பிரியங்கா காந்தி போட்ட ‘ஸ்கெட்ச்’! முதல்வர் கனவில் கண்டெய்னர் மண்ணைக் கொட்டிய ராகுல் காந்தி- குமுறும் கேசி வேணுகோபால்.. கேரளாவில் நடந்தது என்ன?

Published On:

| By Mathi

KC Venugopal

கேரளா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் (Congress) தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளத்தின் புதிய முதல்வராக விடி சதீஷனும் 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். கேரளாவின் முதல்வர் பதவியை எதிர்பார்த்த கேசி வேணுகோபாலும் (KC Venugopal) அவரது ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, கேரளத்தின் “அடுத்த முதல்வர் யார்?” என்ற பனிப்போர் டெல்லியிலும் கேரளாவிலும் மும்முரமாக நடந்து வந்தது.

ADVERTISEMENT

கே.சி. வேணுகோபால் (KC VENUGOPAL)

கேரளாவின் முதல்வர் பதவிக்கான போட்டிகளில் இருந்தவர்கள் 2 பேர்.. ஒருவர் கேசி வேணுகோபால்.. ஆம் ’தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ‘சடுகுடு’ விளையாடிய சகுனியாக விமர்சிக்கப்படும் அதே கேசி வேணுகோபால்தான்.. கேரளாவில் எப்படியும் முதல்வராகிவிடுவோம்.. அதற்காகவே தவெகவுடன் கூட்டணி வைத்தாக வேண்டும் என காங்கிரஸை விஜய் பக்கம் இழுத்துக் கொண்டு போனதில் முக்கிய பங்காற்றியவராக சொல்லப்பட்ட அதே கேசி வேணுகோபால்.. இன்னொருவர் தற்போது முதல்வராகும் விடி சதீஷன்.

ராகுல் காந்தியின் தளபதி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை டெல்லி மேலிடம் என்பது ராகுல் காந்தி- மல்லிகார்ஜூன கார்கே- கேசி வேணுகோபால் என்பதுதான் கள நிலவரமாக இருந்தது. ராகுல் காந்தியின் அதீத நம்பிக்கைக்குரிய தளபதியாக கேசி வேணுகோபால் இருந்ததால் கேரளத்தின் முதல்வர் பதவிக்கான ரேஸில் தொடக்கத்தில் பெரும் முன்னிலை வகித்தார் கேசி வேணுகோபால்.

ADVERTISEMENT

அதிர்ச்சியை தந்த டெல்லி

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 4-ந் தேதி முதல் மே 14-ந் தேதி ‘முதல்வர் தேர்வு” அறிவிக்கப்படும் வரை “நாம்தான் முதல்வர்.. ராகுல் காந்தி இருக்க பயமேன்” என கெத்தாக வலம் வந்தவர் கேசி வேணுகோபால்..

ஆனால் கேரளாவின் முதல்வராக டெல்லி மேலிடம் அறிவித்தது விடி சதீஷன் என்ற பெயரைத்தான்!

ADVERTISEMENT

கேசி வேணுகோபாலும் அவரது ஆதரவு கூட்டமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றன.. ராகுல் காந்தியே நம்மை கைவிட்டுவிட்டாரே என கதறுகின்றன.

கேரளாவில் என்னதான் நடந்தது?

சரி கேரளாவில் என்னதான் நடந்தது?

  • கேரளா முதல்வர் பதவிக்கான போட்டியில் தொடக்கத்தில் கேசி வேணுகோபாலுக்கு 43 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. இதனால் கேசி வேணுகோபால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்.
  • டெல்லி மேலிடம் அனுப்பிய மத்திய பார்வையாளர்கள் குழு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியது. ஒன் டூ ஒன்னாக நடந்த இந்த சந்திப்பில் இருந்து கேசி வேணுகோபாலுக்கு சரிவும் தொடங்கியது.
  • இந்த ஒன் டூன் சந்திப்புக்கு பின் முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்த விடி சதீஷனுக்கு 33 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என நிலைமை தலைகீழாக மாறியது.

