தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, கடந்த திமுக ஆட்சியில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக அரசு இத்திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும், இத்திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தது.
இத்திட்டத்தின் விரிவாக்கம், செப்டம்பர் 17 ஆம் தேதி விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இத்திட்டம் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் சென்னையில் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு இத்தொடக்க நிகழ்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
