தேர்தல் தோல்வியால் அண்ணா செய்த காரியம்: கனிமொழி

Published On:

| By Pandeeswari Gurusamy

kanimozhi

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்களையும், வதந்திகளையும் பகுத்தறிவோடு அணுக வேண்டும்; தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக தொய்வடைந்து விடாது என திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையில் பேசியுள்ளார்.

கோவை மாதம்பட்டி பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் இங்கர்சால் இல்ல சுயமரியாதைத் திருமணத்தை கனிமொழி எம்பி நடத்தி வைத்தார்.

ADVERTISEMENT

பெரியாரின் தடி

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய கனிமொழி எம்பி, “மணமக்கள் இருவரும் நன்றாகப் படித்து இருப்பவர்கள். மணமகன் தந்தையின் தொழிலைப் பார்க்கின்றார்; மணமகள் யு.பி.எஸ்.சி (UPSC) படித்து வருவதாகச் சொன்னார். இப்படிப்பட்ட திருமணம் 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்காது; அப்போது மணமகள், மணமகன் இருவருமே படித்து இருக்க மாட்டார்கள். இந்த நிலை வருவதற்கு பெரியார் துவங்கி திராவிட இயக்க தலைவர்கள் போராடி, பாடுபட்டார்கள் என்று புரிந்துகொள்ள வாய்ப்பாக இந்த திருமண மேடை அமைந்திருக்கிறது

சாதியின் பெயரால் படிக்கக் கூடாது, பெண் படிக்கக் கூடாது என்பதை உடைத்தவர் பெரியார். இந்த விழாவில் பெரியாரின் தடி ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள்; அந்தத் தடியை நான் மணமக்களுக்கே திரும்பக் கொடுத்துவிட்டேன். அடுத்த தலைமுறை அந்தத் தடியோடு மட்டுமல்லாமல், அந்தச் சிந்தனைகளோடு உருவாக வேண்டும்.

ADVERTISEMENT

பெரியாரின் அந்தத் தடி எப்படிப்பட்ட தடி என்றால், பெண் படிக்கக்கூடாது, இந்தச் சாதியாக இருந்தால் படிக்கக்கூடாது எனச் சொன்னவர்களை நோக்கி ஓங்கிய தடி அது. அந்தத் தடியைப் பார்த்து இன்னும் நிறைய பேர் பயந்து கொண்டு இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் ஒரு மனிதனின் பெயரைச் சொன்னால் பல பேருக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்றால், அது பெரியாரின் பெயர்தான். ‘அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் அப்படியே நம்பக் கூடாது’ எனப் பெரியார் சொல்லியிருக்கிறார்.

‘வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பொய்கள்…!’

இன்றைய காலகட்டத்தில் நாம் முக்கியமாக நம்பக்கூடாத இரண்டு விஷயங்கள் இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும்தான். ‘வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி’ (Whatsapp University) மூலமாக மக்களின் சிந்தனைகளை எப்படி மாற்றியமைக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சுதந்திரத்திற்கு முன்பே தமிழகத்தில் பெண் அமைச்சர் இருந்தார். அதன் பிறகு வந்த திமுகவின் அனைத்து அமைச்சரவைகளிலும் பெண்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இன்று ‘தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் ஒரு பெண் அமைச்சர் உருவாகியிருக்கிறார்’ என்று இன்ஸ்டாகிராமில் ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. யார் எதைச் சொல்கிறார்கள், அவர்களின் தகுதி என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ‘சாட் ஜிபிடி’ (Chat GPT) போன்ற நவீன தொழில்நுட்பங்களில் கூட தவறான தகவல்கள்தான் வருகின்றன. இதையெல்லாம் கண்டறிய நமக்கு பெரியார் சொன்ன பகுத்தறிவு தேவை” என்றார்.

அண்ணாவின் தோல்வியும்… பட்டினத்தார் படமும்!

“தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும், திருமண மேடையில் வந்து சமூக வலைதளங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நாங்கள் வந்த வழி அப்படிப்பட்டது.

பேரறிஞர் அண்ணா ஒருமுறை தேர்தலில் தோல்வியடைந்தபோது, அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அண்ணாவோ மிகச் சாதாரணமாக ‘பட்டினத்தார்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினார். தேர்தல் என்பது மக்கள் கொடுக்கும் தீர்ப்பு; அதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அதைப்பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எப்போதும் உங்களோடு நின்று பயணிப்போம்; உங்களோடுதான் எப்போதும் இருப்போம்” என நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு கனிமொழி எம்பி முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும், “ஆணும் பெண்ணும் சமம் என்ற சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்களாக, பகுத்தறிவு மிக்க அடுத்த தலைமுறையை உருவாக்கக் கூடியவர்களாக, இந்த மண் மீதும் மொழி மீதும் பற்று வைத்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடியவர்களாக மணமக்கள் திகழ வேண்டும்” என்றும் கனிமொழி வாழ்த்தினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share