அதிமுக (AIADMK) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS).
சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதிமுகவின் 22 எம்.எல்.ஏக்கள், கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக சட்டசபையில் வாக்களித்தனர். எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள், முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மே 19-ந் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி திடீர் முடிவு!
ஆனால் திடீரென இந்த கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள் வருகை தந்தனர். சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
