“நமக்கு கூட்டணியே வேண்டாமா?” – தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

Kanimozhi

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாய்ப்பை தவற விட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில் இதற்கான காரணம் குறித்து ஆராய்வதில் திமுக கவனம் செலுத்தி வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்காக கள ஆய்வில் ஈடுபடுவதற்கு நிர்வாகிகள் நியமித்து இருக்கிறார். அதோடு தன் மீதே குறை இருந்தாலும் வெளிப்படையாக கூறுமாறும் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் தூத்துகுடியில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய கனிமொழி எம்பி , கூறுகையில் “என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், நம்முடைய கழகத் தலைவர் தளபதி அவர்களுடைய தேர்தல் தொகுதியில் அவர் வெற்றி பெறாத ஒரு சூழலை நான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல முறை நான் இதைச் சொல்லியும் இருக்கிறேன். தூத்துக்குடியின் தேர்தல் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கீதா ஜீவன் அவர்களுடன் ஒரு தெருவுக்குள் சென்றால், அங்குள்ளவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு மக்களோடு பரிச்சயமானவர். அப்படிப்பட்ட ஒருவர் நம்முடைய மாவட்ட கழக செயலாளர். ஆனாலும், சில காரணங்களால் வெற்றி வாய்ப்பை நாம் புரிந்துகொள்ள முடியாமல் இழந்திருக்கிறோம்.

ADVERTISEMENT

ஆனால், அதையெல்லாம் தாண்டி, இன்று மீண்டும் நம்முடைய வெற்றிக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், இடையில் சட்டமன்றத் தேர்தலும் வரலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, எந்தத் தயக்கமும் இல்லாமல், அதே உறுதியோடு நம்முடைய பணிகளைத் தொடர வேண்டும்.

இந்த எதிர்பாராத தோல்வி ஏன் ஏற்பட்டது? கள நிலவரத்தை நமக்குப் புரியாமல் செய்தது எது? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேட வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால்தான், நம்முடைய கழகத் தலைவர் தளபதி அவர்கள், 2 பேர் கொண்ட குழுக்களாக 30க்கும் மேற்பட்டோரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

அங்குள்ள கழக உறுப்பினர்கள், இயக்கத்தைச் சார்ந்தவர்கள், கிளைக் கழக உறுப்பினர்கள், முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் என அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து, இந்த நிலைக்கான காரணங்களை அவர்களிடம் கேட்டறிய வேண்டும். அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசும் வகையில், அவர்களுடன் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, யாரையும் குறை சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால், தவறு நடந்திருந்தால், தைரியமாகவும் தெளிவாகவும் அதைச் சொல்ல வேண்டும்.நாம் எதையெல்லாம் தவறவிட்டோம்? எதைச் செய்திருந்தால் இந்த வெற்றி நமக்கு உறுதியாகியிருக்கும்? இயக்கத்தை எந்த வகையில் சீரமைக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட உங்கள் கருத்துகளை, யோசனைகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளைப் பொறுத்தே பதவியில் இருப்பவர்கள் மறுசீரமைப்பு செய்ய முடியும்.யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காகக் குற்றம் சாட்டுவதாகவோ, விமர்சிப்பதாகவோ இதை மாற்றிவிடக் கூடாது. நம்முடைய கட்சியின் பாதையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு உங்கள் கருத்துகளைப் பகிருங்கள் என்று உங்களை அனைவரையும் வேண்டுகிறேன்.

ADVERTISEMENT

நான் பெற்ற வாழ்த்துகள் மற்றும் வெற்றிகள் அனைத்தும் உங்களுடைய உழைப்பினால்தான். நம்முடைய மாவட்டச் செயலாளர் அவர்கள், வெற்றி வாய்ப்பைப் பெறாவிட்டாலும், இரண்டு தொகுதிகளில் நமது கட்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “எல்லா இடங்களுக்கும் நான் செல்லும்போது, ஒவ்வொரு இடத்திலும் ‘இந்த முறை கூட்டணிக்கு இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்காமல் நாம் நிக்க வேண்டும்’ என்று கழகத் தோழர்கள் தொடர்ந்து கூறுவார்கள். அப்போது நான் வேடிக்கையாக, ‘நமக்குக் கூட்டணியே வேண்டாமா?’ என்று கேட்பேன்” என்றார்.

“அப்படிக் கேட்கக்கூடிய அந்த நேரத்தில்தான், கூட்டணிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அதனால் நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மைப் பலப்படுத்திக் கொண்டால், யாருமே இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெற்றி பெற முடியும். வெற்றி பெற்றுக் காட்டுவோம். நாம் யார் என்பதை விரைவில் நிரூபிப்போம்,” என்று நம்பிக்கையுடன் கனிமொழி தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share