தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா இன்று (செப்டம்பர் 15) வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் S.சுகன்யா, இன்று காலை 11 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் திமுக துணை பொதுச் செயலாளர் மு. பெ. சாமிநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவிடம் வழக்கறிஞர் சுகன்யா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

வேட்புமனு தாக்கலை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சாமி நாதன், “வரும் அக்டோபர் 6ம் தேதி இரண்டு தொகுதிகளின் தேர்தல் நடைபெறுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இந்நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக மகத்தான வெற்றியை பெறுவோம். அதிமுகவில் வெற்றி பெற்ற நபர் குதிரை பேரத்திற்கு ஆட்பட்டு தவெகவில் போட்டியிடுகிறார். அதற்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். மக்கள் எதிர்பார்க்காத வகையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பின்னர் கட்சியில் இணைந்த தவெக வேட்பாளரை மக்கள் புறக்கணிப்பர்.

ADVERTISEMENT

தவெக ஆட்சி அமைத்த பின்னர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற எண்ணத்தில் உள்ளனர். மின்கட்டண சலுகை என்ற பெயரில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர். என்றார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இந்த ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினாலும், சிறுபிள்ளைத்தனமான ஆட்சியாக உள்ள நிலையில் கம்யூ கட்சி இம்முடிவை எடுத்துள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினார்

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share