தமிழக முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ 45,00,000 கூட்டு சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: நண்பர்களே, வணக்கம். தவெக ஆட்சியில் நாங்கள் ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று முதல்வர் பேசினார். ஆனால், முதல்வர் விஜய் அமைச்சராக இருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வரும் தாம்பரம் மாநகராட்சியில் எப்படி ஒரு மிகப்பெரிய டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம்.
இதுதொடர்பான புகாரை அறப்போர் இயக்கம் அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறது. இதன் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

அசோகா தூண் சிலை முறைகேடு
இந்த டெண்டர் முறைகேடு 2 ஒப்பந்தங்களில் நடந்திருக்கிறது.
ஜூலை 29-ஆம் தேதி அமைச்சர் சரத்குமார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் பெருங்களத்தூர் மேம்பால ரவுண்டானா அருகே ஒரு சிலையைத் திறந்துவைக்கிறார்கள். அது அசோகா தூண் சிலை.
ஜூலை 29-ஆம் தேதி இந்த சிலையைத் திறந்துவைத்தது தொடர்பான பதிவை சரத்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தாம்பரம் மாநகராட்சியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள்.

ஆனால், இந்த அசோகா தூண் சிலைக்கான டெண்டரே ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் கோரப்பட்டது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். சிலையைத் திறந்துவைத்துவிட்டார்கள்; வேலையையும் முடித்துவிட்டார்கள்.
என்ன வேலை?
அசோகா தூண் சிலையை நிறுவுதல், நிலத்தோற்றம் அமைத்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள்.
இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலை 29-ஆம் தேதியே முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஆகஸ்ட் 6-ஆம் தேதி அதற்காக டெண்டர் கோரி, யாரோ போட்டியிடுவதுபோல வேடம் போட்டு, ஆகஸ்ட் 24-ஆம் தேதிதான் டெண்டர் முடிவடைவதுபோலக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த டெண்டர் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குப் பிறகு பணி ஆணை வழங்கப்பட்டு, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த டெண்டரைக் கோரும் அதிகாரி யார் தெரியுமா? தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருக்கக்கூடிய பாலச்சந்திரன் ஐஏஎஸ்.
உண்மையிலேயே பாலச்சந்திரன் ஐஏஎஸ், நீங்கள் ஐஏஎஸ் படித்துத்தான் வந்திருக்கிறீர்களா?

சிட்லபாக்கம் சிலை
இது ஒன்று மட்டும் கிடையாது.
சிட்லப்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள சிட்லப்பாக்கம் ரவுண்டானாவில் ‘Save Water’ என்று ஒரு சிலையை அமைத்து, ஆகஸ்ட் 10-ஆம் தேதி திறந்துவைக்கிறார்கள். அதைத் திரையில் பார்க்கிறீர்கள்.
சரத்குமார் அங்கு சென்றிருக்கிறார். பாலச்சந்திரன் ஐஏஎஸ் சென்றிருக்கிறார். அவர்கள் அந்தச் சிலையைத் திறந்துவைத்துவிட்டு, அதற்கு முன்னால் நின்றிருக்கிறார்கள். ஆகஸ்ட் 10-ஆம் தேதி என்று குறிப்பிட்டு அவர்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

இந்தச் சிலைக்கான ஒப்பந்தம், அதாவது டெண்டர் எப்போது கோரப்பட்டது?
ஆகஸ்ட் 6-ஆம் தேதி இணையதளத்தில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம்; போட்டியிடலாம்.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி முடிந்த பிறகு விண்ணப்பங்களைத் திறந்து, இவர்கள் எல்லாம் ஒப்பந்ததாரர்கள் என்று கூறி, அதில் போட்டி நடந்ததுபோல் கணக்குக் காட்டி ஒருவருக்கு ஒப்பந்தத்தைக் கொடுப்பார்களா?
இதில் என்ன நடந்திருக்கிறது?
