தமிழக சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டிருக்கிறது.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சி.வி.சண்முகம் விடுவிக்கப்பட்டு நகர செயலாளர் பசுபதியை மா.செ.வாக போட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் தரப்பு மற்றும் பசுபதி தரப்பு ஆதரவாளர்கள் விழுப்புரம் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் சிவி சண்முகம் குறித்து பசுபதி பேசுகையில், “அதிமுகவினுடைய வரலாறு என்ன? புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எம்ஜிஆர், எடப்பாடியாருடைய வரலாறு என்ன? நாம போய் ஒருத்தனுக்கு து முட்டு குடுக்கிறதா? இவன் மந்திரியாவதற்காக சொல்றான். திமுக நமக்கு முட்டு குடுத்ததுன்னா நம்ம பொண்டாட்டி எல்லாம் வீட்டுல சேர்ப்பாங்களா? இப்படி, சொல்றதாலதான் இதெல்லாம் நாம பேச வேண்டியதா இருக்குது.
சி.வி. சண்முகத்தோட அப்பா வேணுகோபாலு, 1980-ல நாடாளுமன்றத் தேர்தல், 81-ல சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது அப்ப காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜாராம்னு ஒருத்தர் இணைந்தார், அவரு திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில எம்எல்ஏ-க்கு நிக்கிறார். இதே சி.வி. சண்முகம் அப்பா அவங்க குடும்பத்தோட திமுகவுக்கு ஓட்டு போடுறாங்க.
இது திமுகவுக்கு வேலை செய்றாங்க. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திண்டிவனத்துக்கு பிரச்சாரத்துக்கு வர்றார். இதைக் கேள்விப்பட்டு, அந்த வேணுகோபாலை கூப்பிட்டுக் கேட்கிறாரு.
வேணுகோபால் நான் அப்படித்தான் செய்வேன்’ன்றாரு. அப்பலாம் டிவி இல்லை. கட்சியை விட்டு நீக்கினால் அந்த தகவல் உடனே வராது. மாலை பேப்பர், அண்ணா பேப்பர்லயும், மக்கள் முரசு பேப்பர்லயும் தான் வரும். எனவே, ‘இவனை நான் நீக்கினது வரட்டும், வந்தாதான்…’ பொதுக்கூட்டத்துக்கு போவேன் என சொன்னார் எம்.ஜி,ஆர். அதுமாதிரி நீக்கிட்டுதான் போனார்.
அதுக்கப்புறம் எவ்வளவோ கட்சியில சேர்க்கச் சொன்னபோது , ‘உன்னை மட்டும் சேர்க்க முடியாது’ன்னுட்டாரு. நீங்க குடும்பத்தோட போய் ராமாவரம் தோட்டத்துல அண்ணா திமுக வேஷ்டி எல்லாம் கிழிச்சு கொளுத்திட்டு, புரட்சித்தலைவர் மேலயே… மண்ணை வாரி விட்டு வந்த குடும்பம் நீங்க.
அது மட்டுமா?
அதுக்கப்புறம் மாசிலாமணி திமுகவுல சட்டமன்ற உறுப்பினரா இருக்கும்போது, உங்க குடும்பமே உதயசூரியனுக்கு வேலை செஞ்சு, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டது. நீ இப்ப எங்க எடப்பாடியாரைச் சொல்றல்ல? ‘நான் என் ரெண்டு பிள்ளை மேல சத்தியம் பண்றேன், நீ பண்றியா?’.
எனக்கு ஒரு பிள்ளை இறந்துட்டான், இன்னும் ரெண்டு பிள்ளை இருக்கு, நான் சத்தியம் பண்றேன். நீ சொல்றா!… ‘நான் திமுகவுக்கு ஓட்டு போட்டது இல்லை’ன்னு சொல்றா பார்ப்போம்! உன் குடும்பமும் நீயும் திமுகவுக்கு ஓட்டு போடலன்னு உன் பிள்ளை மேல சத்தியம் பண்ணு ! யோக்கியன் மாதிரி பேசுற.
அதெல்லாம் விடு… பழைய கதை. இப்ப என்ன கதை? பொன்முடி ஏன் வீணா போனாரு? அந்த கட்சியிலிருந்து பொன்முடி ஏன் ஒதுக்குனாங்க?… பொன்முடிகூட நீ எவ்வளவு உறவாடுன… பொன்முடிகூட தோளோடு தோள் நின்னத, எங்க கட்சிக்காரன் நிறைய பேர் பார்த்தவங்க இருக்காங்க.
சி.வி. சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நடந்தது. ஆனால், சண்முகம் திட்டமிட்டே சாட்சிகளைக் கலைக்க முயன்றார். இறுதியில் சென்னையில் இருந்து ஜெயக்குமார் வந்து தலையிட்டே அந்த வழக்கைத் திரும்ப விசாரிக்க மனு அளித்தார்.
விழுப்புரத்தில் பொன்முடி வளைத்துப்போட்ட அரசுப் புறம்போக்கு நிலத்தை மீட்க, அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க சண்முகம் முன்வரவில்லை
உன்னுடைய வண்டவாளங்கள் எல்லாம் இன்னும் நிறைய இருக்கு. உன்கூட பயணிச்சவங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. நாங்க எல்லாம் எதையும் பேசக்கூடாதுன்னு நினைச்சோம், எங்க பொதுச்செயலாளர் எங்களைத் திட்டி அனுப்பிச்சார்… ‘நீ எதுவுமே வாய திறக்கக் கூடாது என்றார்” என கடுமையாக விமர்சித்தார்.
