விஜய்-திரிஷா விவகாரம்: கொந்தளித்த நடிகை அம்பிகா – பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சில்வர்ஸ்டோன் சர்க்யூட் அரங்கில் நடைபெற்ற கார் பந்தயத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தும் பங்கேற்றிருந்தார்.

லண்டன் சென்றிருந்த நடிகை த்ரிஷாவும் கார் பந்தயத்தைக் காணச் சென்றிருந்தார். அப்போது அவரும் முதல்வர் ஜோசப் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து கார் பந்தையத்தை பார்க்கும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, ‘India Tamil’ யூடியூப் சேனலுக்கு நடிகை அம்பிகா அளித்த பேட்டியின் போது, த்ரிஷா குறித்த கேள்விக்குக் காட்டமாகப் பதிலளித்தார். அதில், “த்ரிஷா லண்டனுக்கு படப்பிடிப்பிற்காகச் சென்றுள்ளார். அவர் ஏதோ ஒரு உணவகத்தில் அமர்ந்து பீட்சா சாப்பிட்டால் உங்களுக்கு என்ன? மசாலா தோசை சாப்பிட்டால் உங்களுக்கு என்ன? அல்லது கூடுவாஞ்சேரியில் தயிர் வடை சாப்பிட்டால் உங்களுக்கு என்ன? நான் ‘கீதம்’ உணவகத்தில் அமர்ந்து மசாலா தோசை சாப்பிட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாளை கேரளாவில் ‘ஆரியபவன்’ உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவேன், அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? இதெல்லாம் நமது வேலை இல்லை. தேவையில்லாமல் மற்றொருவரைப் பற்றி நாம் விமர்சிக்கக் கூடாது; அது நமது வேலை கிடையாது. நம்மைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் நமக்கு பிடிக்குமா? ‘அதையெல்லாம் நீ ஏன் கேட்கிறாய்?’ என்று திருப்பிக் கேட்போம் அல்லவா? அப்படி என்றால் எனக்கு ஒரு நியாயம், உனக்கு ஒரு நியாயமா? அது தவறானது; மற்றவர்களை விமர்சிக்கக் கூடாது,” எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ‘ஆடுகளம் சினிமா’ யூடியூப் சேனலில் பேசிய பத்திரிகையாளர் சேகுவேரா, “லண்டனில் த்ரிஷா என்பதுதான் தற்போது பரவலாகப் பேசப்படும் தலைப்பாக இருக்கிறது. லண்டனுக்குத் த்ரிஷா தனது சொந்த வேலைக்காக சென்றிருக்கலாம். அவர் லண்டன் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது, அவர் எப்போது லண்டன் சென்றார் என்ற எந்தவொரு தகவலும் யாருக்கும் தெரியாது; அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் அந்தப் புகைப்படம் வெளியாகி, அதை நான்கு பேர் செய்தியாகப் போட்டால் அதற்கு யாரும் விளக்கம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அதை இன்னொரு மூத்த நடிகை பேசும்போது, அது பார்வையாளர்களை மேலும் கவரக்கூடிய செய்தியாக மாறுகிறது.

ADVERTISEMENT

த்ரிஷா எங்கு இருந்தால் உங்களுக்கு என்ன, எங்கு சென்றால் உங்களுக்கு என்ன என்று பேசக்கூடியவர் யார் என்றால், அக்காலத்து நடிகை அம்பிகா. இவர்கள் எல்லாம் திரையுலகை விட்டு விலகி வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தொலைக்காட்சித் தொடர்களில் கூட வாய்ப்பு இல்லை; ஆனாலும் ‘நடிகை’ என்ற பேனரில் இருப்பவர்கள். இன்று பிரபலமாக இருப்பவர்கள் குறித்துப் பேசும்போது, ‘த்ரிஷா – அம்பிகா’ என்று செய்திகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இன்று த்ரிஷா எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் 80 களில் இருந்தவர்தான் நடிகை அம்பிகா..

அதைத்தவிர, ‘ஏ.ஆர். கார்டன்’ என்று சொல்லப்படும் அரசுக்குச் சொந்தமான சொத்து இவர்களுக்கு எப்படி கைமாறியது என்று இவர்கள் பேசுவார்களா? சில கோடிகளாக இருந்து, பின் 100 கோடிகளாக மாறி, இன்று 1,000 கோடி ரூபாய் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்த அந்தச் சொத்து, அம்பிகா – ராதா சகோதரிகளுக்கு எப்படிச் சொந்தமானது? இதைப் பற்றி அம்பிகா நேர்மையாகப் பேசுவாரா? மாட்டார். ஏனெனில் அது நேர் வழியில் வரவில்லை. அதைத் தாண்டி இதைப் பேசி கொச்சைப்படுத்த விரும்பவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

சேகுவேராவின் இந்தப் பேச்சுக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘Red Pix’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை அம்பிகா கூறியது:

“சமீபத்தில் நான் த்ரிஷா குறித்துக் கருத்து சொன்னதற்கு, சேகுவேரா மிகவும் அசிங்கமான, தவறான விஷயங்களைச் சொல்லியுள்ளார். ‘எம்.ஜி.ஆர் ஐயாவிடம் 25 ஏக்கர் நிலம் எழுதி வாங்கியது பத்தவில்லையா? ஏன் இந்த அம்பிகா த்ரிஷாவை ஆதரிக்கிறார்? 80-களில் இவர் என்ன த்ரிஷா?’ என்கிறார். இப்போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வேண்டும். நான் 80-களின் த்ரிஷா என்றால், அப்போது விஜய் யார்?

அந்த 25 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் எனக்குக் கொடுத்தபோது, இவர்தான் கிராம நிர்வாக அலுவலராக (Village Officer) இருந்தாரா? பத்திரப்பதிவு முடிந்தவுடன், ‘இந்த ஆவணங்களை நானே வைத்திருக்கிறேன். ரெய்டு ஏதாவது வந்தால் இந்த ஆவணங்கள் எல்லாம் சிக்கி போய்விடும்; எதிர்காலத்தில் நான் நல்ல ஊடகவியலாளராகி, மற்றவர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசிப் பிரபலமாவேன். 25 ஏக்கர் வாங்கியது பத்தாதா என்று நான் ஒரு வீடியோ வெளியிடுவேன். அப்போது நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த ஆவணத்தை வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்’ என அவரே வைத்துக் கொண்டாரா?

நான் சொல்கிறேன்.. சேகுவேராவிடம் தான் அந்த 25 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் இருக்கின்றன. அன்று அவர் என்னிடம் வாக்குறுதி அளித்தபடி, அந்த 25 ஏக்கருக்கான ஆவணங்களை என்னிடம் கொடுத்துவிட வேண்டும். நான் அந்த இடத்தை விற்று, ஒரு சகோதரன் என்ற முறையில் அதில் அவருக்கு உரிய ஒரு பங்கைக் கொடுப்பேன்,” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share