தமிழக முதல்வர் விஜய் (Vijay) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதி (Trichy East) இடைத்தேர்தலில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (Stalin) போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட திமுக (DMK) செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று மே 16-ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நடைபெற்ற தேர்தல் ஏதோ ஒரு மாயாஜாலம் போல நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற வகையில்தான் மக்கள் தீர்ப்பு
வழங்கியிருக்கின்றார்கள்.
ஸ்டாலின் தடுத்து நிறுத்திய ஆளுநர் ஆட்சி
இன்றைக்கு ஆட்சியில் ஒருவர் (விஜய்) அமர்ந்திருக்கின்றார் என்றால், அதற்கு மு.க.ஸ்டாலினின் கனிவான அணுகுமுறையே காரணம். மு.க.ஸ்டாலின் மட்டும் நினைத்திருந்தால், உடனடியாக இங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, 3 ஆண்டுகள் தமிழகம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கும்.
வெளியில் சவடால் பேசுபவர்களை, வரவிருக்கும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தோற்கடிக்கும் பணியை திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளும் செவ்வனே செய்யும்.
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற சபதம்
விரைவில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கின்றது. திருச்சி கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விஜய், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த இடத்தில் எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்தை உடனடியாகக் கொண்டு வருவதற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்கத் தோழர்கள் அனைவரும் மிகுந்த எழுச்சியோடு, ‘தலைவர்தான் (மு.க.ஸ்டாலின்) இங்கு போட்டியிட வேண்டும்; ஏறக்குறைய ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விஜய் முகத்தில் கரியை பூசி பாடம் புகட்ட வேண்டும்’ என்று ஆவலோடு இருக்கின்றனர். அந்தத் தீர்மானத்தை நாங்கள் இங்கு முன்மொழிந்துள்ளோம்.
திமுக கள ஆய்வு குழு
தேர்தல் காலத்தில் நடைபெற்ற தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்துள்ளோம். அத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காகத் ஒவ்வொரு தொகுதி வாரியாக ஆய்வு செய்ய ஒரு குழுவை ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அக்குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அங்கு நடந்த தவறுகளைச் சரியாகக் கண்டறிந்து அறிக்கை அளிப்பார்கள். இந்த இயக்கத்தில் சரியாகப் பணியாற்றாதவர்களுக்கு மாற்றுப் பொறுப்புகளை வழங்கி, தகுதியானவர்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்கும் பணியைக் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார்கள்.
வெளுத்து கட்டிய உதயநிதி ஸ்டாலின்
அண்மையில் சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் தங்களுடைய தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆளுக்கொரு பேச்சு பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், உதயநிதி ஸ்டாலின் அதற்கு அளித்த பதிலடியைக் கண்டவுடன், ‘நாங்கள் வீழ்த்துவோம், உடைப்போம்’ என்று சவடால் பேசிய எதிர்த்தரப்பினர் அனைவரும் தலைகுனிந்து, மறுவார்த்தை பேச முடியாமல் போயினர். அதுதான் உதயநிதியின் ஆளுமை.
4 மாதத்தில் ஆட்சி மாற்றம்
அஇஅதிமுகவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் பிளவுபட்டுக் கிடப்பது மட்டுமின்றி, தங்களுக்குள் ஒரு தரப்பினர் மற்றோரு தரப்பினரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோருகின்றனர். அவ்வாறு பதவிகள் பறிக்கப்பட்டால் அங்கு மீண்டும் தேர்தல்தானே வரும்? எனவே, ஆட்சி மாற்றம் என்பது இன்னும் நான்கு அல்லது ஆறு மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் நிகழலாம்.
ஆதவ் அர்ஜூனாவுக்கு கேள்வி
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது தான் எழுந்து பேச நினைத்ததாக ஆதவ் அர்ஜுனா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். சபாநாயகர் அனுமதி அளித்தால் அவர் தாராளமாக எழுந்து பேசியிருக்கலாமே, அதை யார் தடுத்தது? ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உள்ளே நுழைந்துள்ளார். அதுமட்டுமன்றி, அவருடைய பின்னணியும் தொழில்களும் கட்டப்பஞ்சாயத்து சார்ந்தவைதான். அப்படிப்பட்டவர் எங்களது இளம் தலைவருடன் எவ்விதத்திலும் போட்டியிட முடியாது.
டாஸ்மாக் கடைகள் குறைப்பு குறித்துக் கேட்கிறீர்கள். 700-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முழுமையாக 700 கடைகளும் மூடப்படவில்லை, தற்காலிகமாகச் சில கடைகள் மட்டுமே தற்போதைக்கு நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