களமாடிய பிரியங்கா காந்தி

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிலேயே விடி சதீஷனுக்கு ஆதரவு திடீரென பெருக காரணம் பிரியங்கா காந்திதான் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

பிரியங்கா காந்தி என்னதான் செய்தார்?

  • வயநாடு தொகுதியின் எம்.பி. பிரியங்கா காந்தி. வயநாடு மக்களவை தொகுதியை சுற்றிய பகுதிகள் முஸ்லிம்களை உள்ளடக்கியது.
  • காங்கிரஸின் பிரதான கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழுவீச்சில் ஆதரித்தது விடி சதீஷனைத்தான்.. அதனால் பிரியங்கா காந்தியின் சாய்ஸும் விடி சதீஷனாக இருந்தது.
  • இந்த விருப்பமே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் கேசி வேணுகோபால் முகாமில் இருந்து விடி சதீஷன் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
  • விடி சதீஷனையே முதல்வராக்க வேண்டும் என அண்ணன் ராகுல் காந்தியிடம் பிடிவாதம் பிடித்தார் பிரியங்கா. தங்கை சொல் தட்ட முடியாத அண்ணன் சாய்ஸும் ‘தளபதி’ கேசி வேணுகோபாலுக்கு பதிலாக விடி சதீஷனாக மாறிப் போனது.

களத்தில் இணைந்த ஏகே ஆண்டனி

இந்த ஆடு புலி ஆட்டத்தில் மாஜி அமைச்சர் ஏகே ஆண்டனியும் இணைந்து கொண்டார். சோனியாவையும் ராகுலையும் தனித்தனியே சந்தித்த ஏகே ஆண்டனி வேறொரு திரியை பற்ற வைத்தார். அவர் சொன்னது என்னவெனில், கேசி வேணுகோபால் முதல்வராக்கப்பட்டால் அவருக்காக ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இது தேவையே இல்லாத ‘ஆணி’… இந்த ரிஸ்க் எடுக்காமல் இருக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டார் ஏகே ஆண்டனி.

கடைசிவரை நம்பிய கேசி வேணுகோபால்

இத்தகைய அடுத்தடுத்த நகர்வுகளின் கிளைமேக்ஸ் காட்சிகள் ராகுல் காந்தி இல்லத்தில் மே 14-ந் தேதி நடந்தது.. அன்று காலை பிரியங்கா காந்தியும் ராகுலை கேசி வேணுகோபால் சந்தித்தார்.. அப்போது கூட, நம்மைதான் ராகுல் முதல்வராக்குவார் என்ற நம்பிக்கை கேசி வேணுகோபாலுக்கு இருந்தது.

ஆனால் ராகுல் உதிர்த்த பெயர் “விடி சதீஷன்”.. அவ்வளவுதான் தலையில் பேரிடி விழுந்ததாய் நொறுங்கிப் போனார் கேசி வேணுகோபால்..

தமது முதல்வர் கனவில் ராகுல் காந்தியே ‘கண்டெய்னர்’ அளவு மண்ணைக் கொட்டி மூடுவார் என்பதை கேசி வேணுகோபால் கனவிலும் நினைக்கவில்லை.. “கேசி வேணுகோபால் சட்டசபை தேர்தலில் போட்டியிடத்தான் விரும்பினார்.. டெல்லிதானே வேண்டாம் என்றது.. இப்போது அதையே ஒரு காரணமாக காட்டி முதல்வர் பதவியை மறுப்பது எப்படி நியாயம்?” என தர்மநீதி பேசுகிறது கேசி வேணுகோபால் கோஷ்டி.

ஆனாலும் ‘இப்போதைக்கு போக்கிடம்’ இல்லையே என இன்று நடைபெறும் விடி சதீஷனின் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு கேசி வேணுகோபால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனியும் ராகுல் காந்தி குடும்பத்தை நம்பவே கூடாது என்ற தீர்மானத்துடன், ”இனி கேரளா அரசியல் மட்டும்தான்.. டெல்லிக்கு குட்பை” சொல்ல போகிறாராம் கேசி வேணுகோபால்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share