திமுக (DMK) தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் காங்கிரஸ் (Congress) மீதான விமர்சனங்கள் சர்ச்சையாகி உள்ளது.
காங்கிரஸை கடுமையாக ஒருமையில் விமர்சித்ததால் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இன்றைக்கு குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மதசார்பற்ற கூட்டணி என்பது கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, அதுபோல இந்திய தேசிய காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அத்தனை கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டாங்க.
ஓடிப் போன காங்கிரஸ் (Congress)
காங்கிரஸ்ல ஒரு 5 பேர் ஜெயிச்சான். எப்படி ஜெயிச்சான்? 5 பேர் ஜெயிச்சான். எத்தனை பேரு? 27 வேட்பாளரை நிறுத்தி 5 பேர் ஜெயிச்சாங்க.
இன்றைக்கு நம்ம வந்து அந்த நடிகனைப் பற்றி பேசுவதை விட, இந்த துரோகிகளாகச் சென்றிருக்கின்ற காங்கிரஸ்காரர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அல்வா கொடுத்த ராகுல் காந்தி
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எங்க தலைவரு, ராகுல் காந்தியை கட்டி அணைச்சு ‘என் பிரதர்’ அப்படின்னு சொன்னபோது, எவனும் சொல்லாமல், எந்த மாநிலத்திலும் சொல்லாத வகையிலே ‘அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்’ என்று உன்னைச் சொன்னாரே, அதை மறந்துட்டியா?
நீ கோயம்புத்தூர்ல ஓடி வந்து அல்வா ஸ்வீட்டா? அல்வா வாங்கிட்டு வந்து எங்க தலைவருக்கு அல்வா கொடுத்துக் கட்டிப்பிடிச்சியே, அதை மறந்துட்டியா? அட துரோகி பயல்களா!காங்கிரஸ்காரங்களா!
ஜெயிச்ச 5 பேரும் உடனே அங்க ஓடி இருக்கீங்களே, உங்களைப் போன்ற துரோகி நாட்டுல உண்டா?
இன்னைக்கு ராகுல் காந்தி அவர்கள், ‘நான் அடுத்த பிரதமராக வருவேன்’ என்று சொல்கிறார் என்று சொன்னால், எப்படி வருவார்? எப்படி வருவார்?
மத அடிப்படையில் ராகுல் காந்தி முயற்சி
இவங்க எல்லாம் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியுமா? மத அடிப்படையில எப்படியாவது வேஷம் போட்டு, இங்க தமிழ்நாட்டுல நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்திடலாம்ங்கிற கனவு காண்கின்ற வகையிலே ராகுல் காந்தி இருக்கின்றார் என்று சொன்னால், ராகுல் காந்தி அவர்களே, தமிழ்நாடு மக்கள் உங்கள் முகத்திலே கருப்பைப் பூசுவார்களே தவிர, எந்த ஒரு வெற்றியும் நீங்கள் பெற முடியாது.
உங்க அம்மா சோனியா அம்மாவை ஒன்னும் சொல்லக்கூடாது, அது நல்ல அம்மா. அதே அந்த அம்மா நல்ல அம்மா. உங்க பாட்டி இந்திரா காந்தி அம்மா அவர்களையே சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகம்.
எவ்வளவு பெரிய துரோகம் செய்தீங்க? 5 பேர் ஓடிப்போய் சேர்றிங்கன்னு சொன்னா, ஏன் தேர்தல் நிற்கும் போதே ‘நாங்க உங்களோட கூட்டணி வைக்கல’ என்று சொல்ல வேண்டியதுதானே?
அதை விட்டுட்டு, இங்கே சேர்ந்து, எங்களோட சேர்ந்து, எங்க இயக்கத்தினுடைய சகோதரர்கள் அத்தனை பேரும் கடும்பாடுபட்டு, உன்னை 5 பேரா ஜெயிக்க வைச்சா, ஓடிப் போய் சேர்றியா?
கேசி வேணுகோபால், சோடங்கர்
கே. சி. வேணுகோபால்… கே. சி. வேணுகோபால் என்ன கடவுளா? கே. சி. வேணுகோபால் சொல்லுகிறார், இங்கே நாங்கள் காங்கிரஸ் தான் ஆட்சி செய்வோம் என்ற வகையிலே சொல்கின்றார். கேரளாவில் போய் முதலமைச்சர் வேணும்னான்.
எங்கேயோ டெல்லியில கிடந்த கே. சி. வேணுகோபால், இங்கே போய், கேரளாவுல போய் முதலமைச்சர் வேணும்னு கேட்டா அவனுக்கு கொடுத்தாங்களா? அவனுக்கு கொடுக்கல இல்ல? அவனுக்கு கொடுத்தாங்களா? துரத்தியடிச்சுட்டான் கேரளாவுல, செருப்படி கொடுத்து துரத்துற வகையில துரத்திட்டான்.
அவன் கோவாவுல பெரிய வேலை செய்யுறவன் அவன், கிரீஷ் சோடன்கர். அவன் இங்க வந்து சொல்லுகிறான், ‘ஏய் திமுகவை பத்தி உனக்கு என்னடா தெரியும் சோடன்கர்?’ கே. சி. வேணுகோபால் உனக்கு என்னடா தெரியும்?
திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கின்றீர்களா? கனவு காணாதீர்கள்.
