முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் வீட்டுக்கு 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வருகை தந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவரது வீட்டைச் சுற்றியும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி, சென்னை உட்பட ஆறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி டி அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 117 புகார்கள் இந்த வழக்கில் பெறப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் அன்பில் மகேஷ் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
முன்னதாக நமது மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணையில், விரைவில் அன்பில் மகேஷ், மூர்த்தி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ரெய்டு நடத்தக்கூடும் என்று தெரிவித்திருந்தோம்.
இந்த சூழலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் சோதனை நடந்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு முன் திமுகவினர் குவிந்து வருகின்றனர்.
