும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திருக்கிறது என்பதற்காகத்தான் சொல்கிறேன். பெரியாரைப் போய் மிரட்டவும் முடியாது.

ஏதாவது மிரட்டினால், “தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று அம்பேத்கர் சொல்லிவிட்டார். அம்பேத்கர் சொன்னவுடன் பெரியார் போட்ட தலைப்பு: “டாக்டர் அம்பேத்கர் மீது மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு தம் சக்கரத்தை வீசியிருக்கிறார்.”

அதில் சொல்கிறார்: “தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தில் சேர வேண்டும் என்று பேசினாராம் அம்பேத்கர். அதற்காகத்தான் ‘இந்து’வுக்கு (இந்து பத்திரிகை) இவ்வளவு ஆத்திரம். தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே வைத்து, கல்வியோ, குடியிருக்க வசதியோ, உணவோ, உடையோ தராமல் இருக்கும் அட்டூழியத்திற்கு இந்து மதம் காரணமல்ல என்று ‘இந்து’ பத்திரிகையினால் கூற முடியுமா என்று அறைகூவல் விடுத்து நாம் அழைக்கிறோம்.

இந்த நாட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மதத்தினால் விரட்டப்பட்ட அகதிகள் என்பதை ‘இந்து’ ஆசிரியர் மறுக்கத் துணிவாரா?

இந்து மதம் என்பது பலாத்காரத்தையும் சதுர்வர்ணத்தையும், சிலை வணக்கத்தையும், புராண இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டது.”

இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார்.

“புத்த மதம் இந்த நாட்டில் பரவாமல் இருந்திருக்குமேயானால் இந்த மதம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். கற்பனைக் கடவுள்கள், புராண இதிகாச ஆபாசங்கள், பஞ்சாங்கப் புரட்டுகள் ஆகிய எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கும். இதை அறிந்தே புத்த மதத்தை அழித்தார்கள் இவர்கள்.”

சிந்தனைகள் வளராத காலத்தில் இத்தனையும் செய்தவர் பெரியார்.

முடிவில்லா உறக்கம் ஐயங்கார்

அப்புறம் பெரியார் அந்த எழுத்தில் அனந்தசயனம் ஐயங்கார் பற்றி எழுதுகிறார். அனந்தசயனம் ஐயங்காருக்குப் பதில் போட வேண்டும் அல்லவா? “முடிவில்லா உறக்கம் ஐயங்காருக்கு ஒரு கேள்வி”. அனந்தம் என்றால் முடிவில்லா; சயனம் என்றால் உறக்கம்..

“திரு ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பிராமணர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார். இந்தக் கிளர்ச்சியை முன்பே ஒடுக்கியிருக்க வேண்டும். தென்னிந்தியப் பத்திரிகைகள் இரண்டு ஒன்று இந்த மாதிரியான துவேஷப் பிரச்சாரம் செய்து வருவதை உள்நாட்டு அமைச்சர் பார்லிமெண்டில் படித்துக் காட்டினார். அப்போது இப்பத்திரிகை மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று பார்லிமெண்ட் உறுப்பினர்கள் கேட்டனர். இனியாவது மேலும் தாமதம் செய்யாதபடி மத்திய சர்க்காரும் சென்னை சர்க்காரும் இந்த மாதிரிப் பிரச்சாரத்தைக் கடுமையாக அடக்கி நசுக்கிவிட வேண்டும்” என்று திருவாளர் ‘முடிவில்லா உறக்கம்’ ஐயங்கார் அவர்கள் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு நிருபருக்கு அளித்த பேட்டியில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

அப்புறம் இவரே footnote போடுகிறார்: அனந்தம்- முடிவில்லா; சயனம் — உறக்கம்.

இவ்வளவு போட்டது பெரிது இல்லை.

“நடவடிக்கை எடுங்கள்; நாங்கள் Ready”

அவர் என்ன சொல்கிறார்?

“நான் பார்ப்பனரை வெறுக்கவில்லை; பிராமணரை வெறுக்கவில்லை; பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறேன்” என்று சொல்லக்கூடிய கண்ணீர்த் துளி (திமுக), தொடை நடுங்கிகள் நாங்கள் அல்ல!

