அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் இன்று (மே 19) செய்தியாளார்களிடம் பேசிய பெ.சண்முகம், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவுக்கு வெளியிலிருந்து இடதுசாரி கட்சிகள் ஆதரவளித்தன.
அதன்படி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஆதரவை பெறுவதோ, அமைச்சர் பதவி கொடுப்பதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. அவர் (விஜய்) சொல்லும் நல்லாட்சிக்கு இது விரோதமாக அமையும்.
அதிமுக, திமுகவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே அத்தகைய ஒரு அணியின் ஆதரவை பெற்று தவெக ஆட்சியில் தொடர்வது மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக அமையும்.
அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். மீறி அதிமுகவின் ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு ஆட்சியமைக்கும் முடிவுக்கு தவெக செல்லுமானால், நிச்சயமாக எங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்வோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன.
இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் அதிமுகவின் ஒரு தரப்புக்கு சில அமைச்சர்கள் பதவி கொடுக்கப்படவிருப்பதால்தான், இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை என தகவல்கள் வருகின்றன.
