தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
250 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் ‘ஜான் பிரிட்டோ’ என்பவர் மூளையாக செயல்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்று திமுக ஐடி விங் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
ஆனால் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஜான் பிரிட்டோ வேறு ஒரு நபர் ஆவார்.
இந்த சூழலில் தனக்கு எதிராக அவதூறு செய்தி பரப்பியதாக திமுக ஐடி விங் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோர் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் அவகாசம் கோரினார்.
இந்த தகவலை அமைச்சர் தரப்புக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