எப்படியாயினும் கடுமையான நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டிய கட்டம் வந்துவிட்டது. திராவிட இனத்தை கட்டுப்பாடாக்கிப் புரட்சி செய்யும்படி தூண்டுவதற்கான உதவியை அக்ரகாரத் தலைவர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

Ready என்கிறார்! எதற்கு ready? சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள் என்கிறார்.

இப்படி எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார் பெரியார். இப்போது தமிழ், திராவிடத்துக்கு எதிரி; பெரியாருக்குத் தமிழே எதிரி என்கிறோம் அல்லவா?

அவர் தமிழ் பற்றிய ‘விடுதலை’ தலையங்கத்தின் விளக்கம் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்தால் ரொம்பச் சிரிப்பாக இருக்கும்.

தமிழ் புலவர்கள் மோதிய கதை

கதிர்வேல் பிள்ளை என்று ஒரு புலவர். அவர் பெரியாரைப் பார்த்திருக்கிறார் ஈரோட்டில். நீலகிரிக்குப் போக வேண்டியவர். போகிற வழியில் நாயக்கரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று போயிருக்கிறார்.

போனவுடன் சாப்பாடு எல்லாம் கொடுத்து, “நீங்கள் தமிழ் நன்றாகப் பேசுகிறீர்கள்; ஒரு சொற்பொழிவு வைத்துக்கொள்ளலாமே” என்று சொற்பொழிவு ஏற்பாடு செய்கிறார்.

புலவர் நல்லதம்பி பிள்ளை என்று ஒருவர் local-ல் தலைவர். அவர் ஒரு தமிழ் ஆசிரியர், தமிழ் புலவர். அவரைத் தலைமைக்கு அழைத்திருக்கிறார். நல்லதம்பி பிள்ளை தமிழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, “இந்த நிலையில் சிலர் பிற மொழிகளிடம் வெறுப்புக் கொள்கிறார்கள்…” என்று சொல்லிக்கொண்டு வரும்போது, “தமிழில் குறை கூறுகிற இவன் மற்ற மொழிகளைக் குறை கூறுவது என்றால்…” என்று சொன்னாராம்.

உடனே சிறப்புரை ஆற்றப்போகிறவர் எழுந்து, “ஓய்! ‘இவன்’ என்று சொன்னீரே; அதற்கு இலக்கணம் சொல்லிவிட்டுப் பேசும்!” என்றாராம்.

பிறகு நல்லதம்பி பிள்ளை எதையோ சொன்னார். கதிர்வேல் பிள்ளை டா போட்டுப் பேச ஆரம்பித்துவிட்டார். நல்லதம்பி பிள்ளை இவரை “மடையன், மடையன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கதிர்வேல் பிள்ளை நல்லதம்பி பிள்ளையை அடிக்கக் கை ஓங்கிவிட்டார்.

உடனே நான் எழுந்து இவர்களை விலக்கிவிட்டு, சமாதானம் செய்கிற தன்மையில் பெருத்த குரலில்:

“கனவான்களே! தமிழுக்காகப் போடப்பட்ட கூட்டம் இது என்றாலும், தமிழைப் பற்றி இன்னும் சகலமாகத் தெரிந்துகொள்ள நமக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் இந்த நிகழ்ச்சியை ஏமாற்றம் அடைந்துவிட்டதாகக் கருதக்கூடாது. தமிழைப் பற்றித் தெரிந்துகொள்வதைவிட ஒரு முக்கியமான அரிய விஷயத்தை நாம் இப்போது தெரிந்துகொண்டோம்.

அதாவது பகுத்தறிவில்லாத 2 புலவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நேரிடும் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம்! இந்த மாதிரி சம்பவம் இனி நமக்குக் கிடைக்காது” என்றார்.

அப்புறம் கதிர்வேல் பிள்ளை, “நாயக்கர், உம்மிடம் வந்ததே தப்பு; வந்ததே தவறு” என்று கோபத்தோடு சில கடுமையான வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கொடுத்த பாலை, “உன்னிடம் வாங்கி இந்தப் பாலை நான் குடித்தேனே” என்று சொல்லி வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தார்!

