பொது வாழ்வில் பத்தாண்டுகள்: ஒரு மீள்பார்வை! – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

Published On:

| By Pandeeswari Gurusamy

PTR

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து சில காலம் ஒய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுகவிற்காகவும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வாகவும், தமிழ்நாடு அமைச்சராகவும், மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக இருந்த காலத்தில தான் செய்த பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நெடிய சிந்தனைகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு நீண்ட பதிவு… புத்துணர்ச்சியுடனும் புதுவேகத்துடனும் திரும்பி வருவதற்கான ஓர் சிறிய இளைப்பாறலுக்கு முன்பாக என்று கூறி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம்:

ADVERTISEMENT

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது நீண்ட அயல்நாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு, சமூகத்தை முன்னேற்ற வேண்டும். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்துடன் தேர்தல் அரசியலில் நுழைந்தேன். பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு, நான் அளித்த முதல் நேர்காணலிலேயே மக்கள் தொண்டினைக் கடந்து, எனக்கு 3 தனிப்பட்ட லட்சியங்கள் இருப்பதாகத் தெரிவித்தேன்

முக்கிய லட்சியங்கள் அவை, 1. நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கம் மேற்கொண்ட சமூக நீதிக்கான பங்களிப்பு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவது. 2. மதுரை மக்களுக்காக எனது தந்தை மற்றும் முன்னோர்கள் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது. 3 எனது குடும்பத்தின் மீதுள்ள நற்பெயரை மேலும் வளர்த்தெடுப்பது
பத்தாண்டுகள் கழித்து எனக்கு 60 வயதாகும் போது பொது வாழ்க்கையிலிருந்து விலகி சர்வதேச கண்ணோட்டம் கொண்ட ஒரு குடிநபராக வாழ விரும்பினேன். அதாவது, 2016 க்கு முன்பிருந்த எனது முந்தைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். எப்போதும் போலவே, வாழ்க்கை என்பது ஒருவரால் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் நகர்கிறது. ஒருபுறம் எனது கட்சி, மதுரை மத்தியத் தொகுதி (சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் தமிழ்நாடு (அமைச்சராக) என பல வழிகளில் என்னால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் தவிர முன்னர் குறிப்பிட்ட எனது 3 தனிப்பட்ட இலக்குகளையும் பெருமளவில் அடைய முடிந்தது என்பதிலும் நான் நிறைவடைகிறேன்.

ADVERTISEMENT

இருப்பினும், நான் தொடங்கிய பல முயற்சிகளையும் திட்டங்களையும் என்னால் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. அமைச்சராக நான் முதலில் பதவி வகித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் (உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சீர்திருத்தம்). இரண்டாவதாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையச் சேவைகள் துறை (உதாரணத்திற்கு தமிழ்நாட்டிற்கான ஆகப்பெரிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு மேம்பாடு) என இவ்விரண்டு பொறுப்புகளிலும் என்னால் தொடங்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத சில சீர்திருத்தங்கள் மற்றும் புதிய முயற்சிகள் நிலுவையில் உள்ளன. மதுரைக்காக, விரிவான புதிய பாதாளச் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், மத்தியச் சிறையை நகருக்கு வெளியே மாற்றுவது மதுரை மெட்ரோ போன்ற முன்னேற்பாடுகளை, முழுமையான செயல்பாட்டுக்கு இன்னும் கொண்டு வர முடியவில்லை.

எனவே, 2026 ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவது என்கிற எனது திட்டத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்து திராவிட முன்னேற்ற கழக தலைவரிடம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கோரினேன். நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி, அதன் மூலம் வரவிருக்கும் 5 ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை முடித்துவிடலாம் என்று முழுமையாக நம்பினேன். அந்த வகையில் எனது கோரிக்கையை ஏற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி கூறுவேன். ஆனால் தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கைக்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. இருப்பினும், பொது வாழ்க்கையில் 10 ஆண்டுக் கால நிறைவு என்கிற இந்த முக்கியமான கட்டத்தில், இதுவரை எனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக, மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின் அமைச்சராக மற்றும் மதுரை மாநகரின் அமைச்சராக வெவ்வேறு பரிணாமங்களில் எனது பங்களிப்புகளைச் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தவிர, அது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் வாரங்களில் தொடர்ந்து வெளிவரும்!

