கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அவரே பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பொது சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினேன் எனக் கூறி மூன்று படங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது கனிமொழி எம்எல்ஏ ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தது குறித்து பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தப் பதிவால், அரசு அதிகாரிகளை கனிமொழி சந்தோஷ் தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பதிவில், “மூத்த அரசு அதிகாரிகளைத் தன் இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசனைகளை நடத்தும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரத்தை இந்த சட்டமன்ற உறுப்பினருக்கு யார் கொடுத்தது? அது நீங்களா?” என முதல்வர் விஜய்யையும், கோவை மாவட்ட ஆட்சியரையும் டேக் செய்து கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசு அதிகாரிகளை பிளாஸ்டிக் சேர்களில் அமர வைத்துவிட்டு கனிமொழி சந்தோஷ் சோபாவில் அமர்ந்திருப்பது “பண்ணையார்த்தன மனநிலை” என்றும் சிலர் விமர்சித்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்து கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,“எனது அன்பு மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு தகவல்…பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களைச் சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம் இன்று வரை மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சுமந்து நிற்கிறது. அந்த அலுவலகம் எனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான நினைவுகளைத் தாங்கி நிற்கும் ஒரு இடம்.
தற்போது, எனது புதிய MLA அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாகச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன்.
எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
புதிய MLA அலுவலகம் முழுமையாகத் தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து பொதுமக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன்.உங்கள் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