குறள் மாநாடு: பெரியார் பற்றி திரு.வி.க.

அப்புறம் குறள் மாநாடு. திரு.வி.க. பற்றி ஒரு கட்டுரை.

திரு.வி.க. அவர்களிடத்திலே சில புலவர்கள் சென்று, குறிப்பாக சரவண முதலியார் என்பவர், “அவர் எல்லா இலக்கியங்களிலும் கை வைத்தது போக, குறளிலும் கை வைத்துவிட்டாரே; அதற்கு நீங்கள் போகலாமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு திரு.வி.க. “அவர் எதில் கை வைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் இவ்வளவு மரியாதை வந்திருக்காது. மற்றவை காலப்போக்குப்படி நடக்கும். அவர் நடத்திய குறள் மாநாட்டினால்தான் குறள் மேலும் சிறிது பெருமைப்படுமே தவிர அதற்கொன்றும் சிறுமைப்பட்டுவிடாது. அவர் வேலையில் உள்ள தத்துவப் பெருமை உங்களுக்குத் தெரியாது; எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று சொன்னதாக இவரிடம் சொல்லியிருக்கிறார்.

இந்து மீது கோபம்; தமிழ் மொழியில் கோபம் என்று சொல்லப்படுகிறவற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக உணர்த்தி, உணர்த்தி, உணர்த்தி எப்படி ஒரு தலைவனால் இப்படி முடிகிறது என்று சொல்லுகின்ற அளவிற்கு ஒரு மிகப்பெரிய இதழியல் துறையிலே என்னென்னவோ நடந்திருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கட்டுப்படுத்த முடியாத பெரு நெருப்பு பெரியார்

அதனால்தான் நான் ஒரு முறை சொன்னேன். அம்பேத்கரை மதத்தைக் காட்டி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இந்த மண்ணில் சமத்துவம் என்றால், சாதி என்றால், மதம் என்றால், பெண்ணடிமை என்றால், ஏன் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றால் பொட்டலம் கட்டுப்படுத்த முடியாத ஒரே பெரிய நெருப்பு பெரியார், பெரியார், பெரியார் என்று சொன்னேன்.

தமிழர்களின் காலக்கண்ணாடி பெரியார்

எனவே இந்தப் புத்தகம் தந்திருக்கின்ற மிகப்பெரிய பெட்டகம் என்று சொன்னால், தமிழ் பரப்பில் எத்தனை schools of thought- எத்தனை சிந்தனை மரபுகள் இருந்திருக்கின்றன? தனித்தமிழ் ஒரு சிந்தனை மரபு. ஆரியம் ஒரு சிந்தனை மரபு. வேதங்கள் ஒரு சிந்தனை மரபு. திராவிடம் ஒரு சிந்தனை மரபு. இப்படி எத்தனையோ சிந்தனை மரபுகளை வெவ்வேறு வடிவங்களிலே தந்திருந்தாலும், அத்தனை வடிவங்களையும் தொட்டுத் துலக்கி, ஆய்ந்து, எது தமிழனுக்குச் சரி, எது தமிழனுக்குத் தவறு என்று சொன்ன ஒரே ஒரு காலக்கண்ணாடி நமக்கு இருக்கிறது என்றால் அது தந்தை பெரியார்.

தேசியக் கொடி முதல் அரசியல் சட்டம் வரை..

ஒரே ஒரு வருத்தம். எல்லாம் அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். ‘Organizer’ 10.7.1949-ல், “தேசியக் கொடியை நாங்கள் ஏற்க மாட்டோம்; ஒரு நாளும் வணங்க மாட்டோம்” என்றார்கள். இப்போது RSS தான் தேசியக் கொடியை ஏற்றி, “எங்களுக்குத்தான் தேசிய உணர்வு இருக்கிறது; தமிழ்நாட்டில் எல்லாம் இல்லை” என்கிற மாதிரி இருக்கிறார்கள்.