டெண்டர் கோரும் அதிகாரியான பாலச்சந்திரன் ஐஏஎஸ், ஒப்பந்ததாரரை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டார். “நீதான் ஒப்பந்ததாரர்; நீ சிலையை செய்து நிறுவிவிடு” என்று முன்கூட்டியே கூறி, சிலையை அமைக்க வைத்திருக்கிறார்.
கூட்டுச் சதி செய்திருக்கிறார்கள். இதன் மதிப்பு என்ன?
அசோகா தூண் சிலைக்கான டெண்டர் மதிப்பு ரூ.27,30,000.
‘Save Water’ சிலைக்கான டெண்டர் மதிப்பு ரூ.18,60,000.
சுமார் ரூ.45 லட்சத்திற்கான டெண்டர்களை முன்கூட்டியே தீர்மானித்து, ஒப்பந்ததாரருடன் கூட்டுச் சதி செய்து, சிலைகளை ஏற்கெனவே நிறுவ வைத்திருக்கிறார்கள்.
இப்போது அவர்களுக்குப் பணம் வழங்குவதற்காக டெண்டர் என்று ஒன்றைப் போட்டு, போட்டி இருப்பதுபோலக் கணக்குக் காட்டியிருக்கலாம். யாராவது ஒரு ‘டம்மி’ ஒப்பந்ததாரரைக்கூட விண்ணப்பிக்க வைத்திருக்கலாம்.
தாம்பரம் மாநகராட்சி டெண்டர்கள்
இந்த டெண்டர் அவர்களுடைய இணையதளத்தில் இன்றுவரை ‘To Be Opened’ என்ற நிலையில்தான் இருக்கிறது. டெண்டரைத் திறந்திருக்கலாம். ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் எந்த டெண்டரையும் வெளிப்படைத்தன்மையுடன் காண்பிப்பதில்லை.
கடந்த 4 மாதங்களில் 565 டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அந்த 565 டெண்டர்களில் ஒரே ஒரு டெண்டர் மட்டும்தான் ‘Award of Contract’ என்ற நிலையை எட்டியதாகக் காட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ளவை வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றன. ‘To Be Opened’ நிலையிலேயே டெண்டர் திறக்கப்படாமல் இருக்கிறது. ‘Bid Opening’ என்ற நிலையும் இருக்கிறது.
‘To Be Opened’ நிலையில் 309 டெண்டர்களும், ‘Bid Opening’ நிலையில் 194 டெண்டர்களும், ‘Technical Evaluation’ நிலையில் 26 டெண்டர்களும் இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
பெரும்பாலான டெண்டர்கள், அதாவது சுமார் 90 சதவிகித டெண்டர்கள், ‘Bid Opening’ நிலையிலேயே இன்னும் திறக்கப்படவில்லை என்பதுபோலக் கணக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?
எதற்காக இப்படி மூடி மறைக்கிறார்கள்?
இதுபோன்று எத்தனை ஊழல் முறைகேடுகள் தாம்பரம் மாநகராட்சியில் நடந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.
பாலச்சந்திரன் ஐஏஎஸ், முதலில் நீங்கள் ‘Rule of Law’ மற்றும் அசோகா தூண் சிலையைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.
அசோகா தூண் எதைக் குறிக்கிறது என்பதை பாலச்சந்திரன் ஐஏஎஸ், அவர் ஐஏஎஸ் படிக்கும்போது கண்டிப்பாகப் படித்திருப்பார்.
நீதி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் குறிக்கக்கூடிய ஒரு சிலையை சட்ட விரோதமாகக் கொண்டுபோய் அங்கு வைத்திருக்கிறீர்கள்.
டெண்டர் சட்டம் என்ன சொல்கிறது?
- முதலில் டெண்டர் கோர வேண்டும்
- டெண்டர் காலம் முடிந்த பிறகு போட்டி நடைபெற வேண்டும்
- அதில் குறைந்த விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரருக்கு வேலையை வழங்க வேண்டும்.
