பெண்களுக்கு (Women) மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என தமிழக அமைச்சர் நிர்மல்குமார் (Nirmal Kumar) விளக்கம் தந்துள்ளார்.
மதுரையில் இன்று மே 16-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: 233 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ-க்கள்) வேட்பாளர்களும் மக்களைச் சந்தித்து, தேர்தல் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மக்கள் என்ன நினைத்து வாக்களித்தாங்களோ, அதற்கான பணிகளைப் புதிய அரசு முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

போதை இல்லாத மாநிலம்
தமிழகத்தைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றும் முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, கடந்த இரண்டு நாட்களாகக் கடைகளில் தீவிர சோதனைகள் (ரைடுகள்) நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கமிஷனர் மற்றும் எஸ்.பி தலைமையிலான ஆய்வுக்குப் பின், போதைப்பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
பார்கள் முறைகேடுகள்
டாஸ்மாக் பார்களில் நடக்கும் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத குவாரிகள்
சட்டத்திற்குப் புறம்பான குவாரிகள் (சட்டவிரோத மணல்-கல் குவாரிகள்) அடையாளம் காணப்பட்டு, அவற்றின் மீது ஆக்ஷன் எடுக்க அனைத்து வேலைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு நிலைமையை முதல்வர் தினமும் கவனித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் தெரியவரும்.
முதல்வரின் ஆய்வு பணிகள்
முதல்வர் விஜய் (Vijay) அவர்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை வரை தலைமைச் செயலகத்திலேயே இருந்து, மதிய உணவையும் அங்கேயே உட்கொண்டு ஒவ்வொரு துறை வாரியாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விரைவில் வெள்ளை அறிக்கை
கடந்த 40, 50 வருடங்களாகத் துறைகளில் உள்ள குறைகள், நெகட்டிவான விஷயங்கள் மற்றும் நிதி நிலவரங்களை முழுமையாக ஆடிட் (Audit) செய்து, விரைவில் ஒரு தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகே தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மேப் செய்யப்பட்டுச் செயல்படுத்தப்படும்.
பெண்களுக்கு ரூ.2,500 எப்போது?
மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ரூ.2,500 நிதி உதவி உள்ளிட்ட முக்கியத் திட்டங்களை ஒரு அரசாணை (G.O) மூலம் மட்டும் உடனடியாகப் பாஸ் செய்துவிட முடியாது. நிதி ஆதாரங்களைச் சரிசெய்து, நிதிநிலை அறிக்கை (Financial Budget) தாக்கல் செய்யப்பட்ட பிறகே நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டங்கள் முறையாகக் கொண்டுவரப்படும்.
செய்தியாளர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்?
முதல்வர் செய்தியாளர்களைச் சந்திப்பது ஒரு பெஞ்ச்மார்க் கிடையாது. அரசின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் முதல்வரின் ஆய்வுகள் ‘பிரஸ் ரிலீஸ்’ (Press Release) மூலம் வெளிப்படையாகத் தினமும் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. தேவையான நேரத்தில் முதல்வர் கண்டிப்பாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்.
இந்த அரசு எந்தவொரு பழைய ஆட்சியின் தொடர்ச்சியோ அல்லது குறிப்பிட்ட வெர்ஷனோ கிடையாது; அதிகப்படியான இளைஞர்கள், பெண்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளித்துச் செயல்படும் “இன்றைக்கான புது வெர்ஷன்” ஆகும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