ADVERTISEMENT

எமது கழகத்திற்கு ஆற்றிய பணிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக, எனது தலைவர் அவர்கள், என்னை 2017 ஆம் ஆண்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்குமாறு கூறினார். அப்போது முதன் முறையாக, நிர்வாகிகளாகப் போட்டியிட விரும்பியவர்களிடம் முறையாக விண்ணப்பங்களைப் பெற்று. நேர்காணல் நடத்தித் தேர்ந்தெடுக்கும் படியான முன்னோடி முயற்சியினை அறிமுகப்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்திக் காட்டினேன்.

இப்பணிக்காக, மாநிலம் முழுவதும் பலமுறை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து, தகுந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து திமுகவின் இளம் மற்றும் திறன் மிகுந்தவர்களை கொண்ட புதிய அணியை உருவாக்கினோம். பல்வேறு முயற்சிகள் மூலம், கழகத்தின் தேர்தல் தளத்தை வலுப்படுத்தினோம் திமுகவின் இணையதள இருப்பையும் பெருமளவில் விரிவுபடுத்தினோம். எனது பதவிக்காலம் முழுவதும் உலகம் முழுவதும் உள்ள ஒத்த கருத்துடையவர்களின் பெரும் ஒத்துழைப்பை நாங்கள் பெற்றோம், அதை கண்ணியம் தவறாமல் கடைப்பிடித்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முழு இணையதளப் பிரச்சாரத்தையும் நாங்கள் நிர்வகித்தோம். இதில் பல முன்னோடி அணுகுமுறைகளும் அடங்கும்.
அதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில், இணைய வெளியுடன் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகப் பிரச்சாரத்தையும் நிர்வகிக்கும் வகையில் எங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்தினோம் இரு தேர்தல்களிலும் சீரிய இணையதள நிர்வாகத்தின் மூலம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு நாங்கள் பங்காற்றினோம். இப்படி பல்வேறு பரிமாணங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உறுதுணையாக ஒருங்கிணைந்து பணியாற்றிய அணியினர் அனைவருக்கும். இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எமது பணிகள்

எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 250-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம். சுமார் 15 கோடி மதிப்பிலான சமூகப் பொறுப்பாண்மை (Corporate Social Responsibility) நிதியினைப் பெற்று, பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றினோம்.

குழந்தைகள் நலனை மையமாகக் கொண்டு 23 அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்குடன் எனது தொகுதியில் உள்ள, ஒவ்வொரு அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கினோம். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான Career Guidance Programகளை நடத்தினோம்.

பொருளாதார அடுக்கின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த 22 புதிய நியாய விலைக் கடைகள், 8 சமுதாயக் கூடங்கள். 8 இலவச பொதுக் கழிப்பறைகள், 47 ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கினோம். பொதுச் சுகாதாரம் மற்றும் மக்கள் நலனை கருத்தில்கொண்டு அதனை மேம்படுத்தும் வகையில் 24 மணி நேர மகப்பேறு சேவை வழங்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்தையும், பிற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து தினமும் 60 நோயாளிகளுக்கு சேவையளிக்கும் 3 ஸ்கேன் எந்திரங்களுடன் கூடிய மற்றொரு தனிச்சிறப்பு வாய்ந்த ஸ்கேன் மையத்தையும் உருவாக்கினோம். மேலும், CSR நிதியில் பத்து டயாலிசிஸ் எந்திரங்களை அன்சாரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைத்துத் தந்தோம். அங்கு அரசுக் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு இலவசமாகவும், பிறருக்கு குறைந்த கட்டணமாக ரூ 350க்கு டயாலிசிஸ் சேவை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தோம்:
சட்டமன்ற உறுப்பினர் மக்கள் குறை தொலைபேசி மையம் தொடங்கப்பட்டதுடன், தொகுதி முழுவதும் மக்களின் குறைகளை நேரடியாகப் பெற புகார் பெட்டிகள் 25 இடங்களில் அமைக்கப்பட்டன. மேலும், எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையம் உருவாக்கப்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட அரசுச் சேவைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. எனது பணிகள் குறித்த செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறை சமர்ப்பித்துள்ளோம். 10 ஆண்டுகளில் 20 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், எனது பணிகள் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து உங்கள் பார்வைக்கு வெளியிடப்படும்!

