தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது உறுதியாகியிருக்கும் நிலையில் அந்த கட்சியிலிருந்து வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளை வீழ்த்தி புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.
அதன் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் ஆகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. எனவே விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். விசிகவும் ஐயூஎம்எல் கட்சியினரும் கலந்தாலோசித்துவிட்டு முடிவை சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனா இவ்வாறு கூறியதை தொடர்ந்து திருமாவளவன் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
எனினும் அமைச்சர் பதவி தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த சூழலில், விசிகவிலிருந்து திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
நேற்று இரவு போயல் கார்டனில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வீட்டுக்கு, விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷா நவாஸ் ஆகியோர் சென்று பேசியிருக்கிறார்கள்.
அப்போது விசிக அமைச்சரவையில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி என்பது உறுதியாகியிருக்கிறது.
தொடர்ந்து, 5, 6 துறைகள் பட்டியலை விசிகவினர் கொடுத்திருக்கிறார்கள். இதைப்பார்த்த ஆதவ் அர்ஜூனா, முதல்வரிடம் ஆலோசித்த பிறகு இதில் சில துறைகளை கொடுக்கிறோம் என்று நம்பிக்கை அளித்திருக்கிறார்.
அதோடு இரண்டு வாரியம் விசிகவுக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சிந்தனை செல்வனுக்கு ஒரு வாரிய பதவியும், பாலஜிக்கு ஒரு வாரிய பதவியும் வழங்கப்படுவது எனவும், ராஜ்யசபா எம்.பி தேர்தல் வரும் போது ஆளுர் ஷா நவாஸுக்கு எம்.பி பதவி கொடுப்பது எனவும் நேற்றைய ஆலோசனையின் போது பேசி முடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் விசிக மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில்.
இதற்கிடையே இன்று காலை தவெக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்ற 23 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