வெள்ளம் ஏற்பட்டால் அது அவசரநிலை. அந்த நேரத்தில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அப்போது டெண்டர் கோரிவிட்டு 30 நாட்கள் காத்திருக்க முடியாது. அது இயற்கைப் பேரிடர். அதனால்தான் டெண்டர் சட்டத்தில் இயற்கைப் பேரிடர் போன்ற அவசரநிலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், சிலை வைப்பது அவசரப் பணியா?
முதலில் சிலை தேவையா என்பதே வேறு கேள்வி.
சிட்லப்பாக்கம் ஏரியில் ‘Save Water’ என்று ஒரு சிலையை வைத்தால்தான் தண்ணீரைப் பாதுகாக்க முடியும் என்ற அவசியம் கிடையாது.
அந்த ஏரிக்குள் வரும் கழிவுநீரை முறையாகத் தடுக்க வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை சிலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம். ஒரு சிலையை வைத்து ஏதோ செய்கிறீர்கள் என்ற பிம்பத்தைக் காட்டுகிறீர்கள் என்றாலும்கூட, அந்தச் சிலையை இந்த மாதமும் வைக்கலாம்; அடுத்த மாதமும் வைக்கலாம்.
ரூ.27 லட்சம் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்பிலான இந்த இரண்டு பணிகளுக்கும் முறையாக டெண்டர் கோரியிருக்க வேண்டும். ஆகஸ்ட் 24-ஆம் தேதி யார் குறைந்த விலைப்புள்ளி அளித்து வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு டெண்டரை வழங்கியிருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்கள் வந்து பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இதில் ஊழல் நடந்திருக்கிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒப்பந்ததாரரை முன்கூட்டியே முடிவு செய்திருக்கிறார்கள் என்றால், பாலச்சந்திரன் ஐஏஎஸுக்கு ஏதாவது ஆதாயம் இல்லாமல் இதைச் செய்திருப்பாரா என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு வேலையை முன்கூட்டியே வழங்க வேண்டிய அவசியம் என்ன?
“நீதான் இந்த வேலையைச் செய்து முடித்துவிடு” என்று ஒப்பந்ததாரரை முன்கூட்டியே முடிவு செய்திருக்கிறார்கள்.
சிட்லப்பாக்கத்தில் 2 நாட்களில் வேகமாகப் பணியை முடித்து, சிலையை எங்கிருந்தோ கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.
2 நாட்களில் செய்யப்பட்ட வேலைக்கு ரூ.18,60,000 செலவா? உண்மையிலேயே அந்தப் பணி அவ்வளவு மதிப்புடையதா என்ற கேள்வி இருக்கிறது.
அசோகா தூண் சிலைக்கான பணி ரூ.27 லட்சம் மதிப்புடையதா என்ற கேள்வியும் இருக்கிறது. இவை அனைத்தும் விசாரணையில் ஆராயப்பட வேண்டும்.
ஆனால், முதலில் பாலச்சந்திரன் ஐஏஎஸை அந்த இடத்திலிருந்து மாற்ற வேண்டும்; அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
சட்டத்தை மீறி, சட்டத்தின் ஆட்சியை மீறிச் செயல்படக்கூடிய பாலச்சந்திரன் ஐஏஎஸை இடைநீக்கம் செய்யுங்கள்.
முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?
முதலமைச்சர் விஜய் அவர்களே, ஊழலை ஒழிக்கப்போவதாக நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால், இவ்வளவு அப்பட்டமாக மிகப்பெரிய டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கக்கூடிய பாலச்சந்திரன் ஐஏஎஸை இடைநீக்கம் செய்யுங்கள்.
இது அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்குமான செய்தியாக இருக்க வேண்டும்.
அவருக்கு 35 அல்லது 36 வயது இருக்குமா?
இவ்வளவு இளம் வயதில் ஓர் ஐஏஎஸ் அதிகாரி, “நான் டெண்டரே கோராமல் என் விருப்பத்திற்குச் சிலையை எங்கு வேண்டுமானாலும் வைப்பேன்” என்று செயல்படும் அளவுக்கு எவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறது?
