முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாக டெண்டர் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு கேள்விகள் இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் இன்று (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கை: நேற்றைய தினம் அறப்போர் எழுப்பிய புகாருக்கு பிறகு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதை வரவேற்று இருந்தோம் மேலும் மண்டல உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்கிறோம். ஆனால் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


CSR நிதியில் இருந்து அந்த வேலை செய்யப்பட்டதாகவும் அதற்குப் பிறகு டெண்டர் போட்டது ஒரு செயல்முறை குறைபாடு என்ற முடிவுக்கு அரசு ஆரம்ப கட்டத்திலேயே வருவதற்கான தேவை என்ன?? அரசின் வாதத்தில் இருக்கும் முரண்பாடுகளை கீழே விவரித்துள்ளோம்.
- ஜூலை 14 ஆம் தேதி மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டதாக அரசு வெளியீடு குறிப்பிடுகிறது. ஆனால் மாமன்ற சந்திப்பு ஜூலை மாதம் நடைபெறவில்லை என்று அறிகிறோம். ஜூன் 11க்கு பிறகு மாமன்ற கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தான் நடந்ததாக தெரிகிறது.
- ஜூலை 23 அன்று டெண்டர் இன்வைடிங் நோட்டீஸ் விட்ட பிறகு ஜூலை 24அன்று இந்த பணிகளை CSR நிதியில் செய்வதாக ஒரு நிறுவனம் கடிதம் கொடுத்ததாக தெரிவித்துள்ளீர்கள். அந்த நிறுவனத்தின் பெயர் என்ன?
- அந்த நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் தாம்பரம் மாநகராட்சி எப்பொழுது அளித்தது?
உடனடியாக 25ஆம் தேதியே அளித்திருந்தீர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அடுத்த மூன்றே நாட்களில் அவர்கள் எப்படி அசோகா தூண் சிலையை செய்து நிறுவி ஜூலை 29ஆம் தேதி திறந்தார்கள்? - CSR மூலமாக சிலையை அங்கு நிறுவிய நிறுவனம் சிலையை சுற்றி எங்கேயுமே அவர்கள் பெயரைக் கூட பதிவிடாமல் விளம்பரப்படுத்தாமல் இருக்கும் அந்த பாரிவள்ளல் யார் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?
- சிலை நிறுவிய பிறகு ஆகஸ்ட் 6 ஆம் தேதி டெண்டர் கோரியது ஒரு செயல்முறை குறைபாடு மட்டுமே என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? அப்படியாக இருந்தால் நாங்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு இருக்கும். ஆனால் நாங்கள் நேற்று புகார் அளித்த பிறகு தான் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி பாலச்சந்தர் ஐஏஎஸ் ஆல் டெண்டர் ரத்து செய்யப்பட்ட ஆணையை நீங்கள் இங்கே காணலாம். 24 காம் தேதி வரை ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றதாகவும் ஒப்பந்த புள்ளிகள் வரப்பெற்றதாகவும் டெண்டர் ரத்து ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனவே நேற்றைய தினம் புகார் அளிக்கவில்லை என்றால் அந்த டெண்டரில் பில் பேமென்ட் நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
- மேலும் பணி ஆணை வழங்கப்படவில்லை என்று எதன் அடிப்படையில் முடிவுக்கு வருகிறீர்கள். நேற்றைய தினம் புகார் கொடுத்த பிறகு பணி ஆணை கிழித்து போடப்பட்டதா அல்லது பணி ஆணையே வழங்கப்படவில்லையா என்பதெல்லாம் விரிவான விசாரணையில் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். அரசு ஆரம்ப கட்டத்திலேயே இந்த முன்முடிவுக்கு வரும் நோக்கம் என்ன?
- CSR நிதி என்பது உண்மையா அல்லது அந்த நிறுவனத்திடம் இருந்து நேற்றைய தினம் முன் தேதியிட்டு கடிதம் வாங்கப்பட்டு இடையில் சொருகப்பட்டதா என்பதெல்லாம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய விஷயம்.
- CSR நிதி என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு டெண்டர் போடப்பட்டு நேற்று வரை ரத்து செய்யாதது எதை காண்பிக்கிறது? ஏற்கனவே வேறு நிறுவனம் செய்த வேலைக்கு டெண்டர் போட்டு இரண்டு முறை கணக்கு காண்பித்து 45 லட்சத்தை கொள்ளையடிப்பதற்காக டெண்டர் போடப்பட்டதா ?
- எனவே செயல்முறை குறைபாடு என்று அரசு இதை சுருக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மக்கள் அனைவரும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் மற்ற அரசுகள் போல கொஞ்ச நாள் கழித்து காத்திருப்பு பட்டியலில் இருந்து அவருக்கு போஸ்டிங் கொடுத்து செயல்முறை குறைபாடு என்று சொல்லி விசாரணையை முடித்து இதை ஒன்றும் இல்லாமல் செய்யப் போகிறீர்களா அல்லது இதில் இருக்கும் அப்பட்டமான விதிமீறல்களை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்களா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
