வைஃபை ஆன் செய்ததும், “சூறைக் காற்று சுற்றிச் சுழற்றி அடிக்குதே! சூழ்ந்து நின்று துயரம் எல்லாம் வாட்டுதே!”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. டோன் டவுன் வாய்ஸில் சாங்?
நம்ம டோன் எப்பவுமே நியூஸ் ஷேரிங் டோன்தான் ப்ரோ.. நாம போன வாரம் சொன்ன மாதிரியே மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டுக்கு போயிட்டாங்களே ப்ரோ.. இப்ப ரெய்டு நடத்துறது விஜிலென்ஸ் இல்லை.. சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.

போலீஸ் விளக்கம் என்ன?
இதை பத்தி ரெய்டு நடக்கும் போதே மத்திய குற்றப் பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்காங்க.. அதுல என்ன சொல்றாங்கன்னா, “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார் 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களும் விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும் புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
இவற்றில் A1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கண்ட சோதனைகளின்போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள்/பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல்/மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரின் பங்கு, நிதிப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினால் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது”ன்னு ரொம்பவே விரிவான அறிக்கையை கொடுத்திருக்காங்க..

யார் இந்த A2 முத்துக்குமார்?
இதே கேஸில் போலீஸ் ரொம்பவே தீவிரமாக தேடும் A2 முத்துக்குமார், அன்பில் மகேஷின் பள்ளி நண்பர். 2011-ல் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரா இருந்தப்ப விருத்தாசலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வா இருந்தவர்.. பின்னாடி திமுகவில ஐக்கியமாகி அன்பில் மகேஷுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். பிடி அரசகுமார் நடத்தி வந்த சங்கத்தின் பொருளாளராக இருந்தவர்.. இவருக்கு எதிராகத்தான் போலீஸ் லுக் அவுட் நோட்டீஸும் வெளியிட்டிருந்துச்சு..
அரசகுமாரின் வாக்குமூலங்கள்
இப்ப திடீர்னு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அன்பில் மகேஷ் வீட்டுக்குள் ரெய்டு நடத்திகிட்டு இருக்கு.. இதை பத்தி சென்னை போலீஸ் வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “அரசகுமாரை கைது செஞ்சு குண்டாஸ் போட்டிருக்கிறோம்.. ஜெயிலில் இருக்கும் அரசகுமார் ஏகப்பட்ட முறைகேடு விஷயங்களை வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறார்.. அதுல தான் தனியார் பள்ளிகள்கிட்ட பணத்தை வசூலிச்சு மாஜி எம்.எல்.ஏ. முத்துக்குமார், அன்பில் மகேஷ் மனைவிகிட்டதான் கொடுத்தேன்னும் அரசகுமார் சொல்லி இருக்கிறார்..
ரெய்டும் அடுத்த ஆக்ஷனும்
இந்த கேஸில ரொம்ப முக்கியமான நபர்தான் முத்துக்குமார்.. இவரை ‘தூக்கிட’னும்தான் ரொம்பவே மெனக்கெட்டோம்.. லுக் அவுட் நோட்டீஸ் எல்லாம் இஸ்யூ செஞ்சோம்.. இப்ப முத்துக்குமார் மும்பையில பதுங்கி இருக்கிற உறுதியான தகவல் கிடைச்சிருக்கு.. அதனால முத்துக்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்படுவார்..
முத்துக்குமாருக்கு எதிரான ஆக்ஷன்ஸ் தொடங்கிட்டதால இப்ப அன்பில் மகேஷ் வீட்டுக்குள்ளும் சிசிபி- மத்திய குற்றப் பிரிவு போலீசார் ரெய்டுக்கு போயிருக்காங்க.. இந்த கேஸில் முத்துக்குமார் தரப்போகும் வாக்குமூலங்கள் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கும்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

