அமைச்சு பணியாளரை காலணியால் அடித்தாரா ஆயுதப் படை டிஐஜி விஜயலட்சுமி? அதிகார துஷ்பிரயோகமா? திட்டமிட்ட அவதூறா?

Published On:

| By Mathi

DIG Vijayalakshmi

தமிழக ஆயுதப் படை டிஐஜி விஜயலட்சுமி (DIG Vijayalakshmi), இளநிலை உதயவியாளரை காலணியால் அடித்ததாக கூறப்படும் விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “ சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காவல்துறையின் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் அமைச்சுப்பணியாளர் ஒருவர் மீது டி.ஐ.ஜி விஜயலட்சுமி என்பவர் தனது காலணியை எடுத்து வீசியும், காலணியால் பலமுறை தாக்கியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. காவல்துறை உயர் அதிகாரியின் இந்த சட்டவிரோத மனித உரிமை மீறல் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ADVERTISEMENT

அமைச்சுப் பணியாளர்கள் இ-ஆபிஸ் நடைமுறையில் ஒரு கோப்பை உயர் அதிகாரிகளுக்கு கணிணி வாயிலாக அனுப்பும் போது அதற்கான எண்கள் தரப்படும். அந்த வகையில் அமைச்சுப் பணியாளர் டி.ஐ.ஜி. விஜயலட்சுமிக்கு ஒரு கோப்பை அனுப்பி அதற்கான எண்ணை தந்துள்ளார். அப்போது அந்த எண் தனக்கு ராசியல்லை என்று கூறி தனது காலணியை எடுத்து அமைச்சுப் பணியாளரை பல முறை தாக்கியுள்ளார்.

சட்டம் – ஒழுங்கை பேணிக் காக்க வேண்டிய காவல்துறையின் உயர்அதிகாரி மனித மாண்புகளை அவமதித்தும், சட்டத்திற்கு விரோதமாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை இயக்குநரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ADVERTISEMENT

எனவே, அமைச்சுப் பணியாளரை காலணியால் தாக்கிய டி.ஐ.ஜி. விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அமைச்சுப்பணியாளருக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.

அவதூறு பரப்பும் பணியாளர்கள்- ஜான் பாண்டியன்

இதனை மறுத்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், முதல்வர் விஜய்க்கு எழுதிய கடிதம்: சென்னை தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை தலைமையகத்தில் டிஐஜியாக பணியாற்றி வரும் திருமிகு. விஜயலக்ஷ்மி அவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு, ரயில்வே, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி, தனது நேர்மை மற்றும் திறமையின் மூலம் காவல்துறையில் தனித்த முத்திரை பதித்துள்ளார்.

ADVERTISEMENT

தாம் பணியாற்றிய அனைத்து இடங்களிலும், உடன் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அலுவலர்களை மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் அணுகுபவர் என்ற நல்ல பெயரை பெற்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவருடன் பணியாற்றி வரும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு பெண் உயர் அதிகாரியின் மரியாதையையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, டிஐஜி விஜயலக்ஷ்மி அவர்களை குறித்து அவதூறு பரப்பி வரும் அலுவலர்கள் மீது உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பணியாற்றும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய கடமையாகும். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆயுதப்படையில் உயர்பதவியில் சிறப்பாக பணியாற்றி வரும் இந்த பெண் அதிகாரியின் நற்பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், தமிழக அரசு உடனடி மற்றும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share