தவெகவில் இணைந்தாரா மோசடி குற்றவாளி? – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan

சுமார் 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வின்ஸ்டார் சிவகுமார் என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு தமிழக நிதி அமைச்சரும், தவெகவின் முக்கிய நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், கடந்த 2016-ஆம் ஆண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றார்.

ADVERTISEMENT

ஆரம்பத்தில் சிலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த அவர், பின்னர் வின்ஸ்டார் பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி, ஜவுளிக்கடை, ஆம்லா சாறு இனிப்பகம், பாக்கு மட்டை தயாரிப்பு எனப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து பிரபல தொழிலதிபராக வலம் வந்தார்.

ரூ.300 கோடி மோசடி மற்றும் வழக்குகள்:

காலப்போக்கில் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சிவகுமார் ஏமாற்றத் தொடங்கினார். நெருக்கடி முற்றிய நிலையில் அவர் திடீரென தலைமறைவானார். பணத்தைத் திரும்பப் பெற முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்றதில், 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி, சிவகுமார் மீது பாலியல் வன்கொடுமை, பண மோசடி, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது எனப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த அவர், பின்னர் ‘எஸ்.ஆர்.எம் பில்டர்ஸ்’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி மீண்டும் மோசடியில் ஈடுபட்டார். ஒட்டுமொத்தமாக சுமார் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்:

இந்த நிலையில், தவெகவின் முக்கிய நிர்வாகியும், நிதி அமைச்சருமான செங்கோட்டையனை வின்ஸ்டார் சிவகுமார் நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் சிவகுமாருக்கு அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துவது போல் இருந்ததால், பெரும் சர்ச்சை வெடித்தது.

ADVERTISEMENT

அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் செங்கோட்டையன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபரும் (சிவகுமார்) வருகை தந்து வாழ்த்துப் பெற்றுச் சென்றிருக்கிறார்.

இந்த நபருக்கும் எனக்கும் முன்பின் எந்தவித அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வந்த ஒருவரை, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய அவதூறு பரப்புவோரை வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அதிரடி விளக்கத்தின் மூலம், மோசடி ஆசாமி தவெகவில் இணைந்ததாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share