பருத்தி (Cotton) இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) எழுதிய கடிதம் சர்ச்சையாகி இருக்கிறது.
பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடந்த 14-ந் தேதி தமிழக முதல்வர் விஜய் கடிதம் அனுப்பி இருந்தார்.

முதல்வர் விஜய்யின் இந்த கடிதத்துக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
விஜய் கடிதத்தால் என்ன விளைவு?
இத்தகைய முடிவால் உள்நாட்டுப் பருத்தியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, பருத்தி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தச் சூழ்நிலையில், பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதலாமா?
பருத்தி இறக்குமதி விவகாரத்தில் என்ன நடந்தது?
கடந்த 2025 செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்திருந்தது. பின்னர், அதனை 2025 டிசம்பர் 31 வரை காலநீட்டிப்பும் செய்தது. ஒன்றிய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தபோதே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஒன்றிய பாஜக அரசு தனது முடிவைக் கைவிட்டு, இறக்குமதி பருத்திக்கு மீண்டும் வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இறக்குமதி பருத்திக்கான வரி ரத்து செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 4.13 மில்லியன் டன் பருத்தியை இந்தியா இறக்குமதி செய்தது. இதன் காரணமாக, உள்நாட்டில் ஒரு குவிண்டால் பருத்தியின் விலை 1,200 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்தது. இதனால் இந்திய பருத்தி விவசாயிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்து நஷ்டத்திற்குள்ளாகினர். குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில், நஷ்டம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் நிகழ்ந்தது.
குவிண்டாலுக்கு ரூ.1,200 வரை நஷ்டம்
ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான (MSP) ஒரு குவிண்டாலுக்கு 7,120 ரூபாய் என்பது தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, ஒரு குவிண்டால் பருத்தி 5,800 ரூபாய் முதல் 6,200 ரூபாய் வரை மட்டுமே தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, தமிழகப் பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர்.
பருத்தி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா?
கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
கடந்த ஆண்டின் கசப்பான அனுபவம் கண்முன்னே இருக்கும் நிலையில், நடப்பு 2026 ஆம் ஆண்டிலும் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் விஜய், ஒன்றிய பாஜக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாகும். எனவே, பருத்தி விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