இது என்ன மாதிரியான அரசாங்கம்?
ஒருபுறம் ஊழலை ஒழிக்கப்போவதாகச் சொல்கிறீர்கள். மற்றொருபுறம் ஒப்பந்ததாரர்களுடன் இப்படிக் கூட்டுச்சதி செய்துகொண்டிருந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பாலச்சந்திரன் ஐஏஎஸை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமானது.
ஆகஸ்ட் 24-ஆம் தேதி முடிந்துவிட்டது. யாருக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அந்த ஒப்பந்ததாரருக்குப் பணம் வழங்கக்கூடாது. முதலில் பணம் வழங்குவதை நிறுத்துங்கள்.
ஒருவேளை பணம் வழங்கப்பட்டிருந்தால், முழுத் தொகையையும் திரும்பப் பெறுங்கள்.
இந்த முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
அமைச்சர் சரத்குமார் அவர்களே, நீங்கள் ஓர் இடத்திற்குச் செல்கிறீர்கள்; அங்கு ஒரு சிலையைத் திறந்துவைக்கிறீர்கள் என்றால், “இதற்கான டெண்டர் எப்போது கோரப்பட்டது?” என்பது இன்று அமைச்சர்கள் கேட்க வேண்டிய குறைந்தபட்ச அடிப்படைக் கேள்வி.
அரசியல் நிர்வாகம் அதிகார வர்க்கத்தை ஊழல் செய்யாமல் மாற்றப்போகிறதா அல்லது அதிகார வர்க்கம் அரசியல் நிர்வாகத்தை ஊழல் செய்வதற்கு மாற்றப்போகிறதா என்ற நிலையில்தான் இன்று நிற்கிறோம்.
ஒரு திருவிழாவுக்கு உங்களை அழைக்கிறார்கள் என்றால், “இதற்கான டெண்டர் கோரப்பட்டதா? முறையான நடைமுறை பின்பற்றப்பட்டதா?” என்று அமைச்சர்கள் கேட்க வேண்டும்.
கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
இதைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
முதலமைச்சர் விஜய் அவர்களே, ஊழலை ஒழிக்கப்போவதாக மீண்டும் கூறுகிறீர்கள். ஊழல் என்பது அமைப்புரீதியான பிரச்சினை.
அது வாயால் சொல்வதால் மட்டும் ஒழியாது; செயலின் மூலமாகத்தான் ஒழிக்க முடியும்.
டெண்டர்கள் அனைத்தும் சட்டத்தின்படி வெளிப்படையான டெண்டர்களாக இருக்க வேண்டும். டெண்டர் கோரப்பட்டு நடைமுறைகள் முடிந்த பிறகுதான் பணிகள் நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் மிகத் தெளிவாகக் கூற வேண்டும்.
டெண்டர்களுக்கான காலக்கெடு ஏற்கெனவே இருக்கிறது. ரூ.10 கோடிக்குக் கீழுள்ள டெண்டர்களுக்கு 15 நாட்களும், அதற்கு மேலுள்ள டெண்டர்களுக்கு 30 நாட்களும் காலக்கெடு இருக்கிறது.
அந்தக் காலக்கெடுகளைப் பின்பற்றலாம்.
ஆனால், அவசரப்பட்டு இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதுவும் சிலை அமைப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டுமா?
சிலை அமைப்பது என்ன அவசரப் பணியா?
தவெக அரசில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கும் இந்த டெண்டர் முறைகேட்டின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும் வரை அறப்போர் தொடரும்.
திருடனைப் பார்த்து எவனும் திருந்தவும் மாட்டான்;
நாம் திமிறி எழுந்தால் இனி எவனும் திருடவும் மாட்டான்.
நாம் திமிறி எழுந்தால் இனி எவனும் திருடவும் மாட்டான். இவ்வாறு ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