அமைச்சராக

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை முதன் முறை அமைச்சராகும் ஒருவருக்கு நிதி உள்ளிட்ட முக்கியத் துறைகளை ஒதுக்கிடும் துணிச்சலான முடிவை முதலமைச்சராக இருந்து எடுத்த எமது கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முற்றிலும் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன் சான்றாக, எனது நண்பர்கள் எஸ்தர் டஃப்லோ மற்றும் ரகுராம் ராஜன் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவினை உருவாக்கி, அதில் இடம்பெற்ற ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துகளையும் நான் நேரடியாகப் பெற்று, அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து நிதி மேலாண்மையில் முந்தைய 20 ஆண்டுகளில் இல்லாத பெரும் மாற்றத்தை வெறும் இரண்டு ஆண்டுகளில் கொண்டு வந்தோம்.

எடுத்துக்காட்டாக, நிதி மறுசீராய்வுத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி செலவிடப்படாத அரசு நிதி மீட்டெடுக்கப்பட்டது, தரவு இணக்கத்தை மேம்படுத்தத் தணிக்கைச் சீர்திருத்தங்கள், வழக்கு மேலாண்மையைச் சீர்திருத்த ஆலோசனை மற்றும் மேற்பார்வைக் குழுவை உருவாக்கி, அதன் மூலம் அரசுக்குப் பல ஆயிரம் கோடி செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தவிர பல்வேறு ஆலோசனை மற்றும் சீர்திருத்தக் குழுக்கள் (எ.கா. ஜி.எஸ்.டி) உருவாக்கப்பட்டன. இத்தகைய முன்னெடுப்புகள் மூலம், கோவிட் 2 மற்றும் 3 அலைகள் இருந்தபோதிலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய அளவிற்கு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டது. முந்தைய ஆண்டை விட கடன் வாங்குதல் ரூபாய் மதிப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நிதி மேலாண்மையில் மிகச் சிறந்த முன்னேற்றத்தை வழங்க முடிந்தது. அந்த 2 ஆண்டுகளில் எனக்கு ஆதரவளித்த எனது முதலமைச்சர் மற்றும் நிதிச் செயலாளர்கள் மற்றும் குழுவினருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அவர்கள் இல்லாமல் இவை எதுவுமே சாத்தியமாகி இருக்காது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரவு அடிப்படையிலான நிர்வாகமே நான் நிதி அமைச்சராக முன்மொழிந்த சீர்திருத்தங்களின் மையமாக இருந்ததால், நான் நிதியமைச்சராக முன்முயற்சி எடுத்துத் தொடங்கிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றை தற்போது குறிப்பிட விரும்புகிறேன்
தமிழ்நாட்டில் தொழில்நுட்பத்தை ஆழமாக துரிதபடுத்தும் காரணியாக விளங்கிய வகையில், ITNT மையப் பணிகளை நான் இங்கு குறிப்பட்டாக வேண்டும். சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் வகையில் உலகளாவிய தொழில்நுட்ப மாநாடாக UMAGINE உச்சி மாநாட்டை நடத்தினோம். தொழில்நுட்பத்தை ஆழமாக துரிதபடுத்தும் மற்றும் AVGC-XR ஊக்குவிப்புக்கான கொள்கைகளை உருவாக்கினோம் இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையை 400+ வரை உயர்த்தினோம். சேவை மையங்களின் எண்ணிக்கையை 8,000-க்குக் கீழ் இருந்ததை 30,000-க்கும் மேலாக விரிவுபடுத்தினோம்.

