மேட்டுப்பாளையம் திமுக (DMK) முன்னாள் நிர்வாகி டிஆர் சண்முகசுந்தரம், தவெக (TVK) மூத்த தலைவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
யார் இந்த டிஆர்எஸ் என்ற டிஆர் சண்முகசுந்தரம்?
2021 சட்டசபை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் டிஆர் சண்முகசுந்தரம். அத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.செல்வராஜிடம் 2,456 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் டிஆர் சண்முக சுந்தரம்.
இதனைத் தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான களப் பணிகளையும் செய்து வந்தார் டிஆர் சண்முக சுந்தரம். ஆனால் இந்த தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் டிஆர் சண்முகசுந்தரத்துக்கு வாய்ப்பு தரப்படவில்லை. கவிதா கல்யாணசுந்தரம் என்பவர் திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த டிஆர் சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேட்சையாகவும் போட்டியிட்டார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவின் சுனில் ஆனந்த் வெற்றி பெற்றார். திமுகவின் கவிதா கல்யாணசுந்தரம் 67,896 வாக்குகளையும் அதிமுகவின் ஓ.கே. சின்னராஜ் 61,736 வாக்குகளையும் பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட டிஆர் சண்முகசுந்தரம் 26,766 வாக்குகளைப் பெற்றார். இந்த தொகுதியில் திமுகவின் தோல்விக்கு டிஆர் சண்முகசுந்தரத்தின் வாக்குகளும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்த டி.ஆர். சண்முகசுந்தரம், தவெகவில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஆர் சண்முகசுந்தரம், “ திமுகவில் நான் உழைத்ததற்கு மரியாதை கொடுத்திருந்தால் எனக்கு மேட்டுப்பாளையத்தில் சீட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுக என்னை கைவிட்டுவிட்டது” என்றார்.
