மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு… பக்தர்களின் பாதுகாப்பு… பிடிஆர் தாயார் ருக்மணி கேள்வி!

Published On:

| By Kavi

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் பெயர் போடாததை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பக்தர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை மறுதினம் (செப்டம்பர் 17) நடைபெற உள்ளது. 

ADVERTISEMENT

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் இந்த விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட மாநில மக்களும் வருகை தருவார்கள். 

இந்த சூழலில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் இருப்பதாக நீதிமன்றமே கூறியுள்ளது. 

ADVERTISEMENT

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ்களில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 

இது தொடர்பாக அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, “அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது. குடமுழுக்கு முடிந்தபின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம் பெற வேண்டும். கோயில் நிகழ்ச்சிகள் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

இந்த சூழலில் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்  தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் இன்று (செப்டம்பர் 15) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அவர் கூறுகையில், ”மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டிய இந்த நேரத்தில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எங்களை எந்தச் செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசியல் தலையீட்டுடன் கூடிய கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது.

அனுமதி அட்டைகளைப் பொறுத்தவரை 9,000 என்றும் 11,000 என்றும் தினமும் ஒரு எண்ணிக்கையில் தகவல்கள் வெளிவருகின்றன. மிகவும் மதிக்கத்தக்க வகையில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. யாரெல்லாம் இதில் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்கான பட்டியலை நாங்கள் தயாரித்து வைத்துள்ள நிலையிலும், கோயில் நிர்வாகம் அதைப் பொருட்படுத்தவில்லை.

இன்று நேற்றல்ல, 1963-ஆம் ஆண்டு காலம் சென்ற பி.டி. ராஜன் தலைமையில் இத்திருக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் சாத்திய குடும்பத்தின் வழிவந்த எங்களின் குடும்பத்தில், என்றைக்குமே அரசியலையும் ஆன்மீகத்தையும் நாங்கள் இணைத்துப் பார்த்ததே இல்லை. ஆன்மீகத் திருப்பணிகள் எவ்வளவு தூரம் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாங்கள், அதில் அரசியல் கலந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

பாரம்பரியமாக இறைவனுக்குத் தொண்டு செய்து வருகிறோம். எதிர்வரும் 17-09-2026 காலை 7:40 முதல் 8:10 மணிக்குள் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தை குறிப்பிட்டீர்களே? என்ற கேள்விக்கு,

”எங்களுக்கு அதைப் பற்றி எதுவும் கோயில் நிர்வாகம் சொல்லவில்லை. எங்களை எதிலுமே கலந்துகொள்ளச் செய்யவில்லை. அதைவிட முக்கியமாக நன்கொடையாளர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ் சரியாகப் போய் சேர்கிறதா என்று நாங்களே பட்டியல் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம். எங்கள் பெயர் போடவில்லை என்பதைக் கூட நாங்கள் பொருட்படுத்தவில்லை; ஆனால் பட்டியல் கொடுத்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share