அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் கடிதம் கொடுத்த திமுக கொறடா எ.வ.வேலு

Published On:

| By Kavi

அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக திமுக கொறடா எ.வ.வேலு உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வசந்தம் கார்த்திகேயன், ராஜா, காதர்பாட்சா எ முத்துராமலிங்கம் சார்பில் சட்டம் மற்றும் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அதில், ”சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பேசி அவையின் கண்ணியத்தை குறைத்து வருகிறார். 

சர்க்காரியா கமிஷன் அறிக்கையை தவறாக சித்தரித்து முதலமைச்சர் பேசிய போதே நாங்கள் அதற்கு தகுந்த எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம். 

ADVERTISEMENT

ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் மறைந்த கலைஞர் மீதும் அவருடைய செயலாளர்களாக இருந்த வைத்தியலிங்கம் மற்றும் ஏ எல் சீனிவாசன், எச்வி ராவ் உள்ளிட்டோர் மீதும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமை மீறல் கடிதம் கொடுத்த பின்னர் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். 

ADVERTISEMENT

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறுகையில்,  ”நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கவனிக்காமல், முன்னாள் முதலமைச்சரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் பற்றி அமைச்சர்கள் தவறாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். 

அவை நிகழ்வுகள் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதைப் பயன்படுத்தி, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதால், அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார். 

முன்னாள் அமைச்சர் எ.வ .வேலு பேசுகையில்,  ”உரிமைக் குழுவின் தலைவராகத் துணை சபாநாயகர் செயல்படுவார். அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து ஆய்வு செய்து, இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்திய பின்னரே உரிமைக் குழு தனது முடிவைச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும். அதன்பின்னரே சபாநாயகர் பேரவையில் அதுகுறித்த முடிவை அறிவிப்பார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வசந்தம் கார்த்திகேயன், முத்துராமலிங்கம், ராஜா ஆகியோர் சார்பில் மின் துறை அமைச்சர் மீது உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர். 

அவையில் இல்லாத நபர்களைப் பற்றிப் பேசுவது சட்டமன்ற விதிகளுக்கு எதிரானது. மேலும், அவையில் உள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவதென்றாலும், அதுகுறித்த  குறிப்பை முன் கூட்டியே சபாநாயகருக்கும்,   சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கும் வழங்கிய பின்னரே பேச வேண்டும்.

சட்டமன்றத்தில் இல்லாதவர்களை பற்றி பேசவே முடியாது.  ஆனால், இல்லாதவர்களை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். 

ஏற்கனவே முதல்வர் பேசியது தொடர்பாகவும் புகார் கொடுப்பட்டிருக்கிறது. நிர்மல் குமார் மீது மட்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறிய எ.வ.வேலு, ”எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் பழைய செய்திகளையும் தொடர்பில்லாத விவகாரங்களையும் பேசி அமைச்சர்கள் திசை திருப்புகின்றனர். டைவர்சன் பாலிடிக்ஸ் செய்கின்றனர்” என்று விமர்சித்தார்.

அவரிடம் சர்க்காரியா கமிஷன், மிசா குறித்து பேசியதை நீக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லும் போது பேரவைத் தலைவர் ஏற்கனவே இதெல்லாம் அவை குறிப்பில் இருக்கிறது. நீக்கத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, பதிலளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ”சர்க்காரியா கமிஷன் குறித்து பலமுறை மன்றத்தில் விவாதிக்கப்பட்டுவிட்டது. கலைஞர் முதல்வாராக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஏன் மீண்டும் பேச வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த 116 நாட்களில் நடந்த குற்றங்களை பட்டியலிட்டார். அதற்கு பதில் சொல்லாமல் பழைய பஞ்சாங்கத்தையே எடுத்தால் எப்படி?

அன்றைக்கு திமுக சார்பில் 418 பேர் சிறையடைக்கப்பட்டனர். ஆசிரியர் கி.வீரமணி சிறைக்கு சென்றார். எனவே தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டோம். குற்றச்சாட்டு என்பது வேறு. குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல.

அன்று அவர் படித்தது எல்லாம் குற்றச்சாட்டுதான்.

சர்காரியா கமிஷனில் சாட்சியமளித்த எம்.ஜி.ஆர் கூட தமக்கு எதுவும் தெரியாது. சேலம் வழக்கறிஞர் கண்ணன் என்னிடம் கொடுத்தார். அதை நான் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

28 குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லாததால் அவை கைவிடப்பட்டன. அதன்பின்னர் இந்திரா காந்தியே அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சர்க்காரியாவாக இருந்தாலும் சரி, மிசாவாக இருந்தாலும் சரி… மு.க.ஸ்டாலினை மிசாவில் கைது செய்வதற்கு ஏடிஜிபியாக இருந்த சனா என்பவர் தான் கையெழுத்து போட்டார்.

மிசா காலத்தில் நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் இது பதிவாகியுள்ளது.

இந்த வரலாற்றுத் தியாகங்களை பாராட்டக் கூட வேண்டாம், கொச்சைப்படுத்தக் கூடாது என்றும், அவை தொடர்பான தவறான பதிவுகளைச் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share