60 ஆண்டுகால ரத்த களரிக்கு முற்றுப்புள்ளி.. இந்தியாவில் முடிவுக்கு வந்தது நக்சல் தீவிரவாதம்.. அமித்ஷா அதிரடி பிரகடனம்!

Published On:

| By Mathi

Naxalism Amit Shah

இந்தியாவில் 60 ஆண்டுகால நக்சல் தீவிரவாதம் (Naxalism) முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) பிரகடனம் செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தல்பூரில், மத்திய ஆயுதக் காவல் படையினர், நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை நேற்று மே 18-ந் தேதி சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: இந்தியா இப்போது நக்சல் வன்முறையிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது என்று பெருமையுடன் கூற முடியும். 60 ஆண்டுகளாக ரத்தக்களரி, பின்தங்கிய நிலை மற்றும் இளைஞர்களின் பாழான எதிர்காலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நக்சல் பகுதிகளின் இந்த இருண்ட காலம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

வாழ்நாளில் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட இந்த இலக்கு, பாதுகாப்புப் படையினரின் வீரத்தால் கடந்த 4 ஆண்டுகளில் சாத்தியமாகியுள்ளது.

ADVERTISEMENT

நக்சல் (Naxalism) ஒழிப்பு வரலாற்றில்

  • ஜனவரி 21, 2024: சத்தீஸ்கரில் புதிய அரசு அமைந்த பிறகு நக்சலிசம் குறித்த முதல் கூட்டம் நடைபெற்ற நாள்.
  • ஆகஸ்ட் 24, 2024: மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்ட நாள்.
  • மார்ச் 31, 2026: இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டு, பஸ்தர் பகுதி நக்சல் இல்லாத பகுதியாக மாறிய நாள் ஆகியவை மிக முக்கியமானவை.

சேவை மையங்களாகும் பாதுகாப்பு படை முகாம்கள்

சத்தீஸ்கரில் உள்ள சுமார் 200 CAPF முகாம்களில், 70 முகாம்கள் ‘ஷஹீத் வீர் குண்டா துர் சேவா தேரா’ முகாம்களாக மாற்றப்பட்டு, அவை பிராந்திய வளர்ச்சி மையங்களாக மேம்படுத்தப்படும்.

இந்த மையங்கள் மூலம் 370 அரசு நலத்திட்டங்கள் ஆன்லைன் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.

ADVERTISEMENT

இந்த மக்கள் சேவை மையங்களில் (Jan Seva Kendra) ரேஷன் கார்டுகள், அடையாள அட்டைகள் (ஆதார் கார்டு போன்றவை) தயாரித்தல், மானிய விலை தானியங்கள் கிடைக்காவிடில் புகார் அளித்தல், வங்கி கணக்குகளை இயக்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

இவை பால் சேகரிப்பு மையங்களாகவும், விவசாய வழிகாட்டுதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் முதியோர் கல்வி மையங்களாகவும் செயல்படும். தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (NID) உதவியுடன் 3 மாதங்களில் இதற்கான முழு செயல்திட்டம் தயாரிக்கப்படும்.

3,000 நக்சல்கள் சரண்

சரணடைந்த சுமார் 3,000 நக்சல் இயக்க உறுப்பினர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ஆரம்பக்கட்டமாக ₹20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ விரிவான மறுவாழ்வுத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை அடுத்த 5 ஆண்டுகளில் ஈடுசெய்து, நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக பஸ்தரை கொண்டு வர சாலைகள், வங்கி, தபால், எரிவாயு, குடிநீர், மின்சாரம் போன்ற அனைத்து உள்கட்டமைப்புகளையும் உள்துறை அமைச்சகம் உறுதி செய்யும்.

பாதுகாப்பு படை நடவடிக்கைகள்

ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் (Operation Black Forest): 45 டிகிரி கடுமையான வெயிலிலும், ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த போதிலும், வீரர்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் மலைகளில் ஏறி மாவோயிஸ்ட் முகாம்களை அழித்தனர். இந்த நடவடிக்கையே பஸ்தரை நக்சல் இல்லாத பகுதியாக மாற்ற அடித்தளமிட்டது.

ஆபரேஷன் பிரஹார், ஆபரேஷன் ஆக்டோபஸ் மற்றும் ஆபரேஷன் டபுள் புல் போன்ற நடவடிக்கைகள் ஜார்கண்ட், பீகார் முதல் பஸ்தர் மற்றும் தெலுங்கானா வரை உள்ள பரந்த பகுதிகளை மீட்டெடுத்துள்ளன.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

நக்சலிசம் என்பது என்ன?

  • 1967-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள ‘நக்சல்பாரி’ (Naxalbari) என்ற கிராமத்தில் விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையேயான ஆயுத மோதலில் பிறந்தது நக்சல்பாரி இயக்கம் என்ற நக்சலிசம்.
  • சாரு மஜும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்களால் இந்த இயக்கம் உருவானது.
  • சீனப் புரட்சியின் தலைவரான மாவோ சேதுங்கின் (Mao Zedong) கொள்கைகளை பின்பற்றக் கூடியவர்கள் என்பதால் மாவோயிஸ்டுகளாகவும் அழைக்கப்பட்டனர்.
  • ஜனநாயக அமைப்பிலான தேர்தல்கள், அரசு நிர்வாகங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் “ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்” என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டவர்கள் நக்சலைட்டுகள்.
  • பெருமுதலாளிகள் மற்றும் அரசுக்கு எதிராக ஏழை விவசாயிகள், பழங்குடி மக்களைத் திரட்டி ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் நக்சலைட்டுகள் என்ற மாவோயிஸ்டுகள்.
  • இந்தியாவில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகள் ‘சிவப்பு காரிடார்’ (Red Corridor) என்று அழைக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிராவின் மலைப் பகுதிகள் இதில் அடங்கும்.

2025 டிசம்பர் 13-ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை

நக்சலிசம் முடிவுக்கு வருகிறது என கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 13-ந் தேதி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில்,

இந்தியாவில் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை 2014-இல் 126 ஆக இருந்த நிலையில், 2025-இல் அது வெறும் 11 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 36-லிருந்து வெறும் 3 ஆகக் குறைந்துள்ளன. இதன் மூலம் நக்சலைட்டுகளின் “சிவப்பு காரிடார்” (Red Corridor) முற்றிலும் அழியும் நிலையை எட்டியுள்ளது.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியிருந்த நக்சல் வன்முறைகள் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வன்முறை சம்பவங்கள்: 53% குறைந்துள்ளது (16,463 சம்பவங்களில் இருந்து 7,744 ஆகக் குறைவு).

பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழப்பு: 73% குறைந்துள்ளது (1,851-லிருந்து 509 ஆகக் குறைவு).

பொதுமக்கள் உயிரிழப்பு: 70% குறைந்துள்ளது (4,766-லிருந்து 1,495 ஆகக் குறைவு) என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share