6.2.1950-ல் “அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று ‘Organizer’-ல் இருக்கிறது. “எங்களுக்கு, இந்துக்களுக்குச் சட்டம் மனுதர்மம் மட்டும்தான்” என்று சொன்னவர்கள் எல்லாம் இன்றைக்கு அரசியல் சட்டத்தின் 75-வது ஆண்டைத் தூக்கிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஓர் அரசியல் சட்டம் உண்டா? இந்த மாதிரி ஒரு தேசியக் கொடி உண்டா? என…

இத்தனை ஆண்டுகாலமாக மாறி, மாறி, மாறி, உருமாறி தமிழர்களுக்கு வெவ்வேறு வடிவங்களில், திராவிடர்களுக்கு வெவ்வேறு வடிவங்களில் எப்படியெல்லாம் தடையாக இருக்கலாம் என்கிற அந்த உருவம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தத் தமிழ் சமுதாயம் பெரியாரை அந்த அளவிற்குக் கருத்தியல் ரீதியாகத் தூக்குகிறதா, கொண்டாடுகிறதா என்றால் பயமாக இருக்கிறது.. மிகப் பயமாக இருக்கிறது.

பெரியார் சொன்னார், “மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை; போனால் மயிர்” என .இப்போது நாம் மயிரையும் பார்க்கவில்லை; மலையையும் பார்க்கவில்லை.. வேற எதையோ பார்க்கிறோம்.

எனவே ஓர் அறிவார்ந்த சமூகம்.. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்” என்று சொல்வதற்கு என்ன காரணம் என்று அவரே சொன்னார்.

“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; பார்த்தால் பாவம்; தொட்டால் தீட்டு; குளத்திலே தண்ணீர் எடுக்கக்கூடாது; தெருவிலே நடக்கக்கூடாது என்பவை போன்ற கொள்கைகள் தாண்டவம் ஆடுகிற ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கடிக்கச் செய்யாமலோ பார்த்த பிறகும் கடவுள் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது?” என்று கேட்டவர் பெரியார்.

பெரியார் – அண்ணா – கலைஞர் – ஸ்டாலின்

அப்படிக் கேட்ட பெரியாரை, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கடவுள் மறுப்பைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு அரசியல்படுத்தி, தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு அளப்பரிய அடையாளத்தையும் தொண்டையும் ஆற்றிய அண்ணா.

அதற்குப் பிறகு பெரியார் சொன்ன எல்லாத் தத்துவங்களையும் அரியணை ஏற்றிய கலைஞர்.

இந்த மூன்று தலைவர்களும் வாழ்ந்த மண்ணில், அவர்களின் கருத்தியலாய் இன்றைக்கும் நம்மிடத்திலே உலவிக்கொண்டிருக்கின்ற திராவிட நாயகர், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் என்கிற மனிதர் வாழ்கின்ற இந்தக் காலத்தில், திராவிடத்தைத் தொலைத்து விடுவோமோ, பெரியாரைத் தொலைத்து விடுவோமோ என்று சிலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களையெல்லாம் பார்க்கிறபோது நம்பிக்கை இருக்கிறது. கருஞ்சட்டை பதிப்பகத்தைப் பார்க்கிறபோது பெரும் நம்பிக்கை ஏற்படுகிறது.

தங்களுக்கு ஏற்பட்ட எந்தப் பொருட்செலவையும் கருதாமல், “எங்களுக்குச் சேதாரம் வந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை; இந்த இனம் சேதாரப்பட்டுவிடக் கூடாது” என்பதற்காக இந்த அரிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிற அவர்களை நான் பாராட்டுகிறேன்.

பெரியாரை நெஞ்சிலே ஏந்துவோம். அம்பேத்கரின் தத்துவங்களை அகில இந்திய அளவிலே ஏந்துவோம். இந்த இரண்டு தலைவர்களையும் வைத்து நாம் வெற்றியை ஈட்டுவோம். மீண்டும் திராவிட ஆட்சி மலர்வதற்கு எல்லாப் பணிகளையும் மேற்கொள்வோம். வாருங்கள். வாழ்க பெரியார் என்று சொல்லி விடைபெறுகிறேன். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share