ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் இந்த கூட்டணி எதற்கு? – போர்கொடி தூக்கும் செல்வப்பெருந்தகை

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட்டணி எதற்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்க ஆதரவு அளித்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜயை முன்னிறுத்துவோம் என்று தவெகவினர் கூறி வருகின்றனர். அதே கருத்தையே தவெக அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றனர். இதனால் தவெக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் விமர்சனம்:

ADVERTISEMENT

இதுகுறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். ஆர்வம் மிகுதியின் காரணமாக ரசிகர் மனப்பான்மையில் தவெகவினர் முதலமைச்சர் விஜயைப் பிரதமர் வேட்பாளர் என்று கூறுகின்றனர். அமைச்சர்கள் எம்எல்ஏக்களே இன்னும் ரசிகர் மன்ற மனநிலையில் தான் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை:

ADVERTISEMENT

அதேபோல் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், “தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போதெல்லாம் ‘எங்கள் முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். ஒருவேளை அதற்குத் தவெக உடன்படாவிட்டால், காங்கிரஸின் இரண்டு அமைச்சர்களும் பதவிகளில் நீடிக்க மாட்டோம். கட்சிதான் பெரிது; கட்சி இல்லை எனில் ராஜேஷ்குமார் ஒன்றுமே இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் விஜய் தலைமையிலான புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

செல்வப்பெருந்தகை அதிரடி:

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, ” ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால், அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த கூட்டணியில் இருப்பதற்கு என்ன வாய்ப்பு உள்ளது? தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் சபதம் ஏற்கிறோம். அவர் தான் பிரதமர் என்று வெளிப்படையாக, நேர்மையாக ஒப்புக்கொள்பவர்களோடு கூட்டணி வைப்பதுதான் நேர்மை” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share