ADVERTISEMENT

“விசிக நிலைப்பாடு இதுதான்!” பிரேமலதா பேச்சுக்கு திருமாவளவன் அளித்த அதிரடி விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 இடங்கள் கொடுத்ததுதான் விசிக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் என திருமாவளவன் சொல்கிறார். ஆனால் விசிக அமைச்சர் பதவிக்காக தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது என்பதுதான் உண்மை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள், நாங்கள் தேமுதிகவை விமர்சித்ததாக எண்ணிக்கொண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறுவதற்கு பதவி ஆசை மட்டுமே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். துரோகப் பட்டங்களையும் சூட்டி வருகின்றனர். அவர்களுக்கு விடையளிக்கும் வகையில் நான் திருமண விழா ஒன்றில் பேசும்போது, அதுமட்டும்தான் காரணமா? திமுகவுக்கும் அன்றைக்கு உடன் இருந்த கட்சிகளுக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருந்தது என்பதையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாமா என்ற கோணத்தில் கருத்துக்களை சொன்னேன்.

ADVERTISEMENT

அப்படி காரணங்களை நான் அடுக்குகிறபோது, திடீரென்று தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததும், அதற்கு இடங்கள்—10 இடங்கள் வழங்கப்பட்டது குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு கசப்பு இருக்காதா என்ற கோணத்திலே நான் கேள்வியை எழுப்பினேன். அவ்வளவுதான்.

தேமுதிகவுக்கு 10 இடங்கள் வழங்கியபோது அதை முழுமனதோடு வரவேற்று, அதற்கான காரணங்களையும் விளக்கிய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்; ஒரே நபர் திருமாவளவன்தான்.

ADVERTISEMENT

பலரும் அந்த நேரத்தில் தேமுதிகவை திடீரென திமுகவுக்குள்ளே இணைத்துக் கொண்டதை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வரவேற்றவன் திருமாவளவன். இன்றைக்கும் நான் ஏன் அவர்களை சேர்த்தீர்கள், எதற்காக அவ்வளவு இடங்களைக் கொடுத்தீர்கள் என்ற கோணத்திலே நான் கருத்து சொல்லவில்லை.

உடனிருந்த கட்சிகளுக்கு திமுகவோடு இருந்த உறவு பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் உண்டு என்று நான் சில காரணங்களை அடுக்கியபோது, தேமுதிகவை திமுகவுக்குள்ளே திடீரென இணைத்ததும் ஒரு காரணம் என்ற கோணத்தில் கருத்துச் சொன்னேன், அவ்வளவுதான்.

ADVERTISEMENT

ஆனால் அவர் நாங்கள் ஏதோ தேமுதிக மீது காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறோம் என்ற கோணத்தில் அவர் கருத்து சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்து அவருடைய கருத்தாகவே இருக்கட்டும். அதில் நாங்கள் மேற்கொண்டு கருத்துச் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.

இதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நாங்கள் இப்போதைக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இருக்கிறோம். அந்த வெற்றிக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் இரண்டு தொகுதிகளிலும் என்கிற அடிப்படையில் எங்கள் பணிகள் இருக்கும்.” என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share