80 நாளாச்சு.. வாக்குறுதி என்னாச்சு.. குமுறும் நெடுஞ்சாலை பொறியாளர்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

பட்டய கல்வி தகுதி உள்ள சாலை ஆய்வாளர்கள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வரும் உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் பணியிட மாறுதல் நேர்மையாக நடக்கவில்லை; தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை; முதுநிலை வரைதொழில் அலுவலர், இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு இல்லை; மேலும் சாலை ஆய்வாளர் நிலை-1 பணியாளர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்க தலைவர்கள், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசுச் செயலாளரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் முன் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளர்களுக்கு நேர்மையான பொதுப் பணி மாறுதல் வழங்க வேண்டும்; இளநிலைப் பொறியாளர்களுக்கு 3:1 இடஒதுக்கீடு விதிப்படி உதவி கோட்டப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்; இளநிலைப் பொறியாளர் ஊட்டுப் பதவியில் தகுதியுள்ள DO, JDO, RI ஆகியோருக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்; இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வு தகுதியுள்ள திறன்மிகு உதவியாளர் மற்றும் சாலைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர்கள் சங்கம் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரிமுத்துவிடம் ‘மின்னம்பலம்’ சார்பில் கேட்டபோது, “தேர்தலுக்கு முன்பாகவே நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ‘உடனடியாக பதவி உயர்வு வழங்க முடியாது’ என்று நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் கூறிவிட்டார். அதன் பிறகு புதிய அரசு அமைந்ததும், ‘ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்தனர்.

வாக்குறுதியும் கள நிலவரமும்:

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்தபோது, “புதிய ஆட்சியில் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்; ஊழலுக்கு வேலையிருக்காது. பொறியாளர்களின் இடமாறுதலுக்கு இனி லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமே வராது” என்று உறுதியளித்தார். ஆனால், புதிய அரசு அமைந்து 80 நாட்களுக்கு மேலாகியும், பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

2018 முதல் முடங்கிய பொது இடமாறுதல்:

விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மூன்று ஆண்டுகள் பணியை முடித்த உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்களுக்குப் பொது இடமாறுதல் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பொது இடமாறுதலுக்குப் பிறகு, இதுவரை முறைப்படியான இடமாறுதல்கள் நடக்கவே இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டிய இடங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். ‘அனைவருக்கும் வெளிப்படையான இடமாறுதல் வழங்கப்படும்’ என்று அமைச்சர் கூறியதால், பலரும் இந்த ஆண்டு நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 11-ல் போராட்டம்:

மனிதவள மேலாண்மைத் துறையின் வழிகாட்டுதல்களை அரசு சரியாகப் பின்பற்ற வேண்டும். முந்தைய அரசைப் போலவே தற்போதைய அரசும் தாமதம் காட்டி வருவதால், ‘இந்த ஆண்டு பணியிட மாறுதல் வேண்டாம்’ என ஒருதரப்பினர் அரசுச் செயலாளரைச் சந்தித்துள்ளனர்.

எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ‘பெருந்திரள் முறையீடு போராட்டம்’ நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share