எந்த நேரத்திலும் அன்பில் மகேஷ் கைது?
அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாருன்னு தகவல் பரவுவதை பத்தி முதல்வர் அலுவலக வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “அன்பில் மகேஷ் கேஸில் இப்ப இருக்கிற சூழ்நிலையை லண்டனில் இருக்கும் சிஎம் விஜய்க்கு அப்டேட் செஞ்சிகிட்டு இருக்கிறோம்..”ன்னு சொல்லி சில கூடுதல் தகவல்களையும் ஷேர் செஞ்சாங்க ப்ரோ..
அதாவது, ”அன்பில் மகேஷுக்காக சில பேர் சிஎம் விஜய் தரப்பில பேசிப் பார்த்தாங்க.. ஆனா விஜய் தரப்பில் யாரும் கண்டு கொள்ளவில்லை.. அன்பில் மகேஷ் தரப்பு ரூ.170 கோடி அளவுக்கு வெவ்வேற பெயரில் அக்கவுண்ட்டிலேயே பணம் வாங்கி இருக்காங்க.. அதோட பள்ளிகூடங்களுக்கு பெர்மிஷன் கேட்டு வர்ற நிர்வாகிகள்கிட்ட அன்பில் மகேஷ் தரப்பு ‘பேக்கேஜும்’ பேசியிருக்கு.. அதாவது உங்க பள்ளிக்கு பர்மிஷன் தர்றது எங்க டிபார்ட்மெண்ட்.. கட்டிட அனுமதி உட்பட மத்த அமைச்சர்கள் துறைகளோட வேலைகளையும் சேர்த்து நாங்களே செஞ்சு கொடுக்கிறோம்.. அதுக்கு இவ்வளவு பணம்னு வாங்கி இருக்கிறாங்க.. அப்படிங்கிறதுதான் சிஎம் விஜய்க்கு போன ரிப்போர்ட்.
இந்த கேஸில் அரசகுமாருக்கும் அன்பில் மகேஷுக்கும் இணைப்பு பாலமா இருந்தவர்தான் முத்துக்குமார்.. இவர் தலைமறைவானதால இன்னொரு மூவ் செய்யப்பட்டுச்சு..

அன்பில் மகேஷ் மினிஸ்டரா இருந்தப்ப பள்ளி கல்வித் துறை செயலாளராக இருந்தவர் சந்திரமோகன் ஐஏஎஸ்.. அப்ப தனியார் பள்ளிகள் தொடர்பாக ஒரு GO போட்டுட்டு அதை ஒரே வாரத்துல கேன்சல் செஞ்சு பழைய GO கொண்டு வந்துட்டாங்க.. இந்த GO விவகாரத்துல பெருமளவுப் பண வசூல் நடந்திருக்குதுன்னும் புகார்கள் பதிவாகி இருக்கு.. இந்த GO விவகாரத்துல என்னதான் நடந்தது அப்படிங்கிற மொத்த தகவலையும் சந்திர மோகன் ஐஏஎஸ்-கிட்ட இருந்து வாங்கி இருக்காங்க..
சோ அன்பில் மகேஷ்க்கு எதிராக அரசகுமார், முத்துக்குமார், சந்திரமோகன் ஐஏஎஸ் வாக்குமூலங்கள்னு கேஸை ஸ்டிராங்கா பண்ணி இருக்கிறதால அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.. லண்டனில் இருக்கிற முதல்வர் விஜய்க்காக வெயிட்டிங்”ன்னு சொல்றாங்க ப்ரோ.
ஓஹோ.. திமுக சைடுல என்ன ரியாக்ஷன் ப்ரோ..
அன்பில் மகேஷ் வீட்டுல ரெய்டு நடத்துறதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிச்சு அறிக்கை வெளியிட்டிருக்காரு.. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவும் கண்டனம் தெரிவிச்சிருக்காரு…
அன்பில் மகேஷ் மீது அதிருப்தியில் ஸ்டாலின், உதயநிதி
ஆனால் சிஎம் விஜய்க்கும் போலீசாருக்கும் வேறு ஒரு தகவல் போயிருக்கிறதாம்.. இதை பத்தி நாம விசாரிப்ப, “அன்பில் மகேஷுக்கு எதிரான ஆக்ஷன் தொடங்குறப்பவே சிஎம் விஜய்க்கு ஒரு ரிப்போர்ட் வந்துச்சு.. அதுல அன்பில் மகேஷுக்கு திமுக தலைமை ஆதரவா இல்லை அப்படின்னு சொல்லப்பட்டிருந்துச்சு.. ஏன்னா, “Party Fund”ன்னு அன்பில் மகேஷ் வசூலிச்ச பணம் எல்லாத்தையும் அவரே வெச்சுகிட்டாரு.. உதயநிதியையும் அன்பில் மகேஷ் ஏமாத்திட்டாரு.. எலக்ஷன் நேரத்துல என்கிட்ட பணமே இல்லைன்னு சொல்லியே உதயநிதிகிட்ட தேர்தல் செலவுக்காக பணமும் வாங்கி இருந்தார்.. ஆனால் இப்படி வசூல் செஞ்ச விவகாரம் ஒவ்வொன்னா வெளியே வர வர உதயநிதியும் ரொம்பவே அதிர்ச்சியாகிட்டார்.. திமுக தலைவர் ஸ்டாலினும், “அன்பில் மகேஷ் இவ்வளவு செஞ்சிருக்காரா?”ன்னு ரொம்பவே கோபத்தில் இருக்கிறார்.. ” அப்படிங்கிறதுதான் அந்த தகவல் ப்ரோ..
திமுக தரப்புல நாம பேசுனப்ப, “அன்பில் மகேஷ் அமைச்சரா இருந்தப்ப ஆசிரியர் மாறுதல் உட்பட விவகாரங்களுக்கு மத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மா.செஒன்றிய செயலாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் யாரு வந்து கேட்டாலும், “சட்டப்படி- விதிகளின்படி- கவுன்சிலிங்படிதான்” எல்லாமே நடக்குதுன்னு சொல்வார்.. அதே நேரத்துல தனியார் பள்ளிகள்கிட்ட வசூலிக்க வெளி ஆட்களை வெச்சிருந்தாருன்னு தலைமைக்கு பலரும் புகார் சொன்னாங்க.. ஆனா அப்ப கட்சித் தலைமை எதுவும் செய்யலை.. கண்டுக்கவும் இல்லை.. இப்ப நமக்கு வந்த புகார் எல்லாமே உண்மைன்னு தெரிஞ்சதாலதான் ஸ்டாலினும் உதயநிதியும் அதிர்ச்சியாகிட்டாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ..
வலுவான வாக்குமூலங்கள், அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் விவரங்கள், திமுக தலைமையோட அதிருப்தி.. இதெல்லாத்தையும் கணக்கு போட்டுதான் எந்த நேரத்திலும் அன்பில் மகேஷ் கைது செய்யப்படலாம்னு சொல்றாங்க ப்ரோ..
களமிறங்கிய விஜிலென்ஸ்
அத்துடன், அன்பில் மகேஷுக்கு எதிராக விஜிலென்ஸும் களமிறங்கி இருக்கிறதாம்.. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கையும் அன்பில் மகேஷுக்கு எதிராக விஜிலென்ஸ் ரெடி செஞ்சுகிட்டு இருக்குன்னும் சொல்றாங்க ப்ரோ..

