தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், அதனை உடனடியாக வழங்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நெடுஞ்சாலைத்துறையில் தொடர்ந்து பொறியாளர்களும் மற்ற அலுவலர்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த 13.3.2026ல் வெளியிடப்பட்ட அரசாணை படி 15.06.26 முதல் மேற்படி துறையில் மறுசீரமைப்பு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு உரிய நிதி மற்றும் புதிய அலுவலகம் பணியாளர்கள் நிரவல் மற்றும் தேவையான பணியிடம் இன்றுவரை உருவாக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சென்னை அலுவலகத்தில் இதற்குரிய பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆகஸ்ட்2026மாத ஊதியம் 15.09.26 இன்றுவரை துறையில் பணியாற்றி வரும் பல்வேறு பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்வு ஏற்படாமல் இருக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த சங்கம் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம். இந் நிலை தொடர்ந்தால் பொறியாளர்களும் மற்ற அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
