தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (செப்டம்பர் 15) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கு வகிக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தன.
அந்த வகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் என்பவர் போட்டியிடவுள்ளார். 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி. சுகந்தி களமிறக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர், தமிழகம் முழுவதும் பெண்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் களம்கண்டவர்.
நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், 5 முனைப் போட்டி நிலவுவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
