தமிழகத்தில் முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதல்வர் விஜய்யின் புதிய ஆட்சிக்கு முன் உள்ள பிரதான சவால்களில் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் (Mettur Dam) அணை திறக்கப்படுவதும் ஒன்று.
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் (Water Level) 90 அடிக்கு அதிகமாக இருந்தால் அணையில் இருந்து நீர் திறக்கப்படும்.

மேட்டூரில் நிலவரம் என்ன?
- மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி.
- மேட்டூர் அணையில் இன்று மே 16-ந் தேதி நிலவரப்படி 79.16 அடி நீர் இருப்பு உள்ளது.
கர்நாடகா அணைகளின் நீர்மட்டம்
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடும் கர்நாடகா அணைகளான
- கிருஷ்ண ராஜசாகரில் தற்போது 89.18 அடி (கொள்ளளவு 124.8),
- கபினியில் தற்போது 35.89 (கொள்ளளவு 65) அடி நீர் இருப்பு உள்ளது.
முன்கூட்டியே தொடங்கியது
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் வங்க கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது.
பொதுவாக மே இறுதி வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, கேரளாவுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவின் குடகு மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணராஜ சாகர் அணையை வந்தடையும்.
கேரளாவின் வயநாடு பகுதிகளில் பெய்யும் மழையால் கபினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காவிரியுடன் கலந்து கபினி அணையை வந்தடையும்.
இந்த இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் பிலிகுண்டுலு வழியாக தமிழ்நாட்டின் ஒகேனக்கலை கடந்து அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
தற்போதைய சூழ்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மேட்டூர் அணையில் ஜூன் 12-க்குள் போதுமான நீர் இருப்பு இருக்க வேண்டும் என்பது காவிரி டெல்டா விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பு.
மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளைப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய கட்டாயம் உள்ளது என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

மேட்டூர் அணை வரலாறு
காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீரியியல் விபரங்கள் (Hydrological Data)
| அணை விபரம் | அளவீடுகள் |
| அணையின் மொத்த நீளம் | 5300 அடி |
| அணையின் அதிகபட்ச உயரம் | 214 அடி |
| அணையின் அதிகபட்ச அகலம் | 171 அடி |
| அணையின் மேல்பகுதி அகலம் | 20 அடி 5 இன்ச் |
| அணையின் மேல்பகுதியில் சாலையின் அகலம் | 16 அடி |
| சுரங்கத்தின் நீளம் | 4400 அடி |
| அதிகபட்ச நீர்த்தேக்கும் உயரம் | 165 அடி |
| உபயோகப்படுத்தக்கூடிய தண்ணீர் உயரம் | 120 அடி |
| அணையின் மொத்த கொள்ளளவு | 95,660 மி.கன அடி (TMC) |
| அணையின் பயனுள்ள கொள்ளளவு | 93,470 மி.கன அடி (TMC) |
| முழுநீர்த்தேக்க மட்டத்தில் நீர்பரப்பின் நீளம் | 33 மைல்கள் |
| அதிகபட்ச நீர்பரப்பு பகுதி | 59.25 சதுர மைல்கள் |
| நீர்பிடிப்பு பகுதி | 16,300 சதுர மைல்கள் |
அணையின் மதகுகள் மற்றும் மின் நிலைய விபரங்கள்:
| கட்டமைப்பு வகை | எண்ணிக்கை / அளவு |
| 16 கண் உபரிநீர் போக்கி | 16 * 60 அடி * 20 அடி |
| 8 கண் மேல்மட்ட மதகு | 8 * 10.6 அடி * 16 அடி |
| 5 கண் கீழ்மட்ட மதகு | 5 * 7 அடி * 14 அடி |
| அணை மின் நிலையம் | 4 விசைபொறி (Turbines) |
| சுரங்க மின் நிலையம் | 4 விசைபொறி (Turbines) |
தகவல் மூலம்: https://salem.nic.in/tourist-place/mettur-dam/
