அம்மாவின் படத்தை பையில் வைத்துக் கொண்டு இப்படி செய்யலாமா? செங்கோட்டையனை விளாசும் டிடிவி தினகரன்

Published On:

| By Pandeeswari Gurusamy

TTV Dhinakaran AIADMK

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:“எங்களது எம்எல்ஏவாக இருந்தவர், அமமுக-அதிமுக கூட்டணியில் இருந்த நிர்வாகிகளின் உழைப்பால் மக்கள் ஓட்டு போட்டது குக்கர் சின்னத்திற்குத்தான். ஒரு எம்எல்ஏவால் குதிரை பேரம் வரவில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? உறுதியாக அவரை அமைச்சராக்கினால் நிச்சயம் குதிரை பேரம் வரும்.

அதுபோல அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதிமுக ஊழல் கட்சி என்று சொன்ன விஜய், பாஜக கூட்டணியிலும் மற்ற சில கட்சிகளுடனும் சேர்ந்திருக்கிறார். அதிமுக என்ற பெயரைக் கூட சொல்லாமல் பாஜக கூட்டணியில் உள்ள மற்றும் சிலர் என மிகவும் இளக்காரமாகப் பேசினார்.

ADVERTISEMENT

இன்றைக்கு நமது நண்பர்கள் எத்தனையோ மனவருத்தம் இருந்தாலும், அவர்கள் விஜயை ஆதரிப்பது அறம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? அம்மாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். ஆனால் நமது கட்சியை அழிக்க நினைக்கும் தவெகவை ஆதரிப்பது எப்படி நியாயமாகும்?

பாஜக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். மற்றொரு தேர்தல் வந்துவிடக் கூடாது, அதைத் தமிழகம் தாங்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். மேலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். அதற்காக நாங்கள் போய் முட்டுக்கொடுப்போம் என்றோ, அமைச்சர் பதவிக்காக அங்கு போய்ச் சேர்ந்து புளங்காகிதம் அடைவோம் என்றோ சொல்வது ஜனநாயகத்தின் தர்மத்திற்கு எதிரானது.

ADVERTISEMENT

சட்டப்படி வேண்டுமானால் காங்கிரஸின் ஐந்து எம்எல்ஏக்கள் போவது சரியாக இருக்கலாம். மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் அந்த ஐந்து தொகுதியிலும் மன்னார்குடியில் தவெகவிற்கும் ஓட்டு போட்டிருக்கலாமே?

நீங்கள் அவர்களுக்கு அமைச்சரவை பதவி கொடுத்தால் உறுதியாக சிபிஐ விசாரணைக்கு வரும். இந்த ஆட்சி கஷ்டகாலம்தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், விசிகவோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ எவ்வளவு நாள் தாங்கிப் பிடிப்பார்கள்? ஆறு மாதம் தாங்குவார்களா? அதனால் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் என்பது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.”

ADVERTISEMENT

தவெகவை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் சட்டம் தெரியும். அவசரப்பட்டு, கோபப்பட்டு எடுக்கும் முடிவு அவர்களுக்கும் விபரீதமாக முடியும். “ ஒரு அரசியல் கட்சியின் தலைமைதான் சட்டமன்றக் குழு நிர்வாகிகளை நியமிக்க முடியும். பழனிசாமி நியமித்திருக்கும் கொறடா தான் நாளை சட்டமன்றத்தில் நிலைக்க முடியும். ஏற்கனவே பல தீர்ப்புகள் உள்ளன. அண்மையில் மகாராஷ்டிரா வழக்கில் வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் உள்ளது. இதைத் தாண்டி அவர்கள் எந்த கோர்ட்டுக்குப் போகப் போகிறார்கள்?

சபாநாயகர் எவ்வளவு நாள் காலம் தாழ்த்த முடியும்? அதற்கும் ஒரு வரம்பு உள்ளது. இபிஎஸ் தரப்பில் நீதிமன்றம் சென்றால் இதெல்லாம் வெளிச்சமாகிவிடும். அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டால் உறுதியாக சிபு சோரன் வழக்கு போல அது வந்துவிடும். இது பெரிய குழப்பத்தைத்தான் உருவாக்கியுள்ளது. மக்கள் குழப்பமான தீர்ப்பை தமிழகத்தில் கொடுத்ததால் இந்தக் குழப்பங்கள் உள்ளன. வருங்காலத்திலாவது யாருக்கேனும் அறுதிப் பெரும்பான்மை கொடுத்தால் தான் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது.

இந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அவர்கள் இன்ஸ்டாகிராமிலேயே ஆட்சி நடத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். ரீலிலேயே ஆட்சி நடத்த முடியாது. ரீலைப் பார்த்து வாக்களித்த மக்கள், ரியலாகப் பார்க்கும்போது எல்லாவற்றையும் புரிந்துகொள்வார்கள்.

அதனால்தான் சொல்கிறேன் — அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

தவெக அதிமுகவை அழிக்கப் பார்க்கிறது. அதில் சிலர் தங்கள் பதவிக்காகவோ, தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, கொள்ளிக்கட்டையை எடுத்து நம் தலையில் சொரிந்துகொள்வது போலத்தான் முடியும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணன் செங்கோட்டையன் அம்மாவின் படத்தைப் பையில் வைத்துக்கொண்டு, தவெகவிற்கு ஒரு ஏஜெண்ட் போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து, “அம்மாவின் ஆத்மா மன்னிக்காது, தண்டனை கொடுக்கும்” என்று சொல்வது 100 சதவிகிதம் தவறு. இவர்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் தவெகவில் நின்று அமைச்சராகி உள்ளார். அதெல்லாம் வேறு.

அம்மாவின் படத்தை பையில் வைத்துக்கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு குரோத மனத்துடன் வன்மத்துடன் அம்மாவின் தொண்டர்களைப் பேரம் பேசி ஏமாற்றி வருகிறார். அதில் ஏமாறுபவர்கள் போகட்டும், அவர்கள் எல்லாம் ரோட்டில் நிற்கப் போகிறார்கள்.செங்கோட்டையன் அம்மாவின் படத்தைப் பகிரங்கமாக வைத்துக்கொண்டு அதிமுகவையும் அமமுகவையும் அழிக்க நினைக்கிறார். அம்மாவின் ஆத்மா அவரைத்தான் மன்னிக்காது. என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share