தமிழக சட்டசபைக்குள் முதல்வர் விஜய் (Vijay) ஒருவித அச்ச உணர்வுடன் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி (Raghupathi) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: அதிமுக என்பது எதிர்க்கட்சி. அதிலே ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சந்திக்க முதலமைச்சர் விஜய் செல்கிறார்.
முதலமைச்சர் செல்கிற பொழுது முன்னாலேயே ஒரு சோபா போகிறது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பார்கள். அதைப்போல சோபா வரும் முன்னே, முதலமைச்சர் வருவார் பின்னே என்கிற கதையாக இன்றைக்கு தமிழ்நாடு மாறி இருக்கிறது. எனவே அந்த சோபா கலாச்சாரம் முற்றிலும் முடிவுக்கு வர வேண்டும். சோபாவில் என்ன கொண்டு போனார்கள் என்பதை ‘புஷ்பா’ படத்தை உதாரணம் காட்டியே எங்களுடைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அருமையாகப் பேசியிருக்கிறார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் சும்மா உட்காந்துகிட்டு இருக்காரு. அவரைப் பார்த்த பொழுது எங்களுக்கு சட்டமன்றத்திலே, பயந்த சுபாவத்தோடு, அச்சத்தோடு, அச்ச உணர்வோடு உட்கார்ந்திருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் தான் எங்களுக்குத் தோன்றியது. வெளியே வந்து அவர் பேசிய அந்தத் தைரியமான பேச்சுகள் சினிமா வசனங்களாகவும், சட்டமன்றத்துக்குள்ளே அவர் அமர்ந்திருந்தது மிகவும் அச்ச உணர்வோடு, ஒரு பயம் கலந்த உணர்வோடு இருப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றியது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறினார்.