துரைமுருகனுக்கு ‘குறி’
ஓஹோ.. திமுகவுக்கு எதிரான ஆக்ஷன்ல அடுத்து சிக்க போவது யாருங்க ப்ரோ?
ஆமாங்க ப்ரோ.. மாஜி அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மூர்த்தி, சேகர்பாபுவைதான் சிஎம் விஜய் குறி வெச்சிருக்காருன்னு நாம கூட சொல்லி இருந்தோம்.. இப்ப இதுல ஒரு ட்விஸ்ட் என்னான்னா திமுக பொதுச்செயலாளரான மாஜி அமைச்சர் துரைமுருகனுக்கு குறி வெச்சிருக்கிறார் விஜய் அப்படிங்கிறதுதான்.
2023-ல் மணல் குவாரிகளை மையமாக வெச்சு தமிழ்நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு நடத்துச்சு.. அப்ப துரைமுருகன் வீட்டிலும் ரெய்டு நடந்தது.. அதுக்கு பிறகு போன 2025-லும் இன்னொரு முறை அமலாக்கத்துறை ரெய்டு நடந்துச்சு.. ரூ4,700 கோடி மணல் குவாரி முறைகேடு நடந்துருக்கு அமலாக்கத்துறை சொல்ற இந்த கேஸில் துரைமுருகனை ‘குறிவைத்துள்ளார்’ சிஎம் விஜய்.. அடுத்ததாக துரைமுருகனுக்கு எதிராகத்தான் ஆக்ஷன் இருக்கும் அப்படின்னு கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதுங்க ப்ரோ.. இப்ப 2 தொகுதி இடைத்தேர்தல் நடக்குற நிலையில திமுகவை ஊழல் கட்சின்னு முத்திரை குத்தி விமர்சிக்க இந்த ஆக்ஷன்ஸை விஜய் கையில எடுத்திருக்கிறாருன்னும் சொல்றாங்க ப்ரோ-ன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
