அரசு வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வை (Senthil Balaji) விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை (ED) கடிதம் அனுப்பி உள்ளது.
வழக்கு என்ன?
- 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி.
- இப்பதவி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தார் என்பது குற்றச்சாட்டு.
- செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், தனி உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருக்கிறது.
- இவ்வழக்கில் 2023-ம் ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
- ஓராண்டுக்குப் பின்னர் 2024-ம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.
தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை (eD) கடிதம் ஏன்?
- செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரிடம் அடுத்த கட்ட விசாரணைகள் நடத்த மாநில அரசின் அனுமதி தேவை. இது தொடர்பாக 2025-ம் ஆண்டு மே 25-ந் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
- ஆனால் 2025 அக்டோபரில் ஆளுநருக்கு அப்போதைய தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தில், மாநில அரசுதான் அரசு ஊழியரை விசாரிக்க முடியும்; அமலாக்கத்துறை தமிழக அரசுக்குதான் கடிதம் எழுத வேண்டும் என தெரிவித்திருந்தார்.
- இதனை ஏற்று 2026-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பிய அமலாக்கத்துறை கடிதம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
- இந்நிலையில் தற்போது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. இக்கடிதத்துடன் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவரங்களின் ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தருமா? என்பது விரைவில் தெரிய வரும்.