எல்காட் SEZ பூங்காக்களுக்குப் பல புதிய நிறுவனங்களைக் கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம் அனைத்திற்கும் மேலாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (TNeGA) தரவுத் தொகுப்பு, தூய்மைப்படுத்துதல் கல்வி உதவித்தொகை முதல் உரிமைத் தொகை வரையிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கான மேலாண்மை கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் கடந்த ஆண்டுகளில் மட்டும் 40,000 கோடி மதிப்பிலான நேரடிப் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் அளவிற்கு மிக முக்கிய நிர்வாகக் கட்டமைப்பாக உருவாக்கியதை எனது முக்கிய பங்களிப்பாகக் கருதுகிறேன்.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் தமிழ் இணையக் கல்விக் கழகம் செலவுக்கு ஏற்ற விளைவுகள், புத்தாக்கங்கள் மற்றும் ஆழமான பண்பாட்டு மதிப்புமிக்க நிறுவனம் என்று கூறுவேன். இந்நிறுவனத்தின் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தாய்மொழி கற்பித்தல் பல மடங்கு முன்னேற்றமடைந்தது. தமிழ் இணைய நூலகத்தின் உள்ளடக்கங்களும் பல மடங்கு விரிவடைந்து அதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்து 17 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

இறுதியாக, தமிழ்க் கணினித் துறையில், குறிப்பாக தமிழ் கற்றல் மாதிரிகள் மற்றும் AI-க்கான புத்தாக்க முயற்சிகள் மேம்படுத்தப்பட்டன. இவற்றையெல்லாம் சாத்தியமாக்கிய அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது உள்ளார்ந்த நன்றி!

ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 2021இல் ஜி.எஸ்.டி கவுன்சிலின் உறுப்பினராக என்னை நியமித்தார்கள். நான் பிப்ரவரி 2023 வரை அக்கூட்டங்களில் பங்கேற்றுத் திறம்படச் செயலாற்றினேன் இது மிகவும் முக்கியமான தலைப்பு என்பதால், இது குறித்து விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், அந்தக் கூட்டங்களில் எனது பங்களிப்பின் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வலுவான குரலாக என்னுடைய குரல் ஒலித்தது! ஜி.எஸ்.டி கவுன்சிலிலும் அதன் அமைச்சர்கள் குழுக்களிலும் (GoM) நான் முன்வைத்த கருத்துகள் ஜி.எஸ்.டி குறித்த மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அக்குழுவில் எனது பதவிக்காலம் முழுவதும் கட்சி மற்றும் மாநிலம் கடந்து -நட்பு பாராட்டியதற்கும் ஆதரவு வழங்கியதற்கும் மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் எனது சக மாநில அமைச்சர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அமைச்சராக மதுரைக்கு நான் ஆற்றிய பணிகள்

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, கோரிப்பாளையம் மற்றும் வண்டியூர் மேம்பாலங்கள், வண்டியூர் பூங்கா மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதியில் பழைய குடியிருப்புக்கு மாற்றாக 9 மாடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு உள்பட, மதுரையில் பல பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினேன். இதில் எனது தொகுதியில் சுப்பிரமணியபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 396 நவீன வீடுகள் கட்டப்பட்டு அவற்றை மக்களிடம் ஒப்படைத்தோம்.
அப்பயனாளிகளில் 280 குடும்பங்கள் ஏற்கனவே அதே பகுதியில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி மதுரை மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். 2023 செப்டம்பர் மாதம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் வகுப்பு வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. எச்.டி.எஃப்.சி. (HDFC) போன்ற முக்கிய வங்கிகள், எச்.சி.எல். (HCL) மற்றும் செயின்ட் கோபைன் (Saint-Goban) போன்ற நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் நிதியைப் பெற்று இந்த விரிவாக்கத்தை நான் சாத்தியப்படுத்தினேன். இத்திட்டம், 2023 முதல் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் இடைவெளியின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிற திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடுவேன்.