எங்களுடைய தலைவர் இருக்கின்றார், எங்களுடைய தலைவர் இளம் தலைவர் இருக்கின்றார், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார்…
திமுகவுக்கு (DMK) அகிலேஷ், தேஜஸ்வி யாதவ் ஆதரவு
பீகார்ல போய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரம் செய்தார். யாருக்கு? அன்றைய தேஜஸ்வி வெற்றி பெற வேண்டும் என்ற வகையிலே, அன்னைக்கு அங்கே பிரச்சாரம் செய்தார். அதுபோல அகிலேஷ் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வகையிலே உழைத்தார். இன்றைக்கு அகிலேஷ் யாதவ் யாரை ஆதரிக்கின்றார் என்று சொன்னால், நம்முடைய தலைவரை நேசிக்கிறார். தேஜஸ்வி யாரை நேசிக்கின்றார் என்று சொன்னால், நம்மளை நேசிக்கின்றார்.
வெஸ்ட் பெங்கால்ல இன்னைக்கு தோத்துட்டாங்க, மமதா அம்மா தோத்துட்டாங்க. தோத்தாலும் சிங்கம் சிங்கம் தான் அது. அந்த அம்மா சிங்கம் சிங்கம் தான். வா, பாராளுமன்ற தேர்தல் வருகின்ற போது, நீ பிரதமர் என்று உன்னைத் தலைகாட்ட முடியாத அளவுக்கு, தமிழ்நாடே ஓட ஓட விரட்டுவோம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தூத்துக்குடிக்குள் நுழைந்தால்..
இவன் ஒருத்தன் புதுசா முளைச்சிருக்கான், எங்கிருந்தோ லாட்டரிக்காரன்.. நம்ம தலைவரையும், இளம் தலைவரையும் தொட்டுப் பார்க்கிறான். அட நாயே! தொட்டுப் பார்க்கிறியா? யாரைத் தொட்டுப் பார்க்கிறாய்? நீ இனிமேல் இது மாதிரி பேச ஆரம்பித்தால், இந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு நீ வருகின்ற போது, உன்னுடைய சட்டைகள் எல்லாம் கிழிக்கக் கூடிய சூழ்நிலையை எங்களுடைய தொண்டர்கள் ஏற்படுத்துவார்கள்.
பேசு, அரசியல் பேசு. அரசியலைச் செய். எங்களைக் குறைச் சொல்லு. நாங்க 1000 கொடுத்தோம் மகளிர் உரிமைத் தொகை. நாங்க 2000 தருவோம்னு சொன்னோம், நீ 2500 தரேன்னு சொன்ன, அதைக் கொடு. இதை விட்டுட்டு எங்க தலைவரையும், இளம் தலைவரையும் தொட்டுப் பார்க்கிறாராம். என்ன தொட்டுப் பார்க்க? ஒரு காலமும் தொட்டுப் பார்க்க முடியாது.
இன்றைக்கு நீ நினைக்கின்றாய், பல்வேறு திட்டங்களைத் தீட்டி இருக்கின்றாய். பாராளுமன்றத்திலே எப்படியும் வந்துவிடலாம் என்று கனவு காண்கின்றாய். பாராளுமன்றம் அல்ல, நகராட்சித் தேர்தல்ல கூட நீ வர முடியாது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
இன்றைக்குச் சொல்றான், திருச்சியில இடைத்தேர்தல் வருது. திருச்சியில இடைத்தேர்தல் வருகின்றது என்று சொன்னால், நாங்க எங்க மாவட்டத்திலிருந்து தீர்மானம் போட்டிருக்கோம். எங்க மாவட்டக் கழகத்திலிருந்து தீர்மானம் போட்டிருக்கின்றோம், எங்களுடைய கழகத் தலைவராக இருக்கின்ற, நாங்கள் உயர்வாக நேசிக்கின்ற எங்களுடைய தலைவர் தளபதி தான் அங்கே போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டிருக்கின்றோம். எங்களுடைய தளபதி போட்டியிடுகின்றார் என்று சொன்னால், இங்கே தூத்துக்குடியிலிருந்து ஊர் ஊராகச் சென்று, 5000 பேர் மொத்தமா போவான் அங்கே திருச்சிக்கு. நீ யாரு, யார் வேணாலும் வா. எவன் வேணாலும் வந்து போட்டிப் பார்ப்போம். உன்னை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்திலே நாங்கள் வெற்றி பெறுவதற்கான நிலையை உருவாக்குவோம், நாலு மாசத்துல நடக்கப்போகுது. இந்த ஆட்சி நாலு மாசமா, ஆறு மாசமா தெரியல.
எப்படியாவது திமுகவை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கின்றார். திமுகவை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்பதை இன்றைக்குச் சொல்லுகிறேன். நான் இன்னைக்கா சொல்றேன்? தேர்தல் வருவதற்கு முன்னால மேடையில என்ன சொன்னேன்? மேடையில என்ன சொன்னேன்? திருச்செந்தூர் தொகுதியை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது என்று சொன்னேனா இல்லையா? யார் நின்னாலும் திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும் என்று சொன்னேனா இல்லையா?
அந்த வகையிலே எங்களுடைய கழகத்தினுடைய தலைவரும், இளம் தலைவர் அவர்களும் என்ன உத்தரவிடுகின்றார்களோ அந்த உத்தரவை ஏற்று எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். களம் காண்போம். வரவிருக்கின்ற காலத்திலே காங்கிரஸ் என்ற இயக்கம் தமிழகத்திலே இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற வகையிலே நாம் எல்லாம் உழைப்போம், வெற்றி பெறுவோம். இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
காங்கிரஸ் எதிர்வினைகள் என்ன?
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.
“பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது.
நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான்.
எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா?
என்ற கேள்வி எழுகிறது.
திமுக தலைமையிடம் ஒரு கேள்வி.. இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம்.அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி.
அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.
சசிகாந்த் செந்தில் எம்.பி,யும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளார்.
