புதுச்சேரி அமைச்சர் பதவிக்கு பேரம்.. பகீர் கிளப்பும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

Narayanasamy

புதுச்சேரியில் அமைச்சர் பதவி பெற ரூ.100 கோடி பேரம் பேசப்படுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:“புதுச்சேரியில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் தோல்விக்கான பொறுப்பை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். ஆனால் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மோடியின் ஏஜெண்டுகள் ஆளுநராக இருப்பதால், வந்தே மாதரம் தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. இது புதுச்சேரி மக்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகம்.

புதுச்சேரி முதல்வர் இரு அமைச்சர்களுடன் பதவியேற்றுள்ளார். மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்க வேண்டும். ஆனால் பொதுவெளியில் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி பேரம் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிப்போடப்படுகிறது.அமைச்சரவை அமைக்கும் முன்பே ஊழல் இருந்தால் இந்த ஆட்சி எப்படி அமையும்? இதனால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போகிறது. அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட வேண்டும்.தமிழக முதலமைச்சர் விஜயின் நண்பர் ரங்கசாமி, விஜய் பதவியேற்பு விழாவில் ‘ஊழல் செய்ய மாட்டேன்’ என்று பகிரங்கமாக தெரிவித்தார். அதேபோல் விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமியும் விஜய் பாதையில் செயல்படுவாரா?” என்றார்.

ADVERTISEMENT

மேலும் புதுச்சேரியில் அமைச்சர் பதவி ஏலம் போகிறது. புதுச்சேரிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் புதுச்சேரியில் அமைச்சராக கனவு காண்கின்றனர். பணத்தை வாரி இறைத்து தேர்தலில் வென்று, அமைச்சராகிவிட வேண்டும் என டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் காவடி தூக்குகிறார். தற்போது போதை மாநிலமாக இருக்கும் புதுச்சேரி சூதாட்ட மாநிலமாக மாறிவிடும் சூழல் உள்ளது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share