2026 தேர்தல்: மதுரை மத்திய தொகுதி

கடந்த 10 ஆண்டுகளில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும். தொகுதிக்கும் நான் ஆற்றிய பணிகள் மற்றும் முன்பை காட்டிலும் பலமானதான கூட்டணி ஆகியவற்றின் அடிப்படையில், நான் இந்த தேர்தலில் தோல்வியடைவேன் என்று கற்பனை கூட செய்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனது தொகுதியின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் எனது பங்களிப்பிற்கான ஆதாரத்தை காண முடியும் என்று என்னால் உறுதியுடன் கூற முடியும். மேலும், எனது பணி எனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குழுவினர் அடுத்த சில வாரங்களில் அந்த விவரங்களை தெளிவாகப் பதிவிடுவார்கள். எனவே நான் உரிமையுடன் கூறும் இந்த விஷயங்கள் ஆதாரங்களோடு பதிவிடப்படும்.

அதிமுக மற்றும் தவெக (TVK) ஆகிய கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்களிலேயே ஏராளமான சிக்கல்கள் இருப்பது எனக்கு முன்னதாகவே தெரிய வந்தது. தவெக-வின் திரு மாதர் பதுருதீன் (முஸ்தபா தன்னைத் தகுதி நீக்கம் செய்யும் நோக்கில் தனது பிரமாணப் பத்திரத்தில் வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தாக்கல் செய்ததாகத் தெரிய வந்தது. ஆதாரமாக, அவரது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுவில் கூட, அவரது மனைவியின் PAN எண் போன்ற அடிப்படைத் தகவல்கள் தவறாக உள்ளன. 10 இலக்கங்களுக்குப் பதிலாக 9 இலக்க PAN எண் வழங்கப்பட்டிருப்பதை பலர் சுட்டிக் காட்டுகின்றனர். அதேபோல் அதிமுக புதிய நீதிக் கட்சி) திரு. சுந்தர் சி தனது சொத்துக்களில் 3 பெரிய நிறுவனங்களை (AVNI CINEMAX, AVNI TELEMEDIA, AVNI MOVIES) பட்டியலிடத் தவறிவிட்டார். இது திருமதி குஷ்பு சுந்தரின் 2021 வேட்புமனுத் தாக்கலிலும் இருந்த மோசமான குறையாகும். இந்தத் தகவல்கள் உண்மை என்று நான் நம்பினாலும் (இப்போதும் நம்புகிறேன்), எனது முதன்மை எதிரிகளைத் தகுதி நீக்கம் செய்யக் கோருவதன் மூலம் தேர்தல்களின் ஜனநாயகச் செயல்முறையை இடைமறிக்க நான் விரும்பவில்லை. தோல்வியடைந்த பிறகும், அவர்களின் வேட்புமனுவை எதிர்க்காததற்காக நான் வருந்தவுமில்லை.

மேலும், ஒரு வாக்குக்கு 1,000 ரூபாய் கொடுத்த வேட்பாளரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே அத்தோடு, எங்களை வீழ்த்திய அலை, சாதி, மதம் அல்லது பணத்தால் தூண்டப்பட்டது அல்ல, 2026 வரை, மதுரை மத்திய தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 5 தேர்தல்களில் (2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல், 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2022 உள்ளாட்சித் தேர்தலின் அனைத்து 16 வார்டுகளிலும்) வெற்றி பெற்றன, மேலும் பெரும்பாலான தேர்தல்களில் மதுரை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் எங்களது தொகுதி அதிக வாக்கு சதவீதத்தையும், வாக்கு வித்தியாசத்தையும் கொண்டிருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையின் விளைவுகளை நாங்கள் எதிர்கொள்வது உறுதி என்பது தெரிந்ததுதான், எனவே இந்த தோல்வியைக் கனிவோடு ஏற்றுக்கொள்கிறேன். நாம் சுய பரிசோதனைக்கு நம்மை உட்படுத்தி. இந்த நிலையிலிருந்து முன்னேற வேண்டும். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், வாக்குகளுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்ற எனது கொள்கையில் உறுதியாக இருந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். கடந்த பத்தாண்டுகளில் நான் ஆற்றிய சேவைகளைத் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல் எனக்கு வாக்களித்த 44,286 வாக்காளர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் வாக்களித்த நீங்கள், நான் கொண்டிருந்த கொள்கைகள் மீதான எனது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறீர்கள். இறுதியாக, வெற்றியை விடக் கொள்கைகளே எனக்கு முக்கியம்

