அதிமுகவின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று மே 17-ந் தேதி மாவட்ட செயலாளரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் (Dindigul Srinivasan) தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் நடத்திய பிரஸ் மீட் விவரம்:
செய்தியாளர்: அண்ணா தி.மு.க- இரண்டாக பிரிந்திருக்கக்கூடிய நிலையில், இபிஎஸ் அணியில எவ்வளவு ஆதரவாளர்கள் இருக்காங்க? எவ்வளவு எதிர்ப்பாளர்கள் இருக்காங்க?
திண்டுக்கல் சீனிவாசன்: எங்கே?
செய்தியாளர்: சி.வி.சண்முகம் தலைமையில எவ்வளவு பேர் போயிருக்காங்க? இன்னைக்கு திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்துல இபிஎஸ்-க்கு ஆதரவா எவ்வளவு பேர் வந்து கையெழுத்துப் போட்டிருக்காங்க?
திண்டுக்கல் சீனிவாசன்: ஏம்பா, ஏற்கனவே சட்டமன்றத்துல இ.பி.எஸ் கூட 22 பேர், அவங்களுக்கு 25 பேர். வேற என்ன புதுசா கூடியிருக்கா, குறைஞ்சிருக்கா?
செய்தியாளர்: திண்டுக்கல் மாவட்டத்துல எவ்வளவு ஆதரவாளர்கள் இருக்காங்க? எடப்பாடிக்கு எவ்வளவு பேர் ஆதரவு கொடுத்திருக்காங்க?
திண்டுக்கல் சீனிவாசன்: அப்பா, நூற்றுக்கு நூறு இங்க எல்லாரும் இபிஎஸ் ஆதரவுதான். பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் வந்திருக்காங்க. ஒன்னு ரெண்டு பேர் வராம இருப்பாங்க, நாளைக்கு எல்லாம் தெரியும். பல பேருக்கு தகவல் போயிருக்காது. மெஜாரிட்டி மக்கள் எல்லாரும் வந்துட்டாங்கப்பா.

செய்தியாளர்கள்: உங்களுடனே இணைந்து செயல்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் பக்கம் போயிருக்காங்க. நாளைக்கு இணைந்து செயல்பட போறாங்கன்றாங்க, நாளைக்கு அவர் வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கா?
திண்டுக்கல் சீனிவாசன்: எங்கே வர்றதுக்கு?
செய்தியாளர்: உங்களோடு இணையறதுக்கு.
திண்டுக்கல் சீனிவாசன்: அதெல்லாம் அவர்கிட்ட கேளுங்க, என்கிட்ட கேட்டா?
செய்தியாளர்: நீங்கதான் சார் ஃபர்ஸ்ட் சொன்னீங்க, இணையறதுக்கு வாய்ப்புகள் இருக்குன்னு…
திண்டுக்கல் சீனிவாசன்: நான் அப்படியா சொன்னேன்? என்னப்பா இப்படி சொல்றாரு? ஏய்! தண்ணிய போட்டியாப்பா? இப்பதான் பேச ஆரம்பிக்கிறேன்.. நான் எப்ப சொன்னேன்?
செய்தியாளர்: நீங்க சொன்னீங்க, இணையறதுக்கு வாய்ப்புகள் இருக்குன்னு போனமுறை சொன்னீங்களே…
திண்டுக்கல் சீனிவாசன்: நான் எப்போ சொன்னேன்? நான் அப்படி சொல்லல. இருக்கிறவங்களை கூப்பிடுங்கன்னு சொன்னேன். இணையறதுக்குன்னா… கட்சியில ஒரு சிலர் பொறுப்புல இருப்பாங்க இல்லப்பா, தெரியாம கிறுக்கு மாதிரி உட்கார்ந்திருப்பாங்க, வாங்கடான்னா வந்துருவாங்க. அவ்வளவுதான்.
செய்தியாளர்: சட்டசபையில யாரை அங்கீகரிக்க அதிகமா வாய்ப்புகள் இருக்கு?
திண்டுக்கல் சீன்வாசன்: அதெல்லாம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பேச்சு. இங்க என்னப்பா கேக்குற? அதுதான் அதுல சட்டமன்றத்துல, அவங்க சட்டப்படி, உச்ச நீதிமன்ற (Supreme Court) தீர்ப்புப்படி, எடப்பாடியார் தரப்பு சொல்றதுதான் சரியானது, தலைவர் சொல்றதுதான் கரெக்ட், அவர் சொல்றதுதான் அப்படின்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க, அவ்வளவுதான்பா. அதெல்லாம் போய் நம்ம…
செய்தியாளர்: அ.தி.மு.க-வையும் தி.மு.க-வையும் மக்கள் புறக்கணிச்சிருக்காங்க. இதைப்பற்றி என்ன சொல்ல வர்றீங்க
திண்டுக்கல் சீனிவாசன்: அதான் தீர்ப்பு வந்துருச்சு, இனி என்னத்த சொல்றது? அதான் புறக்கணிச்சிருக்காங்கன்னு தெரியுது, அப்புறம் என்ன?
செய்தியாளர்: அ.தி.மு.கவுக்கு பின்னடைவாவே இருக்குது.
திண்டுக்கல் சீன்வாசன்: ஏதாவது ஆதாயம் எங்கேயாவது பெறலாம்னு நினைக்கிறவங்க.. அவங்களை கேளுங்க, எதுக்கு போயிருக்காங்கன்னு. நமக்கு தெரியாது.
செய்தியாளர்: எஸ்பி வேலுமணி அணிக்கு போனவங்க அமைச்சர் பதவி கிடைக்கிறதுக்காக போயிருக்காங்க.. அவங்களுக்கு பதவி கிடைக்குமா?
திண்டுக்கல் சீனிவாசன்: நான் ஜோதிடர் இல்லை. எனக்கு தெரியாது. இதுல நான் என்ன பதில் சொல்றது?
செய்தியாளர்: எஸ்பி வேலுமணி அணிக்கு போனவங்களை நீக்க அதிமுக தயாரா இருக்கிறதா?
திண்டுக்கல் சீனிவாசன்: வேற வழி? அ.தி.மு.க தயாராக இருக்கிறது.
செய்தியாளர்: அவங்களுடைய எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா?
திண்டுக்கல் சீனிவாசன்: சட்டம் என்ன செய்யுமோ, அதன்படி செயல்படுவோம்.
செய்தியாளர்: அவங்க தவறை உணர்ந்து மீண்டும் வந்தா, அ.தி.மு.க-வில் சேர்த்துக்குவாங்களா?
திண்டுக்கல் சீனிவாசன்: இதுக்கு பதில் சொல்ல வேண்டியது எடப்பாடியார் அவர்கள் தான், நான் கிடையாது.

செய்தியாளர்: கட்சி பொருளாளரா இருக்கீங்க நீங்க…
திண்டுக்கல் சீன்வாசன்: பணத்தைப் பத்தி கேளு, சொல்றேன்.. கட்சி நடவடிக்கையை அவர்தானே முடிவு பண்ணனும், நான் இன்னொருத்தருக்காக பேச முடியாது. கட்சியில ஏதாவது பணப் பிரச்சனை, பணம் இருக்கான்னா கேளு சொல்றேன்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
