தமிழக முதல்வர் விஜய் லண்டனில் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே பெரும் எண்ணிக்கையில் கூடிய அவரது ரசிகர்கள், TVK TVK என கூச்சலுடன் முழக்கங்களை எழுப்பினர். விஜய் ரசிகர்களின் இந்த கூட்டத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து லண்டன் போலீசார் விஜய் ரசிகர்கள் ஒன்று கூட அனுமதி மறுத்து அங்கிருந்து கலைந்து போக வைத்தனர்.

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள Shangri-La The Shard ஹோட்டலில் தங்கி உள்ளார். இந்த ஹோட்டல் மத்திய லண்டனின் London Bridge–Southwark பகுதியில் உள்ளது.
இதனை அறிந்த விஜய்யின் ரசிகர்கள், அவரை சந்திப்பதற்காக அந்த ஹோட்டல் எதிரே உள்ள வீதிகளில் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். அத்துடன் TVK TVK என பெரும் கூச்சலுடன் அவ்வப்போது முழக்கங்களையும் எழுப்பினர்.

விஜய் ஆதரவாளர்கள் திடீரென ஒன்று கூடுவதற்கு லண்டன் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையம், முக்கியமான மருத்துவமனை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு விஜய் ஆதரவாளர்கள் இடையூறாக இருந்தனர்.
இதனையடுத்து அங்கு திரண்டிருந்த விஜய் ரசிகர்கள் அனைவரையும் கலைந்து செல்லுமாறு லண்டன் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர். ஒரு கட்டத்தில் முதல்வர் விஜய்யுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜ் ஐபிஎஸ்-ம் லண்டன் போலீசாருடன் இணைந்து மைக் மூலமாக , “அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து லண்டனில் உள்ள தவெக ஆதரவாளரான @_kabilans தமது எக்ஸ் பக்கத்தில், ”லண்டன் நகரின் முக்கியமான மருத்துமனை லண்டன் பிரிட்ஜ் தொடர் வண்டி நிலையம் இரண்டும் முதல்வர் விஜய் தங்கியிருக்கும் விடுதிக்கு மிக மிக அருகே இருக்கிறது. அந்த இடத்தில் ஏராளமான மக்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு போகவும் வீட்டுக்கு வரவும் ரயில் நிலையம் நோக்கி வருவார்கள். அந்த இடத்தில் இத்தனை கூட்டத்தை கூட்டி டிவிகே டிவிகே என்று கூச்சல் எழுப்பி கொண்டு இருக்கிறார்கள், எந்த விதமான அணுமதியும் இல்லாமல் கூட்டத்தை கூட்டி இடையூறு செய்கிறர்கள். அதாவது இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் நபர்களை எல்லாம் தனியாக சந்தித்த முதல்வர் தன்னுடைய ரசிகர்களை இன்று சந்திக்கிறேன் என்று வர சொல்லி விட்டு கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று தெரிந்த உடனே இனி யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.. இதை முதல் நாளே நீங்கள் செய்திருக்க வேண்டும்.
செப்டம்பர் 15 ஆம் தேதி கூட்டம் வரும் என்று தெரிந்தே கொண்டே மிகவும் குறுகிய அதுவும் பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் கூட்டத்தை கூட்டியிருக்கிறீர்கள்
லண்டன் காவல்துறை அனுமதி வாங்காமல் இப்படி கூட்டத்தை கூட்டியது மிகப்பெரிய தவறு ஒரு நாட்டின் முதலமைச்சராக இருந்து கொண்டு மற்ற நாட்டில் விதிகளை மீறுவது மிகப்பெரிய தவறு” என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனிடையே தவெக தரப்பில், ”தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைக் காண்பதற்கு, லண்டன் மாநகர தமிழ் உறவுகள் உள்ளம் நிறைந்த அன்போடும் உணர்வோடும் ஆர்வமாக இருப்பீர்கள்! ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் உங்களைப் பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் காண்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் வெற்றித் தலைவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் காத்திருப்பது, அவர் செல்லும் வழியில் காத்திருப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
