அமைச்சர் பதவிக்காக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோமா? – திருமா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Thirumavalavan Press Meet May 9

திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் சிலர் விசிக மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் வெளியேறினோம் என்பதைப் போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியானது அல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி இன்று (செப்டம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, “காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைவார். நான் சென்னை திரும்பியவுடன் மருத்துவமனை சென்று நேரில் சந்தித்து நலம் விசாரிப்பேன்.

ஆர்ப்பாட்ட மேடைகளில் ஆ.ராசா மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிநபர் ரீதியாகவும், பிறப்பு குறித்தும் கொச்சையாக விமர்சித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஒருபோதும் நாகரீக வரம்பை மீறியதில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிய பேச்சு பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது என்றார்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்கள் மின் வெட்டு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவது உண்மைதான் . அரசு மின்வெட்டு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சீரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மின்வெட்டு பிரச்சனை குறித்து அமைச்சர்கள் மறுப்பது குறித்த கேள்விக்கு, “அதிகாரிகள் சொல்லும் தகவல்களை கொண்டுதான் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள் அதனால் அதிகாரிகள் முறையான,சரியான தகவல்களை அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும்.” என்றார்.

ADVERTISEMENT

இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவின் பல மாநிங்களில் தேர்தல் நேரங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்குவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த கலாச்சாரம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமற்றது. இந்த இடைத்தேர்தலில் அப்படி நடக்க கூடாது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வாய்ப்பில்லை.தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி தருவதுதான் தனது கடமை என்று கருத்துகிறது. ஆனால் இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

அரசு பேருந்துகளில் தவெக வர்ணம் பூசப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு? அது ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

மேலும் திமுகவின் விமர்சனம் குறித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் நாங்கள் நீண்ட காலமாக பயணித்துள்ளோம். நாங்கள் எப்படி பணியாற்றுவோம் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு தெரியும். ஆனால் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறோம் என்ற பெயரில் சில பேர் எங்கள் மீது தேவையில்லாத அவதூறுகளை பரப்புகிறார்கள். துரோக பட்டத்தை சூட்டுகிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்து பதவிக்காக நாங்கள் வெளியேறினோம் என்பதைப் போன்ற ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது சரியானது அல்ல. என்னுடைய தலைமைத்துவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆக இதை பார்க்கிறேன். நாலு மாதமாக இதனை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். திமுக தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருப்பதனால் அதனை நான் சுட்டிக்காட்டினேன் என தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share