அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை: தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை – கே.என்.நேரு குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது தமிழக வெற்றி கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார் என்பவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தனியார் பள்ளிகளிடம் சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அரசகுமார் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

அவரிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, அன்பில் மகேஷின் வீட்டிற்கு வருகை தந்தார். ஆனால், போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “விஜய்யின் அரசாங்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் குறிவைத்து, வேண்டுமென்றே பயமுறுத்தும் வகையில் ரெய்டு செய்கிறது. எல்லா ரெய்டுகளையும் எதிர்கொண்டு, திமுகவின் தலைவர்களாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் நீதிமன்றத்தின் மூலமாக நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபித்து வெளியில் வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சோதனை நடைபெற்று வரும் அன்பில் மகேஷின் இல்லத்திற்குள் செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திமுகவில் தீவிரமாக மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்களை எல்லாம் குறிவைத்து விஜய்யின் அரசாங்கம் ரெய்டு மூலம் பயமுறுத்தும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை” என்று கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share