2026 பொதுத் தேர்தல்

2016 இல் நான் தேர்தல் அரசியலில் நுழைந்ததிலிருந்து மூன்று பேரியல் போக்குகளை(Macro Trend எதிர்பார்த்தேன் 1 நேரடி கள அரசியலுக்குப் பதிலாக மின்னணு இணையதள பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் (எ.கா. 2018 இல் எனது Puram Politics” Podcast நேர்காணலில் இதைக் கூறியுள்ளேன்) 2. குறிப்பாக, இணையத்தில் குறிப்பிட்ட தரப்பினரைத் துல்லியமாகக் குறிவைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் (செயற்கை நுண்ணறிவு Artificial intelligence Al) காலத்தில் உள்ளடக்கத்தை விட வடிவம்’ முக்கியத்துவம் பெற்று வருவதன் ஆபத்தையும் 2023 முதல் பல்வேறு பொது உரைகளில் தெரிவித்துள்ளேன்) 3. தற்போதைய தி.மு.க. / அதி.மு.க. எனும் இரு துருவ அரசியலின் முடிவு மற்றும் ஒரு புதிய தலைமுறையின் தொடக்கம் நிகழும் எனவும் கணித்திருந்தேன்.

உண்மையில், 2026 பொதுத் தேர்தலில், தவெக பெற்ற மாநில அளவிலான வாக்கு சதவிகிதம் 15% வாக்குகளைப் பெற்றால், அது பழைய தலைமுறையின் கடைசித் தேர்தலாக இருக்கும் எனவும்: 25% வரை வாக்குகளைப் பெற்றால், அது புதிய தலைமுறையின் முதல் தேர்தலாக இருக்கும் என்றும் நான் கூறினேன். ஆனால், 35% வரை வாக்குகள் கிடைத்த ஒரு சூழ்நிலையை நான் ஒருபோதும் கணிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையில், மூன்று போக்குகளின் அளவு மற்றும் வேகத்தை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் நாம் நிச்சயமாக ஒரு புதிய காலகட்டத்தில் இருக்கிறோம். தவிர, நம்மில் சிலர் தனிப்பட்ட இழப்பின் மூலம் இந்த மாற்றத்தை அனுபவித்திருக்கிறோம் களத்தில் உள்ள நாம் அனைவரும் இப்போது புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும். நம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டும். மாற்றம் மட்டுமே மாறாதது. புதிய மாற்றத்திற்குத் தகவமைக்க முடியாதவர்கள் பொருத்தமற்றவர்களாகி விடுவர்.

புதிய அரசு

தமிழ்நாடு அரசு த.வெ.க. தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தாலும், அது தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான அரசு என்று முதலமைச்சர் திரும்பத் திரும்பச் சொன்னார். நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் வெற்றி இன்றியமையாதது எனவே, புதிய முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை, குறிப்பாக நிதி போன்ற முக்கியத் துறையை வகிக்கும் அமைச்சர் திரு கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள். இந்த ஆட்சிக் காலத்தில் நமது மாநிலத்திற்கும் மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

