மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த போதும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்தன; பக்தர்கள் முறையாக அனுமதிக்கப்படவில்லை; பாஸ்கள் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டுகளால் சர்ச்சைகள் வெடித்தன.
மேலும் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, “உங்களுக்கு ஓட்டுப் போட்டது வேஸ்ட்” எனவும் ஆவேசப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்ததாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இன்று காலை குடமுழுக்கு விழாவுக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி வருகை தந்தார். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரியிடம் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் சென்று, “தலைமை நீதிபதி வந்துள்ளார்” என தெரிவித்துள்ளனர். இதற்கு, “தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?” என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி அலட்சியமாக கேட்டதாகவும் இந்த பதிலைக் கேட்டு நீதிபதிகளும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.
