வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

திமுக எம்எல்ஏ சுதாகரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், மாநில சரிபார்ப்பு குழு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வால்பாறை தனித் தொகுதியில் திமுக வேட்பாளரான குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், “சுதாகர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருகிறார். ஆனால் தன்னை இந்து பறையர் என பொய்யான சாதி சான்றிதழை கொடுத்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். அவரது தந்தையான ஆரோக்கியம் மறைந்துவிட்டார். அவரது உடல் தேவாலய இடுகாட்டில் கிறிஸ்துவ முறைப்படி தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக பின்பற்றும் அவர், இட ஒதுக்கீட்டு தொகுதியில் போட்டியிட பொய்யான சாதி சான்றிதழை பயன்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அவரது விவரங்களை மாநில அளவிலான சரிபார்ப்பு குழு மற்றும் தேர்தல் ஆணையம் உரிய கால கெடுவுக்குள் விசாரணை நடத்த உத்தரவிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (செப்டம்பர் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வெண்ணிலா ஆஜராகி, ‘இந்து, சீக்கியம், பௌத்த மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றுபவர்கள் பட்டியல் சாதியினராக கருதப்பட மாட்டார்கள். எனவே பொய்யான தகவல்களை வழங்கி வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவிலான சரிபார்ப்பு குழு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share