“அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள்?”: திருமாவை நோக்கி கேள்வி எழுப்பிய பிரேமலதா!

Published On:

| By Pandeeswari Gurusamy

தேமுதிகவிற்கு 10 தொகுதி ஒதுக்கியதால் தான் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது உண்மைக்கு புறம்பானது என ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அண்ணன் திருமாவளவன் மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறது. அது இன்று நேற்று அல்ல; கேப்டன் இருந்த காலத்திலிருந்தே அவர் மீது தேமுதிகவிற்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருடைய ‘வெளிச்சம் டிவி’யைத் தொடங்கி வைத்தவரே கேப்டன் தான். அந்த அளவிற்கு இருவரும் மனதார வாழ்ந்தவர்கள்.

ADVERTISEMENT

‘திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் கொடுத்து விட்டார்கள்; அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்’ என்று திருமாவளவன் சொல்கிறார் என்றால், இதே அண்ணன் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வைகோ ஆகியோர் சென்றுதான் 2016-இல் ‘மக்கள் நல கூட்டணி’ என்பதைத் தொடங்கினார்கள். அதன் பிறகு, இதே அலுவலகத்தில் கேப்டனைச் சந்தித்து, ‘இந்த கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும்; நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று கூறியவரும் அண்ணன் திருமாவளவன்தான்.

வார்த்தைகள் என்றும் மாறாது; வரலாறும் மாறாது. நமது விருப்பத்திற்கு வார்த்தைகளை மாற்றிப் பேசலாம், ஆனால் சொன்ன வார்த்தைகள் வரலாறாகப் பதிவாகிவிடும்; அதை எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது. ஒரு சொல் வெளியாவதற்கு முன்பு அதற்கு எஜமானன் நான்; அது வெளியே வந்துவிட்டால், அந்தச் சொல்தான் எனக்கான எஜமானன். கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராகவே ஏற்றுக்கொண்டவர் அவர். அன்று மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்? இன்று 10 தொகுதிகள் ஒதுக்கியதால் வெளியே போகிறோம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ADVERTISEMENT

யாரையும் காயப்படுத்தக்கூடாது என்பதற்காகவே என் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துகிறேன். அண்ணன் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபோது என் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்; அதை நான் என்றும் மறக்க மாட்டேன். அவர் இன்று வேண்டுமானால் மாற்றிப் பேசலாம், ஆனால் அதை நான் மறக்க மாட்டேன். ஒருவர் செய்த சின்ன உதவியைக் கூட காலத்தால் மறக்கக்கூடாது. கனிமொழி அவர்களும், திருமாவளவன் அவர்களும் எனக்காகத் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்கள். நான் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவோ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்தேன்; ஆனால் எனக்காகப் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்கள் இருவர்தான். அதற்கு கனிமொழி அவர்களுக்கும், அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

அன்று சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், அண்ணன் திருமாவளவன் பேசியபோது நான் எழுந்திருக்கவில்லை என்று சர்ச்சையைக் கிளப்பப் பார்த்தார்கள். அவர் பேசிக்கொண்டிருந்தபோது நான் இயல்பாகத்தான் இருந்தேன்; இதையும் சர்ச்சையாக்க முயன்றார்கள். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவ்வளவோ திட்டங்கள் நடந்தன; ஆனால் அதை மிக அழகாகக் கையாண்டவர் அண்ணன் திருமாவளவன். ஏனென்றால், பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அவர் இருந்தார். அவர் சொன்ன வார்த்தைகளை நான் என்றுமே மறக்க மாட்டேன்.

ADVERTISEMENT

‘சகோதரி பிரேமலதா அவர்கள் அமர்ந்திருந்தது எந்த வகையிலும் தவறில்லை. காரணம், அன்று முதலமைச்சராக இருந்த கூட்டணித் தலைவர் அண்ணன் ஸ்டாலின் இருக்கும்போது, வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது அவர்தான்; நான் இல்லை. இருந்தாலும் நான் முன்கூட்டியே அறிவித்தது தவறுதான். அவர் இயல்பாகத்தான் இருந்தார். இதை நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு. அவர் எப்போதும் எனது சகோதரிதான்’ என்று அவ்வளவு அழகாக, தெளிவாக ஒரு பதில் சொன்னார். என்னுடைய விருத்தாச்சலம் தொகுதிக்கு அவர் வந்தபோதும் நான் அவருக்கு நன்றி சொன்னேன்.

இந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஒழுக்கமான, நேர்மையான நபர்தான் அண்ணன் திருமாவளவன். இன்று அவருடைய நிலைப்பாடு மாறியதாலும், அவர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததாலும், வேறு கூட்டணிக்குப் போயிருக்கிறார்கள்; இதுதான் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. இன்று கம்யூனிஸ்டுகளும் கூடவே இருக்கிறார்கள்; ‘வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம், எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம்’ என்கிறார்களே? அதை நீங்கள் சொல்ல வேண்டியதுதானே? அதுதானே உண்மை? எதற்காக வேறு கூட்டணிக்குப் போகிறீர்கள்?

சகோதரர் வன்னியரசு சட்டசபையில் எனக்கு நேராகத்தான் உட்காருகிறார். அவரும் மரியாதை நிமித்தமாக தினமும் எனக்கு வணக்கம் சொல்வார், நானும் அவருக்கு வணக்கம் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் அங்கு சகோதரர்கள்தான். ஆனால், ஒரு விமர்சனம் என்று வந்தால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை; அதனால் பதில் சொல்கிறேன். இல்லை என்றால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சகோதரர் வன்னிய அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது; அதனால் நீங்கள் கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள்; அதில் ஒருவர் அமைச்சர் என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள் என்று நான் கேட்கிறேன். அதை முடிவெடுக்க வேண்டியது திமுகவும் அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அண்ணன் ஸ்டாலின் கூடுதல் இடமாகவே கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும்.

உங்களுக்கு அமைச்சரவைப் பதவி கிடைத்தது, நீங்கள் போயிருக்கிறீர்கள்; இதைப் பற்றி நாங்கள் ஏதாவது சொன்னோமா? சந்தோஷம், வாழ்த்துகள்! அப்படி இருக்கையில், அனைத்துக் கட்சிகளும் இருக்கும்போது, தேமுதிக மீது மட்டும் ஏன் எல்லோருக்கும் காழ்ப்புணர்ச்சி? தேமுதிகவைப் பார்த்தால் ஏன் பயம் என்று கேட்கிறேன். எங்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்தால் என்ன, 20 தொகுதிகள் கொடுத்தால் உங்களுக்கு என்ன? அது கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவு; அதைக் கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

‘அதனால்தான் கூட்டணியை விட்டுச் சென்றோம்’ என்று சொன்னால், அது உண்மைக்கு புறம்பான பதில் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும். எனவே, ‘அமைச்சர் பதவி கிடைத்தது, அதனால் போனோம்’ என்பதுதான் உண்மை. அதை மாற்றிப் பதில் சொன்னால், அது எப்படிப்பட்ட பொய் என்பது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகப் புரியும்’ என்றார்.”

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share