அதிமுக (AIADMK) இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முதல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு (Police Protection) போடப்பட்டுள்ளது.
இரண்டாக உடைந்த அதிமுக
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட கொறடா உத்தரவு என்பது சட்டசபையில் விஜய் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது. ஆனால் இந்த கொறடா உத்தரவை மீறி அதிமுகவின் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர் உட்பட 25 எம்.எல்.ஏக்கள், விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் அதிமுக மனு கொடுத்துள்ளது. ஆனால் தங்களது அணியின் கொறடா சி. விஜயபாஸ்கர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்கிறது எஸ்பி வேலுமணி அணி.
இதனையடுத்து எஸ்பி வேலுமணி அணியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தும் அறிவிப்பு வெளியிட்டார்.

சென்னை தலைமை அலுவலகம்
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள
நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இரு பிரிவினரும் உரிமை கோரினால் பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அந்த அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர்
கடலூர் மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், சிட்டிங் எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் ஆகியோரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக எம்.சி. சம்பத்தின் சகோதரர் எம்.சி. தாமோதரனை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அத்துடன் புவனகிரி, திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாக சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடலூர் பாதிரிகுப்பம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இரு அணியினரும் உரிமை கோரி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது கடலூர் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். அவரது கட்சி பதவியை பறித்துவிட்டு நகர செயலாளர் பசுபதியை மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
விழுப்புரம் புதிய மா.செ. பசுபதிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இரு அணியினருமே விழுப்புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு செல்ல முயற்சிப்பதால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி மனு அளித்துள்ளார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மா.செ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்டு பழனிவேல், புதிய மா.செ.வாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து புதுக்கோட்டை அசோக்நகரில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குள் இரு அணியினருமே நுழைய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
கரூரில் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டு கமலக்கண்ணன் புதிய மா.செ.வாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கமலக்கண்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செங்குந்தபுரம் 80 அடி சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு கமலக்கண்ணன், அதிமுகவினருடன் சென்றார். ஆனால் அங்கு அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கேட்டின் பூட்டை உடைத்து புதிய மா.செ. கமலக்கண்னனும் அவரது ஆதரவாளர்களும் உள்ளே சென்றனர். ஆனாலும் அலுவலகமும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து அலுவலக வளாகத்திலேயே கமலக்கண்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அதேநேரத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். கேட்டின் பூட்டை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட பதற்றம் ஏற்பட்டது. தற்போது கரூர் அதிமுக அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