போர்கள், உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை, புதிய புதிய பெருந்தொற்றுகள் ஏற்படும் உலகளாவிய சுகாதாரச் சூழல் என நிச்சயமற்ற உலக ஒழுங்கில் இந்த அரசு பதவி ஏற்றுள்ளது. மாற்றம் தவிர்க்க முடியாதது அது இடைவிடாதது என்ற உலகளாவிய உண்மையை இது நினைவூட்டுகிறது. எனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த, நான் ஓர் ஆலோசனையை வழங்குகிறேன். மாற்றங்களுக்குத் தயாராகாத தேக்கநிலை என்பது அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் குறிப்பாக அரசு அலுவலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் இயல்பான போக்காகும். ஏற்கனவே செய்த அதே செயல்களைச் செய்வதில் அனைவரும் வசதியாக உணர்கிறார்கள். ஆனால் இத்தகைய அணுகுமுறைதான் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின், குறிப்பாகக் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியத் தோல்வியாகும் (இதுகுறித்து மேலும் விரிவாக நான் எழுதி வரும் நூலில் விரிவாகக் கூறுவேன்). இந்த அரசு வெற்றி பெற வேண்டுமானால், இந்த மனநிலைக்கு எதிராகப் போராட வேண்டும். அரசாங்க செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் துணிச்சலாகச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க இப்புதிய தொடக்கத்தை புதிய வாய்ப்பை பயன்படுத்துங்கள். அத்தகைய அணுகுமுறை இல்லை என்றால், நீங்கள் முன்னேற்றத்திற்குப் பதிலாகப் பின்னடைவைச் சந்திப்பீர்கள் என அஞ்சுகிறேன்.

ஒரு சிறிய இடைவேளை – மீண்டும் புதுவேகத்துடன் வருவதற்காக..

நாள் மற்றும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் எனது குழுவினருடன் உழைப்பைச் செலுத்த வேண்டிய தொடர்ச்சியான பணியாக இருந்த 10 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் பணிக்குப் பிறகு, நேரம் மற்றும் கால அட்டவணையில் எனது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் சில வார விடுமுறையை நான் எதிர்நோக்குகிறேன்.

இந்தியா முழுவதிலுமிருந்து என்னை உரையாற்றுமாறு கேட்டு வந்த பல அழைப்புகளை, நேர நெருக்கடியால் அப்போது என்னால் ஏற்க முடியவில்லை. இப்போது அவற்றை ஏற்க முடியும் எனது அமைச்சரவைப் பதவிக்காலத்தில், விரிவுரையாற்ற அல்லது நிகழ்வுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்ல எனக்குப் பல சந்தர்ப்பங்களில் தேவையான அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே இந்த இளைப்பாறல் காலம் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டிருந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு வாய்ப்பளிக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹார்ப்பர் காலின்ஸ்’ (Harper Colins) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள புத்தகத்தை எழுதுவதில் நான் திட்டமிட்டதைவிடப் பின்தங்கியுள்ளேன். எனவே இந்த நேரத்தை அதற்குப் பயன்படுத்துவேன். அண்மையில் 60 வயதை எட்டிய நிலையில், எனது ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்த ஒரு முறையான கால அட்டவணை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். அடுத்த சில வாரங்கள் எனது குழுவினர், பொது வாழ்க்கையில் எனது பத்து ஆண்டு கால மிக முக்கியமான முயற்சிகள் நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களை வெளியிடுவார்கள்.

என்னால் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்பதற்கான சான்றாக அவைகள் இருக்கும் மதுரை மத்திய தொகுதி வாக்காளர்கள் தொடங்கி, இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த எனக்கு உதவிய அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறிது காலத்திற்கு குறைந்தபட்சம் அடுத்த தேர்தல் வரை நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்திற்கு நான் பழகி வருகிறேன். ஆனால், மக்கள் பணி மீதான எனது ஆர்வமும் மாற்றத்திற்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னிடம் துளியும் குறையவில்லை.

நான் மீண்டும் வருவேன் புத்துணர்ச்சியுடனும் புதுவேகத்துடனும்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share